.
சற்று முன் :
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சடலமாக மீட்பு
சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிப்பு
ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி பதவியில் நீடிக்க சுந்தர்ராமனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு முடியும் வரையில் சீனிவாசன் பி.சி.சி.ஐ. தலைவராக முடியாது சுப்ரீம் கோர்ட்டு
காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி நைனிடாலில் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு

Advertisement

சினிமாவின் மறுபக்கம் : 36. ‘எம்.ஜி.ஆர். – சிவாஜியின் தீபாவளிப்போட்டி’

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A
36. ‘எம்.ஜி.ஆர். – சிவாஜியின்  தீபாவளிப்போட்டி’
 
சாவித்திரி எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து, நான் வசனம் எழுதிய ‘பரிசு’ படம் 1963 தீபாவளி அன்று வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
 
ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த பாசமலர் படத்தின் பங்குதாரர்களான நடிகர் எம்.ஆர்.சந்தானமும், ‘மோகன் ஆர்ட்ஸ்’ கே.மோகனும் சுமூகமாகப் பிரிந்து, தனித்தனியாகப் படம் தயாரிக்க முற்பட்டனர். இருவருக்கும் நான்தான் எழுத இருந்தேன். 
 
சிவாஜியின் அன்னை ராஜாமணி அம்மையாரின் பெயரிலான அந்தப் பழைய பேனரை மோகன் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவே, எம்.ஆர்.சந்தானம் சிவாஜியின் துணைவியார் கமலா அம்மாவின் பெயரைக் கொண்டு புதிதாக ‘கமலா பிக்சர்ஸ்’ என்ற பெயரோடு கம்பெனி தொடங்கினார்.
 
இயக்குனர், இசையமைப்பாளர், ஏனைய நடிகர், நடிகைகள், தொழிற்கலைஞர்கள் எல்லாம் பிறகு. சிவாஜி நடித்து, எந்த – யாருடைய கதையாயிருந்தாலும் சரி, முதலில் வசனம் மட்டும் நான் தான் எழுதவேண்டும் என்பது முன்னதாகவே முடிவு செய்யப்பட்டு விட்டது. 
 
சென்னை ராயப்பேட்டையில் சிவாஜியின் பழைய வீடு உள்ள ஷண்முக முதலி தெரு முனையில், நடிகை எம்.என்.ராஜத்துக்குச் சொந்தமாயிருந்த தாண்டவராயன் தெரு வீட்டிற்குத் தென் புறத்தில் இருந்த காரைக்குடி லட்சுமி என்னும் பாடகியின் வீட்டை வாடகைக்கு எடுத்து, எம்.ஆர்.சந்தானம் ‘கமலா பிக்சர்ஸ்’ போர்டை மாட்டினார்.
 
தயாரிப்பாளர் தயார்! அவருக்கு வேண்டிய நிதி உதவி செய்ய சிவாஜி பிலிம்ஸ் வி.சி.சண்முகம் தயார். நடிப்பதற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தயார்! சிவாஜி நடிக்கும் எனது இந்த நான்காவது படத்திற்கு வசனம் எழுதுவதற்கு நானும் தயார். ஆனால் இயக்குனர், இசையமைப்பாளர், ஏனைய நடிகர்கள் ஆகியோர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
 
எல்லாவற்றிற்கும் முதலாவதான கதை என்ன? தெரியாது. ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். 
 
இந்தப்படம் அங்கே எம்.ஜி.ஆரின் ‘பரிசு’ ரிலீசாகும் அதே தீபாவளித் திருநாளில் வெளியிடுவதற்குத் தயாராக சிவாஜியின் சொந்த தியேட்டரான ‘சாந்தி’ முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டுத் தயாராக இருந்தது.
 
கமலா பிக்சர்ஸ் சிவாஜி படத்திற்கு யாரை இயக்குனராக நியமிப்பது? 
 
