.
சற்று முன் :

 

Advertisement

டிசம்பர் 31–ந் தேதியுடன் முடிவுக்கு வரும் ரேஷன் அட்டைகள் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு ஜெயலலிதா உத்தரவு

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சென்னை,

இந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதியுடன் முடிவுக்கு வரும் ரேஷன் அட்டைகளின் தகுதி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ஆய்வு கூட்டம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோருடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் 20–ந் தேதி (நேற்று) உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்தில் பொது விநியோக திட்ட செயல்பாடுகள், எதிர் வரும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் முன்நகர்வு மற்றும் சம்பா பருவ நெல் கொள்முதலுக்கான ஆயத்தப்பணிகள் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது அமைச்சர் காமராஜ் பேசியதாவது:–

புளி விலை கட்டுப்பாடு

வெளிச்சந்தையில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது செயல்பட்டு வரும் 279 அங்காடிகள் மூலம் 64 ஆயிரத்து 100 குவிண்டால் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெளிச்சந்தையில் புளி, மிளகாய் போன்ற பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கி, கடந்த ஆண்டு இந்த பொருள்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நடப்பு ஆண்டில் புளி விலையை கட்டுப்படுத்த ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உற்பத்தி மையங்களிலிருந்து புளியை கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அமுதம் சிறப்பங்காடிகள் மற்றும் கூட்டுறவு சில்லரை விற்பனை அங்காடிகள் மூலமாக கொள்முதல் விலைக்கே அரசு விற்பனை செய்து வருகிறது.

நியாய விலை அங்காடிகளுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் உரிய தரத்துடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். தரமற்ற பொருள்கள் எதுவும் காணப்பட்டால் அவற்றை மண்டல மேலாளர்கள், மாவட்ட அலுவலர்கள் ஆகியோர் உள்ளிட்ட ஆய்வு அலுவலர்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யாமல் கிடங்குகளுக்கே திருப்பி அனுப்பி தரமான பொருள்கள் மட்டுமே அங்காடிகளில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பண்டிகை கால வழங்கல்

எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு புழுங்கலரிசி, பச்சரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகள், பாமாயில் ஆகியவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவ்வித விடுதலுமின்றி வழங்கப்பட வேண்டும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி 1.6.11 முதல் 30.11.13 வரை, 8 லட்சத்து 56 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் அட்டைகள் தாமதம்

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய அட்டைகள் உரிய விசாரணைக்கு பின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்ட குடும்ப அட்டைகளின் புழங்கு காலம் இம்மாத கடைசியில் முடிவடைகிறது.

தற்போது உடற்கூறு முறையிலான தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு பதிவுகளின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் அட்டைகள்) வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை பதிவாளரின் கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்து, தகவல் தொகுப்பினை பெற காலதாமதமாகும் என்பதால் மின்னணு குடும்ப அட்டை 2014–15–ல் தான் வழங்க முடியும் என கருதப்படுகிறது.

ஓராண்டுக்கு ரேஷன் அட்டை நீட்டிப்பு

எனவே 31.12.2013 அன்றுடன் முடிவடைய உள்ள புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.01.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

எனவே தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் 2014–ம் ஆண்டுக்கும் உள்தாள் ஒட்டப்பட்டிருப்பதால், இதனையே பயன்படுத்திக்கொண்டு அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள் பங்கேற்பு

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அரசு செயலர் எம்.பி.நிர்மலா, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன், உணவுப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் கே.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் எம்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பெ.சீத்தாராமன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read