.
சற்று முன் :
சோனியா காந்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தெலுங்கானா அமைத்திருக்காது ராகுல்
காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலத்தின் கனவுகளையும் நிறைவேற்றும் ஆந்திராவில் ராகுல் பேச்சு
நான் டீ விற்றேன், ஆனால் காங்கிரஸ் போன்று தேசத்தை விற்கவில்லை: நரேந்திர மோடி கடும் தாக்கு
மேற்குவங்க மாநிலம் பிர்புமில் வெடிகுண்டு தயாரித்த இடத்தில் குண்டுவெடிப்பு 2 பேர் பலி

Advertisement

சத்தீஸ்கார் சட்டசபை தேர்தல் ஒரு முன்னோட்டம்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A
ந்திய மாநிலங்களில் மிகவும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சில மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கார். 
 
உத்தரகாண்ட் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் 2000–ம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது மத்திய பிரதேசத்தில் இருந்து தனியாகப் பிரித்தெடுத்து உருவானது தான் சத்தீஸ்கார் மாநிலம். 
 
இந்த மாநிலம் உருவான 2000–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அஜித் ஜோகி முதல்–மந்திரியாக இருந்தார். பிறகு 2003–ல் இருந்து பா.ஜ.க–வின் ஆட்சி ஏற்பட்டு, டாக்டர் ராமன் சிங் முதல்–மந்திரியாக தொடர்ந்து வருகிறார்.
 
இந்த மாநில உருவாக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து எடுத்த முயற்சியால் தான் சத்தீஸ்கார் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றது. 
 
ராய்ப்பூரை தலைநகரமாகக் கொண்ட சத்தீஸ்கார், அளவில் சிறிய மாநிலமாக இருந்தாலும் ஒரு நல்ல அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட மாநிலமாக விளங்கி வருகிறது. 
 
சத்தீஸ்கார் மாநிலம் உருவான அதே ஆண்டு தோன்றிய உத்தரகாண்ட் மாநிலம் ஆறு முதல்–மந்திரிகளை கண்டிருக்கிறது. அதே போல ஜார்க்கண்ட் மாநிலம் ஐந்து முதல்–மந்திரிகளையும், மூன்று முறை ஜனாதிபதி ஆட்சியையும் கண்டது. 
 
இந்த பிரச்சினையெல்லாம் இதுவரை சத்தீஸ்காருக்குக் கிடையாது.
 
பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் தவிர வேறு பெரிய கட்சிகள் எதுவும் இங்கு இல்லை. கோண்ட்வானா கட்சி என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அரசு அதிகாரத்தில் இதுவரை எவ்விதப் பங்கையும் இக்கட்சி வகித்தது இல்லை.
 
பா. ஜனதாவில் இருந்து தனியாகப் பிரிந்த சத்தீஸ்கார் ஸ்வாபிமான் மன்ச் என்ற ஒரு கட்சியும் இருக்கிறது. இவர்களும் இதுவரை தங்களின் கணக்கைத் துவங்கவில்லை.  
 
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலம் இது. தேர்தல் மற்றும் வாக்கு வங்கி அரசியலில் பங்கேற்காவிட்டாலும் இந்த மாநிலத்தின் அரசியலில் பலவகையிலும் மாவோயிஸ்டுகளின் பங்களிப்பும் பாதிப்பும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து வருகிறது.
 
இந்த மாநில சட்டப்பேரவையின் காலக்கெடு 2014 ஜனவரி 4–ந்தேதியுடன் முடிவடைகிறது. 
 
மிக விரைவில் தேர்தல் அறிவிக்கப்போவதாக தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ள ஐந்து மாநிலங்களில் சத்தீஸ்காரும் அடங்கும். 2013 நவம்பர், டிசம்பர் அல்லது 2014 ஜனவரி மாதத்தில் இங்கு தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சரி. இப்போது சத்தீஸ்கார் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகள் பற்றி சில அடிப்படை தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
 
மொத்த இடங்கள் 91
 
தேர்தல் போட்டிக்கான தொகுதிகள் 90.
 