பீம்சிங்கிடம் ‘கால்ஷீட்’ இல்லை. 
 
1963 வாக்கில் ஏ.சி.திருலோகசந்தர் சிவாஜிக்கு பழக்கம் இல்லை. 1967–ல் தான் அவர் பாலாஜி தயாரித்த ‘தங்கை’ படத்தின் மூலமாக சிவாஜியிடம் வந்தார். இப்பொழுது தேவை முதலில் இயக்குனர். அடுத்தது கதை. இதை வைத்து மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் இசை அமைப்பாளர் ஆகியோர்.
 
இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீதரிடம் துணை இயக்குனராக இருந்த பி.மாதவன் முதன் முதலாக இயக்கி, கல்யாண்குமார், விஜயகுமாரி நடித்து, ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘மணி ஓசை’ படம் கோடம்பாக்கம் ராம் தியேட்டரில் ரிலீசாகியிருந்தது.
 
‘மணி ஓசை’ படம் சுமாராகத்தான் இருந்தது. ஆகவே, சுமாராகத்தான் ஓடியது. ஆனால் அதை டைரக்டர் மாதவன் இயக்கி இருந்த விதமும், படப்பிடிப்பும் நன்றாக இருந்தன. அதை சிவாஜியிடம் சொன்னேன். 
 
அதைக் கேட்ட சிவாஜி, ‘அப்படின்னா மாதவனுக்கு நம்ம கமலா பிக்சர்ஸ் படத்தை டைரக்ட் பண்றதுக்கான திறமை இருக்குன்னு நீ நினைக்கிறியா?’ என்றார். 
 
அதற்கு நான், ‘நினைக்கிறதென்ன? எனக்கு நம்பிக்கை இருக்கு. ‘பிரசன்டேஷன்’, ‘சாங்ஸ் பிக்சரைசேஷன்’ இரண்டும் நல்லாயிருக்கு’ என்றேன்.
 
‘எனக்கும் மாதவனைத் தெரியும். அவன் ஸ்ரீதர் கிட்டே இருந்தப்போ பழகியிருக்கேன். அவனையே ‘பிக்ஸ்’ பண்ணிடலாம் என்று சிவாஜி, சந்தானத்திடம் கூற, அவர் அரை மனதுடன் சம்மதித்து, சிவாஜி சொன்னதற்காக மாதவனுக்கு அட்வான்ஸ் கொடுத்து அமர்த்திக் கொண்டார்.
 
இயக்குனர் வந்துவிட்டார். அவர் வந்த பிறகு கதை மட்டும் இன்னும் வரவில்லை.
 
என் ஆரம்பகாலப் படங்களுக்கு நான் கதைகள் எழுதியதோடு சரி. பின்நாட்களில் எனக்கு பிற படங்களுக்கு திரைக்கதை, வசனம் அல்லது வசனம் எழுதவே எனக்கு நேரம் போதாத நிலையில், கதையும் எழுத எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
 
கதை மட்டுமே எழுத அல்ல – வாயால் சொல்லத் தெரிந்த சிலரிடம் கதைகள் கேட்டுக் கேட்டு அவை பிடிக்காமல் அலுத்துச் சலித்துப் போயிருந்த நிலையில், தமிழே தெரியாத ஒருவர் எங்களுக்கு கதை சொல்ல வந்தார். அவரிடத்திலும் கதை எழுதப்பட்ட கோப்பு கீப்பெல்லாம் ஒன்றுமே கிடையாது. வழக்கம்போல அவரும் வாய்க்குள்ளேயே கதையை வைத்திருந்தார்.
 
