Daily Thanthi World news | Tamil News | Tamil Newspaper | Online Tamil News Jhodhidam Details
home
Rasi Image
இன்றைய ராசி பலன்கள்
Up

வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத்துணை வழியே
மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு.

 

வார பலன்கள்
Up

13.1.2017 முதல் 19.1.2017 வரை

எதிலும் கவனமாக முடிவெடுக்கும்
மீன ராசி அன்பர்களே!

வியாழன் இரவு 7 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால், வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகம்: உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். முடிந்து விடும் என்று எண்ணிய காரியம் தள்ளிப் போகும். அவசர வேலைக்காக சிலர் வெளியூக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

தொழில்: சொந்தத்தொழில் செய்பவர்கள், எதிர்பாராத ஒரு காரியத்துக்காக அலைச்சலைச் சந்திக்கலாம். புதிய வருவாய்க்கு அடித்தளம் அமைப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த கடன் பாக்கிகள் வருவது தள்ளிப் போகலாம். மூலப்பொருட்களை வாங்கி வைப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரிகள் லாபம் பெறுவர். புதிய நிறுவனங்களின் பங்கு வரவினால் நல்ல மாற்றத்தைச் சந்திக்க நேரும். அன்றாட நிலவரங் களை கவனிப்பது நல்லது.

கலை: கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். சகக்கலைஞர்களின் ஒத்துழைப்பால் புதிய மாற்றங்கள் வந்து சேரலாம்.

குடும்பம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உருவாகி தொல்லை கொடுத்தாலும் அமைதியாக நடைபெறும். சுபகாரியங்கள் நடைபெற நூதன முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வார வழிபாடு:– ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபாடு செய்தால் தடைகள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,5,9
அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:– ஞாயிறு

தமிழ் மாத ஜோதிடம்
Up
தை மாத ராசி பலன்கள்

14.1.2017 முதல் 12.2.2017 வரை

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

அலைச்சல் அதிகரிக்கும் நேரம்!

எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருக்கும் மீன ராசி அன்பர்களே!

உங்களின் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பா£க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் குரு பகவான் அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறார். எனவே திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு திகைக்க வைக்கலாம். விரயங்கள் கூடுதலாக இருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க வில்லையே என்று ஒவ்வொரு நாளும் அங்கலாய்த்துக் கொள்வீர்கள். களைப்பின்றி உழைத்தாலும் காசு பணம் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காது.

குருவின் வக்ர இயக்கம் சில மாதங்கள் வரை உள்ளன. அதுவரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிறரை விமர்சனம் செய்வதன் மூலம் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடலாம். 24 மணி நேரமும் விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் எதையும் சமாளிக்க இயலும்.

மாதத் தொடக்கத்தில் 9–ல் சனி இருக்கிறார். எனவே பெற்றோர் வழியில் மனக்கசப்புகள் ஏற்படலாம். வாகனப் பழுது களால் மன வாட்டங்கள் உருவாகலாம். புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் தாமதங்கள் ஏற்படலாம். வங்கிகளில் சலுகைகளை எதிர்பர்த்துக் காத்திருக்க நேரிடும். விரய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன.

எனவே உடன்பிறப்புகள் வழியிலும் ஏதேனும் விரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களின் இல்லத்தில் நடைபெறும் மங்கள விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரர்கள் செய்யும் தொழிலுக்கு பண உதவி செய்வீர்கள். இதுபோன்ற காலங்களில் சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. குறிப்பாக திசைமாறிய தென்முகக் கடவுள் வழிபாடு நல்ல மாற்றங்களை வழங்கும். பிரம்மபுரீஸ்வரர் வழிபாடும் உங்கள் பிரச்சினைகளுக்கு வடிகாலாக அமையும்.

மீன செவ்வாயின் சஞ்சாரம்!

ஜனவரி 16–ந் தேதி மீனத்திற்கு செவ்வாய் வருகிறார். தனாதிபதியாகவும், 9–ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், உங்கள் ராசியில் சஞ்சரிப்பது யோகம்தான். மோதல்கள் அகலும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆதரவுக் கரம் நீட்ட அருகில் இருக்கும் வங்கிகள் அனுகூலமாக இருக்கும். சோதனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். தந்தை வழி ஒத்துழைப்போடு தகுந்த முன்னேற்றம் காண்பீர்கள்.

அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைக்கும் நேரம்!

ஜனவரி 16–ந் தேதி குரு வக்ர இயக்கத்தில் துலாம் ராசிக்குச் செல்கிறார். அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் குருவால் பிரச்சினைகள் உருவாகத்தான் செய்யும். இருப்பினும் உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும், தெய்வ வழிபாடும் அதை ஓரளவேனும் முறியடித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்பட்டு கவலையை அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு பாடுபட்டாலும் மேலதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஓரிரு மாதங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பது தான் நல்லது.

மீன சுக்ரனின் சஞ்சாரம்!

ஜனவரி 27–ந் தேதி மீன ராசியில் சுக்ரன் உச்சம் பெறப்போகிறார். அஷ்டமாதிபதி உச்சம் பெறுவதால் சிலரை நம்பி ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பெண் வழிப் பிரச்சினைகள் தலை தூக்கலாம். ஊர் மாற்றங்கள், வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. உறவினர்களின் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மகர புதனின் சஞ்சாரம்!

ஜனவரி 30–ந் தேதி மகர ராசிக்கு, புதன் செல்கிறார். அங்கு சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். 4,7–க்கு அதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்பொழுது, வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வரவு கூடும். தாய் வழி உறவினர்களாலும் தன வரவு கிடைக்கும்.

இம்மாதம் வியாழன் தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. சதுர்த்தி விரதம் சங்கடங்களைப் போக்கும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

குடும்பச்சுமை கூடும் மாதம் இது. குடும்பத்தில் உள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலைச்சல் கூடும். ஆதாயம் குறையும். கணவன்–மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டால் பிரச்சினைகள் உருவாகலாம். சகோதர வழியில் உதவி கிடைக்கும். வாகனங்கள் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், மேலதிகாரிகளின் ஆதவைப் பெற முயற்சிப்பது நல்லது.   பிள்ளைகளால் விரயம் ஏற்படும். பொது நலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் திடீர் மாற்றம் ஏற்படலாம். வியாழக்கிழமை விரதமும், தென்முகக் கடவுகள் வழி பாடும் நன்மையை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

ஜனவரி: 14,22,23,24,28,29 பிப்ரவரி: 3,4,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– சிவப்பு
ஆண்டு பலன்
Up
01-01-2017 முதல் 31-12-2017  வரை

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

சிந்தித்து  செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்!

பேச்சுத் திறனால் மற்றவர் மனதில் இடம்பிடிக்கும் மீன ராசி அன்பர்களே!