ஒரு இடம் ஆங்கிலோ இந்தியர்களின் நியமனத்துக்காக ஒதுக்கப்பட்டது.
 
கடந்த 2008 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை வருமாறு:– 
 
பாரதீய ஜனதா கட்சி போட்டியிட்ட இடங்கள்  90
 
வெற்றி பெற்ற இடங்கள்  50
 
காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட இடங்கள்  87
 
வெற்றி பெற்ற இடங்கள்  38
 
பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்ட இடங்கள் 90
 
வெற்றி பெற்ற இடங்கள்  2
 
சத்தீஸ்கார் மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகியை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெருமளவில் தோல்வி காண வைத்தவர் தற்போதைய முதல்–மந்திரி டாக்டர் ராமன் சிங்.  
 
ஏற்கனவே ஆட்சியைக் கைவசம் வைத்திருக்கும் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பெருமுயற்சி எடுக்கிறது பா.ஜ.க.
 
தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன்பே புற்றீசல்களாக வெளிக் கிளம்பும் கருத்துக் கணிப்புக்கள் பலவும் தற்போதைய முதல்வர் டாக்டர் ராமன் சிங்குக்கு சாதகமாக உள்ளன.
 
தேசிய அளவில் கட்சிப் பதவிகளையும், மத்திய அரசில் அமைச்சர் பதவியையும் வகித்து வந்த நிலையில் மாநில அரசியலில் தலைமைப் பங்கேற்க கட்சியால் அனுப்பப்பட்டவர் இந்த ஆயுர்வேத டாக்டர் ராமன் சிங். 
 
தொடர்ச்சியாக இரு முறை முதல்–மந்திரி பதவியில் இருந்து வருகிறார் டாக்டர் ராமன் சிங்.
 
நாங்கள் 35 லட்சம் குடும்பங்களுக்கு மலிவு விலையில் அரிசியைக் கொடுத்திருக்கிறோம் என்று பெருமையுடன் கூறுகிறார் டாக்டர் ராமன் சிங்.
 
டாக்டர் ராமன் சிங்கின் எளிமையான அணுகுமுறை அந்த மாநில மக்களால் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. தன்னுடைய மகனையும் மகளையும் இவர் அரசியலில் இருந்து முற்றாக விலக்கி வைத்திருக்கும் பாங்கு அந்த மாநில மக்களால் வெகுவாகப் புகழப்படுகிறது.
 
தீவிரவாத இயக்கங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் டாக்டர் ராமன் சிங். 2005–ம் ஆண்டு ‘சல்வா ஜுடும்’ என்ற காவல் படையை மகேந்திர கர்மா என்னும் காங்கிரஸ் தலைவரின் தலைமையில் உருவாக்கினார். இந்தப் படை மார்க்சிய இயக்கங்களால் குண்டர் படை எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்தப் படை பழங்குடி இளைஞர்கள் மீது மிகவும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. இதற்குப் பழிவாங்கும் விதமாக மாவோயிஸ்டுகள் மாநிலம் முழுதும் ஆங்காங்கு தாக்குதல்களை நடத்தினார்கள். சல்வா ஜூடும் படையின் நிறுவனர் மகேந்திர கர்மா மே 2013–ல் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டார்.
 
சத்தீஸ்கார் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சரண்தாஸ் மஹந்த், எப்பாடு பட்டாவது காங்கிரஸ் கட்சியை அரியணையில் அமரவைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்களில் அதிக வயதானவர்களுக்கும், குறிப்பிடத்தகுந்த அளவில் பங்கேற்பினை நல்காதவர்களுக்கும், ஏதாவது ஒரு வகையில் பெயரைக் கெடுத்துக்கொண்டவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் சீட்டு கிடைக்காது என்று சரண்தாஸ் மஹந்த் ஊடகங்களுக்குத் தெரிவித்து இருக்கிறார்.
 
டாக்டர் ராமன் சிங் அரசுக்கு எதிராகப் பல ஊழல் குற்றச்சாட்டுக்களை சரமாரியாகத் தொடுக்கிறது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ். 
 