‘ஆங்கிலோ இந்தியர்’ போன்ற முகச்சாயல் கொண்ட இளம் மஞ்சள் நிறமேனி! காதோரம் நரைத்த முடி! நடுத்தர வயதைக் கடந்தவர்! குளோஸ் கட்டிங் கிராப்! காலர் இன்றி ‘சிங்கிள் பாண்ட்’ பட்டையுடன் கூடிய சைடு பாக்கெட்டுகள் கொண்ட ஒரு இரண்டுங்கெட்டான் கதர்ஜிப்பா! அதன் இடது மார்புப் பகுதியில் ஒரே ஒரு பேனா மட்டும் சொருகி வைக்கக்கூடிய அளவுக்குச் சிக்கனமான சிறு பாக்கெட்! தோளில் கைக்குட்டை அளவிற்கு ஒரு கலர் டர்க்கி டவல்! இடுப்பிலிருந்து கணுக்கால் வரையில் ஒரு தொளதொள கதர் பைஜாமா! இந்தத் தோற்றத்தில் எங்களுக்குக் கதை சொல்ல வந்த அந்தக் கனவானின் பெயர் ‘தாதா மிராஸி!’
 
இதே தாதா மிராஸிதான் கமலா பிக்சர்சுக்காக எங்களுக்கு ஒரு குடும்பக்கதை சொன்னார். அவர் கதை சொன்னவிதம், ‘பொம்மலாட்டம்’ பார்ப்பதைப்போல இருந்தது. கதை சொல்லிக்கொண்டே எழுந்தார். அங்குமிங்கும் நடந்தார். தனக்குத்தானே அங்கலாய்த்துக்கொண்டார். தலையில் அடித்துக்கொண்டார். கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். கீழே விழுந்து தரையில் புரளாத ஒரு குறைதான். அப்பா! ஒருவாறாக கதை சொல்லி நடித்து முடித்தார். பேசாமல் நடிகராகவே போயிருந்திருக்கலாம். 
 
கதை என்னமோ சினிமாவுக்கேற்ற மாதிரிதான் இருந்தது. சிதறிப்போன ஒரு குடும்பம் கடைசியில் ஒன்று சேர்கிறது. அதைச் சேர்த்து வைத்த மூத்த மகன் சிவாஜி இறுதியில் தாயின் மடியில் தலை வைத்து இறந்து விடுகிறார். உச்சக்கட்டம் சோக முடிவுடன் நிறைவு பெறுகிறது! 
 
தாதா மிராஸியின் கதைக்குப் பொருத்தமாகவும், சிவாஜியின் சொந்த வீட்டைக் குறிக்கும் வகையிலும் ‘அன்னை இல்லம்’ என்று நான் படத்திற்குப் பெயர் சூட்டினேன். அனைவருக்கும் அது பிடித்திருந்தது. 
 
வசனம் நான். பாடல்கள் கண்ணதாசன். இசை கே.வி.மகாதேவனா?அல்லது எம்.எஸ்.விஸ்வநாதனா? என்ற சர்ச்சை எழுந்தது. என்னையும் சிவாஜியையும் தவிர மற்றவர்களில் சிலர் கே.வி.எம்.மையும் சிலர் எம்.எஸ்.வி.யையும் சொன்னார்கள். எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டபிறகு, ‘ஆரூரான் சொல்லட்டும். அதையே முடிவா எடுத்துக்கலாம்’ என்று சிவாஜி சொல்லி என்னைக் கேட்டார். 
 
‘நான் சொல்லமாட்டேன். ஏன்னா கே.வி.எம்., எம்.எஸ்.வி. இரண்டு பேருக்குமே நான் வேண்டியவன். இரண்டு பேருமே என் படங்களுக்கு இசை அமைக்கிறாங்க. அதனால எங்க எல்லாரையும் விட்டுட்டு, நீங்களே யார்னு முடிவு பண்ணுங்க’ என்று சிவாஜியிடம் சொன்னேன். ஆனால் அவரும் என் கட்சியில் சேர்ந்து, என்னைப் போலவே நடு               நிலைமை வகித்தார். இந்தக் குழப்பம் கொஞ்ச நேரம் நீடித்தது. இறுதியில் நான் இதற்கு ஒரு முடிவு கட்டினேன், எப்படி?
 