உதவும் மனமும், ஒப்பற்ற குணமும் உங்களுக்கு உண்டு. முதலில் ஒரு காரியத்தை செய்யத் தயங்குவீர்கள். பின்பு பல பேரிடம் யோசனை கேட்டு அதை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். உங்களிடம் பொறுமை இருக்குமே தவிர, பொறாமை இருக்காது. இக்கட்டான காரியங்களைக் கூட எளிதில் சமாளிப்பீர்கள்.

உங்கள் ராசிநாதன் குருபகவான் ஆவார். அவருக்கு பகைக் கிரகமாக விளங்குபவர் களத்திரகாரகன் சுக்ரன். எதிர், எதிர் துருவங்களாக இரண்டும் அமைந்ததால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, முக்கியப் பொருத்தங்கள் இருக்கிறதா? என்று பார்த்து செய்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருந்தாலும், குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையே உருவாகிறது. பிறக்கும் புத்தாண்டு சூரியனுக்குரிய ஆண்டாக இருப்பதால், உங்கள் சுய ஜாதகத்தில் சூரியனுக்குரிய பாதசார பலமறிந்து காரியங்களைச் செய்தால் வெற்றி கிடைக்கும்.

புத்தாண்டின் தொடக்கம்

புத்தாண்டு தொடங்கும் பொழுது குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. குருபகவான் புத்தாண்டின் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து பரிபூரண பார்வையை உங்கள் ராசியின் மீது பதிப்பதால், ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகமாகவே நடைபெறப் போகிறது. பிரபலஸ்தர்களின் உதவி கிடைக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் 6–ல் ராகுவும், 12–ல் கேதுவும் சஞ்சரிக் கிறார்கள். கேதுவுடன் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். 9–ல் சஞ்சரிக்கும் சனியோடு புதன் கூடியிருக்கிறார். 10–ல் சூரியனும், 11–ல் சந்திரனும் அமர ஆண்டு தொடங்குகிறது.

புத்தாண்டில் செவ்வாய்–சனி பரிவர்த்தனையும் குரு–சந்திர யோகமும் இருக்கிறது. உங்கள் ராசிநாதன் யோகாதிபதியாக உலா வருவதால் தேகநலன் சீராகும். செல்வ வளமும் பெருகும்.

இந்த ஆண்டு ராகு, கேது, குரு, சனி ஆகிய பெரும் கிரகங்கள் எல்லாம் பெயர்ச்சியாகப் போகின்றன. அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைக்கப்போகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு விழிப்புணர்ச்சி கூடுதலாக இருந்தால் தான், வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும். ராகு 5–ம் இடத்திற்கும், கேது லாப ஸ்தானத்திற்கும் செல்லப் போகிறார். எனவே நன்மையும், தீமையும் வரும். பெயர்ச்சிக்கு முன்னதாக தாராபலம் பெற்ற நாளில் நாகசாந்திப் பரிகாரங் களைச் செய்து கொள்வது நல்லது.

அடுத்து வரும் சனிப்பெயர்ச்சி அற்புதமானது. தொழில் வளர்ச்சி சிறப்பாக அமைய உறுதுணைபுரியப் போகிறது. பெரிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்ற பொழுது, உரிய விதத்தில் பரிகாரங்களை மேற்கொண்டால் அரிய பலன்கள் கிடைக்கும்.

ராகு–கேது பெயர்ச்சிக் காலம்

27–7–2017 அன்று ராகு–கேதுக்கள் பெயர்ச்சியாகின்றன. இதுவரை 6–ம் இடமான சூரியன் வீட்டில் சஞ்சரித்த ராகு, இனி 5–ம் இடமான சந்திரன் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் பிரச்சினைகள் உருவாகும். கண்சிமிட்டும் நேரத்தில் கூட எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புனிதப் பயணங்கள்அதிகரிக்கும். பூமிப் பிரச்சினைகள் தலை தூக்கும். பூர்வீகச் சொத்துகளில், முடிவான தீர்மானங்கள் கூட மாற்றப்படலாம். அதிக முயற்சியின் பேரில் காரியங் களில் வெற்றி கிடைக்கும்.

லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சாயாபலம் பெற்ற கேது, சனி வீட்டில் சஞ்சரிக்கிறார். சனி உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரய ஸ்தானாதிபதி யாகவும் விளங்குபவர். எனவே தொழிலால் லாபம் வரும். ஆன்மிகப் பணிக்கென்று ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

கேதுவிற்கு விநாயகரையும், ராகுவிற்கு துர்க்கையையும் வழிபடுவது துயரங்களைப் போக்கும்.

அஷ்டமத்து குருவின் ஆதிக்க காலம்

2.9.2017–ல் உங்கள் ராசிக்கு அஷ்ட மத்தில் குரு அடியெடுத்து வைக்கிறார். 8–ல் குரு வரும்பொழுது எச்சரிக்கை தேவை. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், நாடுமாற்றங்களும் எதிர்பாராமல் வந்து சேரும். பையில் வைத்த பணம் மறுநிமிடமே செலவாகிவிடும். குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தைரியமும், தன்னம்பிக்கையும் தேவை. குடும்பத்தில் மூன்றாம் நபரின் சேர்க்கையால் இடர்பாடுகள் உருவாகலாம்.

குருவின் பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. வரவு–செலவு திருப்திகரமாக இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் அதிக முயற்சி எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மலைபோல் வந்த துயர் பனிபோல் விலக, மலைமேல் இருக்கும் குமரனையும், குருவையும் வழிபாடு செய்ய வேண்டும்.

8–ல் சஞ்சரிக்கும் குரு திட்டமிட்ட காரியத்தை திறம்படச் செய்ய வைக்குமா? என்பது சந்தேகம் தான். பெட்டியில் எவ்வளவு பணம் வைத்தாலும், குடும்பத் தேவைகள் அதிகரித்து கொண்டேயிருக்கும். எந்தவொரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிக்க இயலாது. ஆரோக்கியத் தொல்லைகள் அடிக்கடி வருகிறதே என்று அங்கலாய்த்துக் கொள்வீ£கள்.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கின்றதே என்று வேறு உத்தியோகத்திற்கு செல்ல முயற்சிப்பீர்கள். ஆனால் எங்கு சென்றாலும் இதே கதைதான் நடக்கும். இதுபோன்ற காலங்களில் உங்கள் சுயஜாதகங்களையும் புரட்டிப் பார்த்துக் கொள்வது நல்லது. தெசாபுத்தி பலம் பெற்றிருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

சிவாலயத்திற்குச் சென்று குரு தட்சிணாமூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதன் மூலமும், மஞ்சள் வண்ண வஸ்திரத்தைத் தானம் கொடுப்பதன் மூலமும் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

இதுவரை உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் 16.12.2017–ல் கர்ம ஸ்தானம் என்னும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. தொழில் ஸ்தானம் பலப்படுவதால் தொழில் வளர்ச்சி கூடும். பெய்ர்ச்சிக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னதாகவே நல்ல பலன்கள் உண்டாகும். வன்னி மரத்தடி சனீஸ்வரரை வழிபட்டால் வளம் பெறலாம்.