அரசு எடுத்து நடத்தும் பல மெகா திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று குற்றம் சாட்டுகிறது. பல  வகையான எதிர்மறையான விஷயங்களை மூட்டை மூட்டையாக வைத்துக்கொண்டு இவர்கள் நரேந்திர மோடியை அழைத்து வந்து மோடி வித்தை காட்டினாலும் இந்த மாநிலத்தில் பா.ஜ.க.வின் சாகசங்கள் பலிக்காது என்று கூறுகிறார் மாநில காங்கிரஸ் தலைவர் மஹந்த்.   
 
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தில் பெரிய சங்கடம் ஒன்றும் காத்திருக்கிறது. முன்னாள் முதல்–மந்திரி அஜித் ஜோகி சில நாட்களாக மாநில காங்கிரஸ் தலைமையின் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறார். இவர் கட்சி சார்பற்ற வகையில் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பேரணிகள் மாநில காங்கிரசுக்குப் பெரும் தலைவலியைத் தரத் துவங்கியுள்ளன.   
 
ஜோகி முதல்வராக இருந்தபோது பல ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர் என்றும் அவருடைய மகன் அமித் ஜோகி கொலைக்குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்றும் எனவே, இவரை அத்தனை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை என்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கு சமாதானம் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும் தேர்தல் அறிவித்ததும் காங்கிரசில் இருந்து நிறைய அதிருப்தியாளர்கள் கிளம்பக்கூடும் என்றும் பலமுனைகளில் வலுவான பேரங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
ஆளும் கட்சியான பா.ஜ.க.விலும் அதிருப்தியாளர்கள் இல்லாமல் இல்லை. பொதுவாக இவர்கள் தேர்தல் நேரங்களில்தான் தங்களின் வீர விளையாட்டைத் துவங்குவார்கள். அந்த விளையாட்டுக்கள் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு பல சங்கடங்களை விளைவிக்கும். சில சமயங்களில் மறைமுகமாக எதிர்க்கட்சிக்கும் சாதகமாக அமையக் கூடிய வாய்ப்புக்களும் உண்டு.
 
தற்சமயம் சத்தீஸ்கார் மாநிலத்தின் அரசியல், ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளின் பிடியில் அகப்பட்டிருக்கிறது. இந்த மாநிலத்தின் வட பகுதியிலும், தென் பகுதியிலும் மாவோயிஸ்டுகள் இணையான அரசு நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இவர்களுடைய வன்முறை கலந்த அதிரடித் தாக்குதலினால் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர்  கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் சில பொதுமக்களும் அடங்குவர். 
 
முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா இந்த ஆண்டின் மே மாதத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். மாநில அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தொடர்ச்சியான போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
 
சத்தீஸ்கார் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் பெருமளவில் உள்ளது. இது குறித்து டெல்லியில் மத்திய அரசு உயரதிகாரி ஒருவரிடம், இந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகள் அரசாங்கத்துக்கு இணையாக அதிகாரம் செலுத்துகிறார்களே என்று கேட்டதற்கு, நீங்கள் தவறாக சொல்கிறீர்கள். அங்கு அரசாங்கத்தை நடத்துவதே அவர்கள்தான் என்று கூறினார். 
 
இந்த மாவோயிஸ்டு இயக்கங்கள் தேர்தல் வழிமுறைகளில் நம்பிக்கையற்றவர்கள். தேர்தல்கள் நடத்துவதில் பல சிக்கல்களை இந்த இயக்கங்கள் உருவாக்கக் கூடும் என்ற அச்சமும் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு உள்ளது. மிகவும் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கார். 
 
இந்தக் கெடுபிடிகள், அச்சங்களுக்கு இடையில் வாக்காளர்கள் இங்கு தங்களை ஆளப்போகும் அரசினை அமைக்கும் கட்சியைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்.
 
மீண்டும் ஒரு முறை பா.ஜ.க.வா? அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காங்கிரசா? என்ற கேள்வியுடன் சத்தீஸ்கார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், மக்கள் தீர்ப்புக்கும் காத்திருப்போம்.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read