இரு துண்டுக் காகிதங்களில் ஒன்றில் கே.வி.எம். என்றும், இன்னொன்றில் எம்.எஸ்.வி. என்றும் எழுதினேன். சுருட்டினேன். குலுக்கி சிவாஜியின் முன்னால் வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒன்றை எடுக்கச் சொன்னேன். 
 
‘தெய்வ சித்தம்’ என்ன என்று அறிந்து கொள்ளக்         கூடிய அந்தத்  ‘திருவுளச் சீட்டு’களில் ஒன்றை, நான் சொன்னபடியே சிவாஜி தன் கண்களை மூடியவாறு கையால் துழாவி எடுத்து, என்னிடம் கொடுத்து, ‘நீயே உன் கையாலே பிரிச்சிப்பாரு’ என்றார்.
 
பிரித்துப் பார்த்தேன். கே.வி.எம். பெயர் வந்திருந்தது. எல்லோரும் சேர்ந்து – சிவாஜி உள்பட ‘ஒருதலைச் சார்பு’ இன்றி ஏகமனதாகக் கையொலி எழுப்பினார்கள்!
 
அடுத்து, கதாநாயகி பிரச்சினை எழுந்தது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவதற்குத் தோதுவாக சிவாஜியின் கால்ஷீட்டை அண்ணன் சந்தானம் தன் செல்வாக்கைக் கொண்டு தம்பி சண்முகத்திடம் முன்பே வாங்கி வைத்திருந்தார். அந்த கால்ஷீட்டுக்குத் தகுந்தவாறு சாவித்திரியிடமோ, சரோஜாதேவியிடமோ அப்போது கால்ஷீட் இல்லை.
 
அந்தச் சமயத்தில் கே.ஆர்.விஜயா பட உலகில் அறிமுகம் ஆகவில்லை. அதே தீபாவளிக்கு வெளியிடும் எண்ணத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கித் தயாரித்துக் கொண்டிருந்த ‘கற்பகம்’ படத்தில் விஜயா முதன் முதலாக அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்தார். வேறு யார் சிவாஜிக்குப் பொருத்தமான கதா     நாயகி நடிகை?
 
மறுபடியும் மண்டை வலி! எங்களுடைய அந்தத் தலைவலிக்கு இயக்குனர் மாதவனே ‘தைலம்’ தடவினார். 
 
1962–ல் ஸ்ரீதர் இயக்கித் தயாரித்த ‘நெஞ்சில் ஓர்  ஆலயம்’ படத்தில் முத்துராமனுடன் இணைந்து குடும்பப்பாங்கான ஒரு நல்ல குணவதியாக நடித்திருந்த தேவிகாவை மாதவன் நினைவுபடுத்தினார். அந்தப் படத்தில் மாதவன் ஸ்ரீதரின் துணை இயக்குனராகப் பணியாற்றிய வகையில் தேவிகா அறிமுகம் இருந்ததால், அதை வைத்து அவரிடம் தேவையான கால்ஷீட் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் கதாநாயகியாக தேவிகா முடிவு செய்யப்பட்டார். 
 
மற்றபடி தந்தையாக எஸ்.வி.ரங்காராவ், தாயாக எம்.வி.ராஜம்மா – தம்பியாக முத்துராமன், நாகேஷ், கீதாஞ்சலி ஆகியோர் கதைக்குத் தக்கவாறு தேர்வானார்கள். 
 
தீபாவளி வருவதற்கு இடையில் குறுகிய காலமாக இருந்ததால், அதற்குள் படத்தை முடித்து ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்ற அவசர நிலைக்கு நான் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. 
 
ஒருவழியாக முழுப்படத்திற்குமான மொத்த வசனங்களையும் நான் எழுதி முடித்ததும் ‘அன்னை இல்லம்’ படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று, நிறைவு பெற்று, முதல் பிரதியும் தயாராகி விட்டது.
 