மந்தன் எனப்படும் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குகிறார். எனவே லாபமும், விரயமும் சரிசமமாக இருக்கும். அதே நேரத்தில் பிறருடைய பெயரில் தொழில் நடத்தினால் அவர்களுக் குரிய பலா பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். அவர்களுக்கு யோகதிசை நடந்தால் தொழிலில் லாபம் குவியும். தோஷமுள்ள கிரகங்களின் திசை நடந்தால் விரயங்கள் கூடும். எனவே குடும்பத்தில் உள்ளவர்களில் தொழிலுக்கு அதிர்ஷ்டம் தரும் ஜாதகம் யாருக்கு இருக்கிறது என்பதை ஆராய்ந்து, அவர்களின் பேரில் தொழிலை மாற்றம் செய்வதோ அல்லது ஏற்று நடத்துவதோ நல்லது.

அக்கறை  செலுத்த  வேண்டிய  வக்ர  காலம்!

சுக்ரன் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 18.4.2017 வரை)  நன்மைகள் ஏற்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பிவந்து சேருவர்.

புதன் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 22.4.2017 வரை) அரசியலில் கொடிகட்டிப் பறப்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.

குரு வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 31.5.2017 வரை) தொழில் மாற்றங் களைப் பற்றிச் சிந்திப்பீர்கள். வளர்ச்சிக்கு மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும்.

சனி வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 6.8.2017 வரை) புதிய நண்பர் களின் தொடர்பால் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டு பயணம் எண்ணியபடியே வந்து சேரும். நீங்கள் எண்ணியதை, உங்கள் நண்பர்கள் எளிதில் முடித்துக் கொடுப்பர். வீடுவாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். பெற்றோர்களின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். சகோதரர்களுடன் இணக்கம் ஏற்படும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

குடும்பத்தில் அமைதி கூடவும், குழப்பங்கள் தீரவும் குரு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள். நெய் விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். பஞ்சம ராகு, 11–ல் கேதுவும் வரப்போவதால் புதுக்கோட்டை மாவட்டம் பில்லமங்கலத்தில், வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள்வழங்கும் பொன்னழகி அம்மனை வழிபட்டு புதிய பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்.

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு!

ஆண்டின் தொடக்கத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரப் போகிறது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க, நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர் வழிப் பிரச்சினைகள் அகலும். உங்கள் சொல்லுக்கு குடும்பத்தினர் மதிப்பு கொடுப்பர். தொழில் தொடங்க நினைக்கும் பொழுது, உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழிலில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதலாகிச் செல்லும் வாய்ப்பு கிட்டும். சர்ப்ப விநாயகர் படத்தை வைத்து வழிபட்டால், நல்ல பலன்களை நாளும் வரவழைத்துக் கொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்
Up
துன்முகி வருட ராசிபலன்கள் 14-4-2016 முதல் 13-4-2017 வரை

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

ஆகஸ்ட் 2-க்கு மேல்  அதிர்ஷ்ட வாய்ப்புகள்  அலைமோதும்!

மற்றவர்கள் மனதைப்  புண்படுத்தாமல் பேசும்  மீன ராசி நேயர்களே!

ன்மத வருடம் முடிந்து துன்முகி வருடம் தொடங்குகின்றது. அடியெடுத்து வைக்கும் புத்தாண்டு படிப்படியாக முன்னேற்றத்தைக் கொடுக்குமா? பணநெருக்கடி அகலுமா? சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடி வருமா? வியாபார விருத்திக்கு வழிவகுத்துக்கொடுக்குமா? ஆரோக்கியத் தொல்லைகள் அகலுமா? என்றெல்லாம் வருடம் பிறக்கும் முன்னாலே மனதில் எண்ணங்கள் பிறந்துவிடும்.
இந்த ஆண்டு சித்திரை மாதப் பிறப்பு பங்குனி 31-ந் தேதி மாலையிலேயே நிகழ்கின்றது.

புதன்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறக் கின்றது. புதன் உங்கள் ராசியைப் பொறுத்தவரை 4, 7-க்கு அதிபதியாவார். திருவாதிரைக்குரிய கிரகம் ராகுவாகும். அந்த ராகு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் குருவோடு கூடி ஆண்டின் தொடக்க நாளில் சஞ்சரிக்கின்றார். மறைந்த ராகு நிறைந்த தனலாபத்தை தரும்.

1, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் ஆவார். அவர் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையும் வழங்க இயலும். எனவே அவர் கடன் சுமை குறைய வழிகாட்டுவார். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

வருடத் தொடக்கத்தில் 12-ல் கேது இருப்பது அவ்வளவு நல்லதல்ல. கூடுதல் விரயங்களை அது கொடுக்கலாம். சுபவிரயங்களைச் செய்யாமல் இருந்தால் வீண் விரயங்களுக்கு ஆளாக நேரிடும்.
வருடத் தொடக்கத்தில் சூரியனும், புதனும் 2-ல் இணைந்திருக்கிறார்கள். இந்த புத ஆதித்ய யோகம் ஒரு பொன்னான யோகமாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டு பழைய வேலைக்கே திரும்பச் செல்வர்.

6-க்குஅதிபதி சூரியன், 7-க்கு அதிபதி புதனோடு இணைந்து சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணையால் வருமானம் வரவேண்டும் அல்லவா? எனவே தம்பதியர் இருவருமே வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்துவிடும்.

செவ்வாய், சனி சேர்க்கை ஒன்றுதான் முரண்பாடான கிரக சேர்க்கையாகும். 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் தன ஸ்தானம், தகப்பனார் ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதியானவர். அவரோடு லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதியான சனி பகவான் இணைகின்றார்.

எனவே திடீர், திடீரென தன விரயங்கள் ஏற்படலாம். திட்டமிடாது வரும் விரயங்களைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அதுமட்டுமல்லாமல் நீண்ட தூரப் பயணங்களும், உத்தியோகத்தில் திடீர் மாற்றங்களும் வருடத்தொடக்கத்திலேயே ஏற்படலாம்.

ஆண்டின் தொடக்கம் முதல்  ஆடி பதினேழு வரை!

வருடத் தொடக்கத்தில் எதிர்ப்பு, வியாதி, கடன் என்பதைப் பற்றி எடுத்துரைக்கும் இடத்தில் உங்களது ராசிநாதன் குரு சஞ்சரிக்கின்றார். எனவே எதிரிகள் விலகுவர். உதிரி வருமானங்கள் வந்து சேரும். காலை முதல் மாலை வரை பயணித்துக்கொண்டே இருப்பீர்கள். கார், வண்டி போன்ற வாகனங்கள் வைத்திருப்பவர்கள்    பழுதுச்செலவால் அவதிப்படுவர். எனவே ஆண்டின் தொடக்கத்தில் பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்குவது உத்தமம்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் குருவின் வக்ர காலத்தில் தாய்நாடு திரும்பும் சூழ்நிலை அமையலாம். நல்ல வேலை போய்விட்டதே என்று கவலைப்பட வேண்டாம். வக்ர குரு உங்களுக்குப் புதிய உத்தியோகத்தை உடனடியாக வழங்க முன்வருவார். சந்திரபலம் நன்றாக இருப்பதால் பெற்றோர் வழி ஆதரவு கூடும். குறிப்பாக தாய்வழி ஒத்துழைப்பும், தனலாபமும் கிடைக்கலாம். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொண்டால் பிரச்சினைகளில்இருந்து தப்பிக்க இயலும்.

தகப்பனார் ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கை பெறுவதால் தந்தையின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
6-ல் ராகுவும், 12-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கம் சற்று மேலோங்கி இருப்பதால் ராகு-கேதுக்களுக்குரிய பிரீதியை முறைப்படி செய்து கொள்வது நல்லது.

ஆடி 18-ல் தேடி வரும் யோகம்!

துன்முகி வருடம் ஆடி மாதம் 18-ந் தேதி (2.8.2016) அன்று கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். இந்தக் குருப்பெயர்ச்சி உங்களைக் குதூகலத்தில் ஆழ்த்தப் போகின்றது. சென்ற ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும், இனிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவும், குருவின் சஞ்சாரம் நன்றாக இருக்கின்றது.

குரு கன்னி ராசியில் சஞ்சரித்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பொன்னும், பொருளும், போற்றுகிற செல்வாக்கும் இன்னும் பெருகும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து வெற்றி காண்பீர்கள்.
வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பூமி யோகம், முதல் பொன்னான யோகங்கள் அனைத்தும் வந்து சேரும் நேரமிது. சாமி துணையும், சார்ந்தவர்களால் நன்மையும் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். திடீர் திடீர் என வரும் செலவுகளை சமாளிக்கும் ஆற்றலும் பிறக்கும். எத்தனை பார்வைகள் இருந்தாலும் குருவின் பார்வைக்கு என்று ஒரு தனி மதிப்பு உண்டு.

சப்தம ஸ்தானத்தில் இருந்து குரு பார்க்கும் பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும், மழலையின் ஓசை கேட்கவும் வழிபிறக்கும். அஞ்சல்வழி அனுகூலம் கிடைக்கும். ஆச்சரியப்படத்தக்க தகவல்களும், அந்நிய தேசத்திலிருந்து வரும் அழைப்புகளும் உங்களைத் திக்குமுக்காட வைக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. திறமை பளிச்சிடும் நேரமிது. திடீர் பொறுப்புகளும் பதவிகளும் கூட ஒருசிலருக்கு கிடைக்கலாம்.

7-ல் குரு சஞ்சரிக்கும் பொழுது எதிர்காலம் இனிமையாக அமையும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வருமானம் திருப்தி தரும். வந்திடும் பகை விலகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருவருள் வழங்கும் குருவைத் தினந்தோறும் வழிபட்டால் பெருமைகள் அனைத்தும் வந்து சேரும்.

குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன் பார்வை பதியும் இடங்கள் புனிதமடைவதால் உடல் ஆரோக்கியம் சீராகும். இதுவரை வாடிக்கையாக இருந்த மருத்துவச்செலவுகள் இனி குறையும். எதிர்பாராத தனவரவால் இதயம் மகிழ்வீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.

'ஜென்மத்தை குருதான் பார்த்தால் சிரமங்கள் அகன்று ஓடும்' என்பர். தொட்டதைத் துலங்க வைப்பவர் குரு பகவான். எனவே மூடிக்கிடந்த தொழிலுக்கு இனி திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் இனி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இனி வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு சுயதொழில் செய்ய முன்வருவர். நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்ள யோகபலம் பெற்ற நாளில் ஆலங்குடி, குருவித்துறை, திட்டை, பட்டமங்கலம் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

'மூன்றினை குருதான் பார்த்தால் முயற்சியில் வெற்றியும் கிட்டும்' என்று சொல்வர். எனவே நீங்கள் எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. சகோதரர்கள் சகாயமாக நடந்து கொள்வர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நீண்ட நாட்களாக பூர்வீக இடத்தில் வீடு கட்ட முடியவில்லையே என்ற கவலை இனி மாறும். நிழல்போலத் தொடர்ந்த கடன்சுமை அகலும்.

'பதினொன்றைக் குருதான் பார்த்தால் பணத்தேவை பூர்த்தியாகும்' என்பர். எனவே இனி பரிசு மழையிலும், பண மழையிலும் நனையும் வாய்ப்பு உண்டு. இளைய சகோதரத்தால் இணக்கம் ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்பு விருத்திக்கும். அந்நிய இனத்தார், மதத்தாரின் ஒத்துழைப்போடு எண்ணிய காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

துன்முகி வருடத்தில் மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் நாடிவரப்போகின்றது. மாலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு மாலை கிடைக்கும். வேலை கிடைக்கவில்லையே என்ற ஏங்கியவர்களுக்கு வேலை கிடைக்கும். இல்லத்தில் ஒற்றுமை பலப்படும். வருமானம் போதுமானதாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். 

வருடத்தொடக்கத்தில் திருப்திகரமாக வாழ்க்கை அமைந்தாலும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குறைவற்ற செல்வமும், குதூகலமும் அதிகரிக்கும். அரசியல் மற்றும் பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் திடீரென வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். வியாழன் தோறும் குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. பவுர்ணமி நாளில் மலை வலம் வந்து ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் நிலையான புகழும், நிம்மதியும் கிடைக்கும். தாய்வழி ஆதரவும் சகோதரர் ஒற்றுமையும் அதிகரிக்கும் ஆண்டு இது.

குரு  மற்றும்  சனியின்  வக்ர  காலங்கள்!

குருவின் வக்ர காலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்தால் சில காரியங்களை விரைவில் செய்துமுடிக்க இயலாது. தொழிலில் புதிய பங்குதாரர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் உருவாகும். நீண்ட தூரத்திற்கு மாறுதல்கள் கிடைத்து நிம்மதி இழக்க நேரிடலாம். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் ஒருசிலர் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடலாம்.

சனியின் வக்ர காலத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  தடைகள் அதிகரிக்கும். கடைதிறப்பு விழாக்களை நடத்திய நீங்கள், வியாபாரம் திருப்தியாக நடைபெறவில்லையே என்று கவலைப்படுவீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் புதியபொறுப்புகள் திடீரென மாற்றப் படலாம். உடல்நலம் சீராக இருந்தால் கூட உற்சாகத்துடன் பணிபுரிய இயலாது. சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.

வளர்ச்சிக்கு  வித்திடும் வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து தென்முகக்கடவுளை இன்முகத்தோடு வழிபட்டு வந்தால் நன்மைகள் வந்து சேரும். குரு கவச பாராயணம் செய்தால் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.
சனிபெயர்ச்சி பலன்கள்
Up
 16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை  (80/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)


ஒன்பதாமிடத்தில்  சனி!   உயர்வுகள்   வந்திடும்  இனி!

வந்த விருந்தினர்களை வரவேற்பால் திணறடிக்கும் மீன ராசி அன்பர்களே!

டமைக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அஷ்டமத்துச் சனி விலகி ஆனந்தமான வாழ்க்கையை இப்பொழுது வழங்கப் போகிறது.

இந்தச் சனிப்பெயர்ச்சியால் மிகமிக நற்பலன்களை பெறும் ராசிகளில் முதன்மையான ராசியாக, உங்கள் ராசிதான் விளங்கப் போகின்றது.

இனி நல்லநேரம் இல்லம் தேடிவரப் போகிறது. ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். மருத்துவச் செலவுகள் குறையும். சீரோடும், சிறப்போடும் வாழ வழிவகுத்துக் கொள்ளப் போகிறீர்கள். செல்வநிலையில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வீண் பழிகளிலிருந்து விலகும் சூழ்நிலை அமையும்.

அரைகுறையாக நின்ற பணி இனி மீதியும் தொடரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்கப் போகிறார்கள். கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். குடியிருக்கும் வீட்டாலும், கட்டிய வீட்டாலும் வந்த பிரச்சினை அகலும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். படிப்படியாக உடல் நலம் சீராகும். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். கொடுக்கல்-வாங்கல்களில் இதுவரை இருந்த ஏமாற்றங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைப்பதற்கு புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

விலகிய சனியை விலகும் நாளிலேயே கும்பிட்டு மகிழ்வது நல்லது. பொதுவாக திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் குளித்து அங்குள்ள காக வாகனச் சனியை வழிபட்டு வந்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களும், சிரமங்களும் அகலும். திருக்கொள்ளிக் காட்டிலுள்ள பொங்கு சனீஸ்வரர் வழிபாட்டையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.
ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து பாதி அருகம்புல்லையும், பாதி வெற்றிலை மாலையையும் இணைத்து அணிவித்து வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வடக்கு நோக்கிய பிள்ளையாரையும், வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரையும் இதுபோன்ற காலங்களில் வழிபட்டால் தடைகற்கள் அகலும்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையறிந்து, நவாம்சத்திலும் சனிபகவான் இருக்கும் இடம், அதைப் பார்க்கும் கிரகம், அதோடு இணைந்த கிரகம் அனைத்தையும் ஆராய்ந்து நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும் தெய்வ வழிபாடுகள்தான் உங்கள் எதிர்காலத்தை இனிமையாக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஒன்பதாமிடத்தில் சனி உலா வரும்பொழுது பொன், பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். புகழ் ஏணியின் உச்சிக்கு செல்வீர்கள். பகை பாராட்டிப் பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் தானாக வந்திணைவர். பொதுவாக போராட்டமான வாழ்க்கை மாறி பூந்தோட்டமான வாழ்க்கை அமையும். எனவே கசந்த காலங்கள் மாறி வசந்த காலங்கள் உருவாக காக வாகனத்தானையும், அனுமனையும் கைகூப்பித் தொழுவது நல்லது.

ஒன்பதாம் இடத்து சனி பொன் பொருள் தருமா?


சனிபகவான், உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் லாபத்தையும், கொடுத்து விரயத்தையும் கொடுப்பதற்கு மூலகாரணமாக இருக்கிறார். நீங்கள் பெற்றோர்களுக்கும், உடன்பிறப்புகளுக்கும் செய்ய வேண்டியதை முறையாக செய்வீர்கள். இழப்புகளை ஈடுசெய்யும் விதத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். இடமாற்றம், ஊர்மாற்றம், நாடுமாற்றம், வாகன மாற்றம், தொழில் மாற்றம் உருவாகும்.

பொதுவாக ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி, பொன் பொருள் வாங்கப் போட்ட திட்டத்தை நிறைவேற்றுவார். மண், பூமி வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே நடைபெற தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வது நல்லது. திருச்சி அருகில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள தலையெழுத்தை மாற்றும் பிரம்ம தேவரையும், அதற்கு அருகில் ஊட்டத்தூரில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் உள்ள பிரளயகால நந்தியையும் காலபைரவரையும் வழிபட்டு உங்கள் கவலைகளை போக்கிக் கொள்ளுங்கள்.

சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் விபரீத ராஜயோக அடிப்படையில், சில நல்ல காரியங்கள் திடீர் திடீர் என நடைபெறும். பொருளாதார நிலை உயரும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோக ஸ்தானம் பலப்படுவதால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல்களும் கிடைக்கும். சனியின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி கூடும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாற்று இனத்தவர்கள் உங்கள் மனதிற்கேற்ற விதத்தில் நடந்து கொள்வார்கள்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குலதெய்வ பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறும். கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் இருந்தவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, சுயதொழில் தொடங்க முன்வருவர். அடிக்கடி பயணங்கள் அதிகரிக்கும்.

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடத்தில் பதிவாகிறது. எனவே ராசியைப் பார்க்கும் குரு யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றியைக் கொடுப்பார். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். கீர்த்தி பெருகும். கெடுதல்கள் மறையும். பணப்பற்றாக்குறை அகலும். 11-ம் இடம் புனிதமடைவதால் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பயணங்களால் பலன் கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து நண்பர்கள் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வருவர். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டு.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. எனவே தொழிலில் எதிர்பாராத இழப்புகள் உருவாகும். எனவே கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். குருவின் பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பார்க்கும் குருவால் குடும்பச் சுமை குறையும். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்போருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது எதிரிகளின் பலம் மேலோங்கியிருக்கும். எதைச் செய்தாலும் யோசித்துச் செய்வது நல்லது. உதிரி வருமானங்கள் குறையலாம். உடனிருப்பவர்களால் கடன்சுமை கூடும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். ஊர்மாற்றச் சிந்தனைகளும், நாடுமாற்றச் சிந்தனைகளும் மேலோங்கும். 12-ல் கேது இருப்பதால் பயணத்தில் விழிப்புணர்ச்சி தேவை. இதுபோன்ற நேரங்களில் ராகு-கேது பிரீதி செய்து கொள்வது நல்லது.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும்,மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். புத்திர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். அதன் எதிர்கால நலன் கருதி ஒரு பெரும் தொகையைச் செலவு செய்யப் போகிறீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் தலைதூக்கும். புதிய முடிவெடுத்து சொத்துக்களை பராமரிக்க ஏற்பாடு செய்வீர்கள். பங்காளிப் பகை மாறும். கேதுவின் ஆதிக்கத்தால் மாற்றுக்கருத்துடையோர் உங்கள் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முன்வருவர். பழைய தொழிலைக் கொடுத்துவிட்டுப் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் அகலும்.

சனியின்  வக்ர  காலம்  பொற்காலமாக  மாற..

ங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது நன்மையையும், தீமையையும் கலந்தே செய்வார். சனி உங்கள் ராசியைப் பொறுத்தவரை லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குகிறார். லாபாதிபதி வக்ரம் பெறுவது நல்லதல்ல. வருமானத் தடைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் வந்தும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற கவலை அதிகரிக்கும். தொழிலில் இழப்பு களையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வங்கிச் சேமிப்பு கரைகிறதே என்ற கவலைப்படுவீர்க்ள். அதே நேரத்தில் விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். விரயத்தைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். இது போன்ற காலங்களில் குருவழிபாடும், சனி வழிபாடும் சஞ்சலங்களைத் தீர்க்கும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

னிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவாலயத்திற்கு சென்று சனிபகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதோடு காகத்திற்கும் சோறு வைப்பது நல்லது. சிறப்பு வழிபாடாக தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று யோகபலம் பெற்ற நாளில் விநாயகர், முருகப்பெருமான், பிரகதீஸ்வரர், அம்பிகை நந்தி எம்பெருமான், தெட்சிணாமூர்த்தி, வாராகி ஆகியவற்றை வழிபட்டு வாருங்கள். நந்தி வழிபாடு நலம் சேர்க்கும். வாராகி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.
குருபெயர்ச்சி பலன்கள்
Up
2-8-2016 முதல் 1-9-2017 வரை

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

ஏழாமிடத்தில் குருபகவான்! எதிலும் இனிமேல் முழுவெற்றி!

சமுதாயத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதிக்கும் மீன ராசி அன்பர்களே!


கிரகங்களின் பூரணமான சுபத்தன்மையை கொண்டிருக்கும் குருபகவானை ராசிநாதனாகப் பெற்றவர்கள் நீங்கள். எனவே இயல்பாகவே உங்களிடம் ஒரு தெய்வீக அம்சம் குடிகொண்டிருக்கும். அதிநுட்பமான அறிவாற்றலைக்கொண்டு ஆலோசனைகளை அள்ளி வழங்குவீர்கள். நல்ல திறமைசாலிகளாக மட்டும் அல்லாமல், ஞாபகசக்தி மிக்கவர்களாகவும் விளங்குவதால் தான், உங்களால் எளிதில் முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ள முடிகிறது. பேருக்காக உழைப்பவர்களுக்கு மத்தியில் ஊருக்காக உழைப்பவர்கள் நீங்கள். நேருக்கு நேர் நின்று நீங்கள் பேசினால் யாருக்கும் ஒரு அன்பு பிறக்கும். எளிமையாகப் பேசுவதோடு மட்டுமல்ல, இனிமையாகவும் பேசி மெல்லிய குரலால் எதிரிகளை கவரும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

ஆன்மிக ஈடுபாடு உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆசாமிகளை விட சாமிகளை நம்புவது மேல் என்று சொல்வீர்கள். நீதி, நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எப்படி யும் வாழலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்பவர்கள் நீங்கள். எல்லா நெளிவு, சுளிவுகளையும் நீங்கள் கற்று வைத்திருப்பதால் யாரைப் பிடித்தால் எந்தக் காரியம் முடியும் என்ற ரகசியத்தைப் பலரும் உங்களிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்வர். உங்கள் ராசிக்குத் தனாதிபதியாக செவ்வாய் விளங்குவதால் செவ்வாயின் பலத்தைப் பொறுத்தே வருமானத்தை நிர்ணயிக்க முடியும். சப்தமாதிபதியாக புதன் விளங்குவதால் புதனின் பலத்தைப் பொறுத்தே வாழ்க்கைத் துணை அமையும். தொழில் ஸ்தானதிபதியாக குரு விளங்குவதாலும், லக்னாதிபதியாக குரு இருப்பதாலும் ஆரோக்கியம், தொழில் முயற்சி, அன்றாடப் பணி, லாபம், கூட்டாளிகளால் நன்மை போன்றவற்றை, உங்கள் ஜாதகத்தில் குரு இருக்கும் நிலையைப் பொறுத்தே அறிந்து கொள்ள முடியும்.

எனவே உங்கள் சுய ஜாதகத்தைப் புரட்டிப் பாருங்கள். மேற்கண்ட மூன்று கிரகங்களும் பலன் தரும் விதத்தில் இருந்தால் யோகங்கள் வந்து கொண்டேயிருக்கும். மேற்கண்ட கிரகங்கள் பொருத்தமற்ற நிலையில் இருந்தால் பரிகாரங்களின் மூலமே பலன்களைப் பெற இயலும். அதே நேரத்தில் தற்சமயம் பெயர்ச்சியாகப் போகும் குருபகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கப்போகிறார். இதனால் உங்களுக்கு கோடி நன்மை கிடைக்கப் போகிறது.

ஆறில் ராகு நின்று, குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் செயல்படும். அந்த அமைப்பு கோச்சாரத்தில் தற்சமயம் உங்களுக்கு உருவாகி இருக்கிறது. எட்டு லட்சுமிகளும் இந்த நேரத்தில் இல்லத்தில் வாசம் செய்து கொட்டும் பணமழையில் நனைய வேண்டுமானால் ராகுவையும், குருவையும் குருப்பெயர்ச்சியானதும் ஓரிரு மாதங்களுக்குள் கொண்டாடி மகிழ வேண்டும். எனவே, குரு பிரீதியும், ராகு–கேது பிரீதியும் அனுகூலமான நாளில் சிறப்பு ஸ்தலங்களில் செய்வது நல்லது.

வந்து விட்டது குருப்பெயர்ச்சி!

ஆடி 18 முதல் (2.8.2016) தேடி வரப்போகிறது யோகம்!. கூடி வரப் போகின்றது லாபம்! நாடிவரப்போகின்றது நல்லவர்களின் நட்பு! ஓடி ஒளியப் போகின்றது துரத்தி வந்த துயரங்கள். சப்தம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கப் போகும் குரு அற்புதமான பலன்களை அள்ளி வழங்கும் என்பதால் தாமதங்கள் அகலும். நாமகளும், பூமகளும் நல்லருள் கொடுக்க உங்கள் இல்லம் தேடி வருவர்.

பெயர்ச்சியாகும் குரு 7–ம் இடத்தில் சஞ்சரிப்பதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். களத்திர ஸ்தானம் புனிதமடைவதால் இதுவரை வந்த வரன் களைவிட இனிவரும் வரன்கள் சிறப்பானதாகவும், மனதிற்கு பிடித்தமாகவும் இருக்கும். ஒருசிலருக்கு விட்டுப்போன வரன்களே மீண்டும் வரலாம்.

இதுவரை உங்களை உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். பகை மாறி பாசம் காட்டுவர். தங்க நகைகள் வாங்க வில்லையே, நாளும் சாப்பாட்டு செலவிலேயே சகல பணமும் செலவாகின்றதே என்று அவதிப்பட்டவர் களுக்கு, திருப்திகரமாக வருமானம் அமையப் போகிறது.

பூமி வாங்குவீர்கள், புதிய வீடு வாங்குவீர்கள். பொன், பொருள் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை விருப்பம் போல் வாங்கிச் சேமிப்பீர்கள். கடல் தாண்டும் முயற்சி கைகூடும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். மருத்துவம் பார்த்தும் சரியில்லாமல் இருந்த உடல் நலம், இப்போது மருத்துவம் இன்றி, உணவு கட்டுப்பாட்டிலேயே  சீராகும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து சேருவர். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடி வரலாம். விலகி இருந்தவர்கள் விவகாரம் தீர்ந்து, இனி ஒன்றாக வந்திணையும் வாய்ப்பு உண்டு. இடையூறுகளைத் தகர்த்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் இந்த குருப்பெயர்ச்சி அமைந்துள்ளது.     

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!


நவக்கிரகங்களில் நல்ல கிரகம் என்றும், பார்வையால் பலன்களை அள்ளி வழங்கும் கிரகம் என்றும் சொல்லப்படும் குருபகவான், ஏழாமிடத்தில் இருந்துகொண்டு 1,3,11 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே உங்கள் ராசி மற்றும் சகோதர, சகாய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய மூன்று இடங்களும் புனிதமடைகிறது. குருவின் பார்வை பதியும் இடங்களெல்லாம் நன்மையை வழங்கும். உள்ளம் மகிழும் சம்பவம் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கும். அச்சம் இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பது, குருவின் பார்வை ஒன்றுதான்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கவலைகள் விலகும். இழந்தவைகளை மீட்டுக் கொள்வீர்கள். உடன்பிறப்புகள் முதல் உடன் இருப்பவர்கள் வரை உங்களுக்கு ஆதரவு கொடுப்பர். மூடிக்  கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்திப் பார்ப்பீர்கள். கடன்கள்  வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, தொழில் செய்ய முன்வருவர். திசாபுத்தி பலமிழந்தவர்கள் உத்தியோகத்திலேயே நீடித்தாலும் கூட, குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டுத் தொழில் செய்ய முன்வருவர். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும்.

குருபகவான், சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏற நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். தடைகள் அகலும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய பொறுப்புகளும், அதிகாரத்துவ யோகமும் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். 

குரு பகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிதி நிலை உயரும். நிர்வாகத் திறன் கூடும். திட்டமிட்டுச் சில காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத் தகராறுகள் மாறும். பூர்வீக சொத்துக்களில்இருந்த பிரச்சினைகள் விலகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

குருபகவான், செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– வருமானம் இருமடங்காக உயரும். வாங்கிப் போட்ட சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சகோதரர்கள் இணைந்து செயல்பட்டு இதயம் மகிழும் விதம் நடந்து கொள்வர். தேக ஆரோக் கியம் சீராகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வழக்குகள் சாதகமாகும்.

மங்கையருக்கான  மகத்தான  பலன்கள்!


மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு மிகச் சிறப்பான நேரம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்த தம்பதியர்களுக்கு அது கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தள்ளிப் போன காரியங்கள் தானாக நடைபெறும். தைரியமாக முடிவெடுத்து தடைகளை அகற்றிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பெயரிலேயே வீடு வாங்கச் சம்மதிப்பர். புகுந்த வீட்டில் புகழ்கொடி நாட்டுவீர்கள். பிறந்த வீட்டிற்குப் பெருமை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்த இலாகா மாற்றங்களும் வந்து சேரும். அரசியலில் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாழக்கிழமை குருபகவானை வழிபடுவதோடு, சுய ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடுசெய்யுங்கள்.

அக்கறை  செலுத்த  வேண்டிய  வக்ர  காலம்!

இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாகவும் துலாம் ராசிக்குச் செல்கிறார். இந்த அதிசார குரு உங்களுக்கு அஷ்டமத்தில் வருவதால் திடீர் மாற்றங்கள் உருவாகும். திடீர் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். குடும்பச்சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும். குருவின் வக்ர காலத்தில் எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாது. திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லலாம். பணியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். வீண் விரயங்களால் மனக்குழப்பம் ஏற்படும். தொழிலுக்கு போதுமான மூலதனம் இல்லையே என்று கவலைப்படுவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

உங்கள் ராசிநாதன் குரு என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, பவுர்ணமி தோறும் மலைவலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவது  நல்லது.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
Up
08-01-2016 முதல் 27-07-2017 வரை

மீனம்

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

ராகு  வருமிடம்  ஆறாகும்!
நாளும்  யோகம்  தேடி வரும்!


கெட்டிக்காரர்களாக இருந்தாலும் தவறு செய்தவர்களைத் தட்டிக்கேட்கும் மீன ராசி நேயர்களே!


உங்கள் ராசிநாதன் குரு ‘புத்திரகாரகன்’ என்றும், ‘பொன்னவன்’ என்றும் வர்ணிக்கப்படுகிறார். மனதில் பட்டதை மறைக்காமல்  சொல்பவர்கள் நீங்கள். மற்றவர்களுக்கு  வலியச் சென்று உதவுகிற எண்ணம் உங்களுக்கு உண்டு. பேச்சாற்றல் மிக்க நீங்கள் எதிரிகளைக்கூட நண்பர்களாக மாற்றிவிடுவீர்கள்.

ராசியில் கடைசி ராசியாக இருந்தாலும், வளர்ச்சியில் முதல் ராசியாகக் காட்சியளிப்பீர்கள். பண பலத்தால் மற்றவர்கள் சாதிக்க முடியாததை, நீங்கள் பக்கபலமாக இருக்கும் நண்பர்  களால் சாதித்துக் காட்டுவீர்கள். நாகரிகப் பொருட்களின் மீது மோகம் கொள்வீர்கள்.

எந்த ஒரு செயலுக்கும் காரணம் உண்டு என்று சொல்லும் நீங்கள், அரசியல்வாதிகளின் நட்பை அதிகம் பெற்றிருப்பீர்கள். வாகனங்களை அடிக்கடி மாற்றம் செய்வீர்கள். உறுதியான மனமே உங்கள் மூலதனமாக இருப்பதால் இறுதியாக நீங்கள் எடுக்கும் முடிவே எல்லோரும் ஒத்துக்கொள்வதாக இருக்கும்.

அஷ்ட லட்சுமி யோகம் தரும் ஆறாமிடத்து ராகு!
அலைச்சலைக் கூட்டும் பனிரெண்டாமிடத்து கேது!


இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளிப் பயணத்தில்  8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிவகுத்துக் கொடுக்கப் போகிறார்கள். ஜென்ம கேது விலகுவது  என்பது யோகம் தான். பாம்பு கிரகங்கள் விலகுவதால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நடைபெறாத செயல்பாடுகள் யாவும் இப்பொழுது துரிதமாக நடைபெறப்போகின்றது.

ஆனால் அதற்கு அடித்தளமாக யோகமான நாளில் சர்ப்ப சாந்தியை செய்து கொள்ள வேண்டியது அவசிய மாகும். அதிலும் ராகு 6–ல் வந்து அஷ்ட லட்சுமி யோகத்தை வழங்கப் போவதால் சிறப்புப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் செல்வ வளத்தை மேலும் பெருக்கிக் கொள்ள இயலும். எட்டு வகை லட்சுமியின் அருளும் உங்கள் இல்லத்திற்கு வந்து சேரப்   போகின்றது.

பண வரவு பெருகும். சேமிப்பு உயரும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும். ஒருசிலர் பழைய தொழிலை மூடிவிட்டுப் புதிய தொழில் தொடங்க முயற்சிப்பர். அந்த முயற்சியும் கைகூடும். பல வருடங்களாக பதவி உயர்வு கிடைக்காமல் ஏக்கப்பெருமூச்சு   விட்ட உத்தியோகஸ்தர்களுக்கு  இப்பொழுது ஆச்சரியப்படும் விதத்தில் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது.

உயர் அதிகாரிகளின் தொல்லைகளை தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. மேலதிகாரிகள் மாற்றலாகிச் செல்வர். உங்களுக்குரிய வேலை உறுதியாகும்.

பொதுவாக எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடம் ஆறாமிடாகும். அந்த இடத்தில் வலிமையான கிரகமான பாம்புக் கிரகங்கள் சஞ்சரித்து நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் குருவும் கூடியிருந்தால் எதிரிகள் உதிரிகளாவர். எல்லோரும் இணைந்து செயல்படுவர். மனக் கசப்புகள் மாறும். உற்றார், உறவினர்பகை மறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பொருளாதார நிலை உயரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

நீண்ட நாட்களாக உடலில் இணைந்திருந்த நோய்கள், உட்கொண்ட மருந்தாலும் குணமாகாதிருக்கலாம். இனி சாதாரண மருத்துவத்திலேயே நோய்கள் சரியாகிவிடும். சக பணியாளர்   களால் ஏற்பட்ட பிரச்சினை மாறும். கொடுத்த கடன் வசூலாகவில்லையே, வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர்கள் இப்பொழுது நிம்மதி காண்பர். வாங்கல் – கொடுக்கல்களில் இருந்த பிரச்சினை தீரும்.

பயணங்களால் பலன் கொடுக்கும் பனிரெண்டாமிடத்து கேது!

பனிரெண்டாமிடத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது விரயங்களைச் சுபவிரயமாக மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. மனைவி,  மக்கள் வழியில் வேண்டிய ஆடை, ஆபரணங்களை வாங்கிக் கொடுக்கலாம். கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விடலாம். 

பிள்ளைகளின் கல்யாண முயற்சிக்கும் கைகொடுத்து உதவ முன் வருவீர்கள். பழைய வீட்டைப் புதுப்பித்து புதிய வீடாக்கும் பணி  வெற்றி தரும். நாகரிகமான முறையில்  வீடு கட்ட வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

உறவினர்களின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணம் விரும்பும் விதத்தில் அமையும். மனைவி, மக்கள் வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். அரசியல் துறையில் ஈடுபட்டவர்கள் இழந்த  செல்வாக்கை மீண்டும் பெறுவர். மற்றவர்கள் உங்களை நம்பி ஒப்படைத்த முக்கியப் பொறுப்புகளை முடித்துக் கொடுத்து உங்கள்  மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.

அடகு வைத்த நகைகள் அனைத்தையும் மீட்டுக் கொண்டு வந்து அலமாரியை அலங்கரித்து வைப்பீர்கள். அடிமனதில் இருந்த பயம் நீங்கும். வெளிநாட்டுத்தொடர்பும், எண்ணிய விதத்தில் அமையும்.

ராகு–கேதுக்கள் சுய பலம் அற்ற கிரகம் என்பதால் அவை இருக்கும் வீட்டிற்கு அதிபதியின் பலத்தைப் பொறுத்தும், யார் காலில் இருக்கின்றதோ, அவரின் ஆதிபத்யத்தைப் பொறுத்தும் பலன்களை வழங்குவார்.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!


ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாராட்டுக்களும், விருதுகளும் ஒருசிலருக்கு வந்து சேரும். இனத்தார் பகை மாறும். எதிரிகளைப் போல் உங்களைப் பார்த்தவர்கள் கூட இனிமேல்  இனிமையாகப் பேசுவார்கள். பணிகளில் இருந்த தொய்வு அகலும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வருடக்கணக்கில் நடைபெற்ற வழக்கு இப்பொழுது உங்களுக்கு சாதகமாக அமையும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைத்து மகிழ்ச்சியடையப் போகிறீர்கள். உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நேரமிது.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): இக்காலத்தில் எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் இழப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. ஊர் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் அடிக்கடி வரும். தங்கம், வெள்ளி  ஆபரணங்களை அடகு வைத்து செலவிடும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உடன் பிறப்புகளின் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத் தொல்லையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): இக்காலத்தில் வீண் விரயங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில்  ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நம்பிச் செய்த முதலீட்டில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

பாதசாரப்படி கேது தரும் பலன்கள்!

கேது பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை):
ஆரோக்கியம்  சீராகி ஆனந்தப்படுத்தும். ஆதாயம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும். இல்லத்தில் சுபகாரிய நிகழ்வுகள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். ஸ்தல யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகம், தொழிலில் உன்னத நிலை கிடைக்கும். வருமானம்  பெருகுவதால் வாகனம் வாங்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை):
மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். நட்பு பகையாகலாம்.   உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கிக் கிடக்கிறதே என்று தொழில் அதிபர்கள் வருத்தப்படுவர். ஊர் மாற்றம், தொழில்மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். பணப்பொறுப்புகள் சொல்வதன் மூலம்  பிரச்சினைகள் உருவாகலாம்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): இக்காலம் ஒரு இனிய காலமாகும். சவாலான வேலைகளைக் கூட சாதாரணமாக முடித்துவிடுவீர்கள். பெரிய மனிதர்  களின் தொடர்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீடு வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரம் வெற்றி நடைபோடும்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

ஆறில் சஞ்சரிக்கும் ராகு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கவும், 12–ல் சஞ்சரிக்கும் கேது பணத்தேவைகளைப் பூர்த்தி  செய்யவும், வியாழன் தோறும்  விரதமிருந்து தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வதோடு, மேலும் 63 நாயன்மார்களில்  உங்களுக்கு உகந்த நாயன்மாரின் நட்சத்திரத்தன்று விரதமிருந்து வழி பாடுகளை மேற்கொள்ளுங்கள். வருங்காலம் நன்றாக அமையும்.
உங்கள் ராசி பலன்கள்
 • மேஷம்
 • ரிஷபம்
 • மிதுனம்
 • கடகம்
 • சிம்மம்
 • கன்னி
 • துலாம்
 • விருச்சகம்
 • தனுசு
 • மகரம்
 • கும்பம்
 • மீனம்