இந்த நிலையில் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நாட்களில் நான் வாகினி ஸ்டூடியோவிற்கு எந்த படப்பிடிப்புக்கோ அல்லது பாடல் ஒலிப்பதிவுக்கோ சென்றாலும் ஒருமுறையாவது நாகிரெட்டியார் – சக்ரபாணியார் இருவரையும் சென்று பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இருவரும் என்னிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள்.
 
நான் செல்லும் நேரத்தில் அவர்கள் அறையில் இல்லாமல் வேறு எங்காவது ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது சற்றுத் தொலைவில் என்னைப் பார்த்துவிட்டால் போதும். உடனே கூப்பிடுவார்கள். தமிழ்ப் படங்களின் தற்போதைய நிலவரம், நடிகர் – நடிகைகளின் சம்பள விஷயங்கள் போன்ற விவரங்களை எல்லாம் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தெலுங்குப் பட விஷயங்கள் மட்டும்தான் அத்துப்படி. 
 
அந்தச் சமயத்தில் அவர்களுடைய ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தை தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள் என்னிடம்.... தீபாவளிக்கு வரப்போகிற படங்கள் பற்றிக் கேட்டார்கள். நான் எழுதும் எம்.ஜி.ஆரின் ‘பரிசு’, சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ ஆகிய இரண்டு படங்கள் பற்றிக் கூறினேன். ‘அன்னை இல்லம்’ கதை என்ன என்று கேட்டார்கள். சொன்னேன்.
 
சக்ரபாணியார் சொன்னார்:–
 
‘பிரிஞ்சுபோன அம்மா, அப்பா, தம்பி எல்லாரையும் ஒண்ணாச் சேர்த்துவச்ச அண்ணன் சிவாஜி கடைசி ‘கிளைமாக்ஸ்’ல அம்மா மடியில் படுத்து ஏன் சாகணும்? அவர் சாகவேண்டிய அவசியம் என்ன? எனக்கென்னமோ அந்த ‘டிரேஜடி’ முடிவு அவ்வளவு சரியா தோணலே. ஜனங்க அதை ஏத்துக்குவாங்களா?’
 
நான்:– ‘ஐயா! ‘பாசமலர்’ படத்துல அண்ணன் – தங்கச்சி இரண்டு பேரும் ஒரே சமயத்தில் இறந்ததை ஜனங்க ஏத்துக்கலியா?’
 
சக்ரபாணியார்:– ‘அந்தக் கதைக்கு அதுதான் சரியான முடிவு. அந்த ‘கிளைமாக்ஸ்’ ‘பில்டப்’லே தான் படமே சக்ஸஸாச்சு. ஆனால், இந்தக்கதை அப்படி இல்லை. இது பிரிஞ்சு போன ஒரு குடும்பம் ஒண்ணா சேருகிற கதை. இதுல அண்ணனும் சேர்ந்திருந்தாத்தான் நல்லாயிருக்கும். படம் பார்த்த ஜனங்களும் சந்தோஷமாக போவாங்க. நீ நல்லா யோசிச்சுப்பாரு. சிவாஜி கிட்டேயும் சொல்லு. அவருக்கு அந்த ‘டிரேஜடி எண்டு’ தான் பிடிச்சிருக்குன்னா விட்டுடு. பிரஸ் பண்ணாதே’.
 
தங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு படத்தின் மீது அவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? அந்த அக்கறை படத்தைவிட, என் மீதுதான் அதிகம் என்பதை நான் நன்கு அறிவேன்.
 
இதை சிவாஜியிடமும், இயக்குனர் மாதவனிடமும் சொன்னேன். அவர்கள் மிகவும் குழம்பிப்போய் விட்டார்கள். அதற்குக் காரணம், படப்பிடிப்பு முழுவதுமே முடிந்து முதல் பிரதி தயாராகி விட்டது.
 
சிவாஜி:– (என்னிடம்) ‘நீ என்ன நினைக்கிறே?’
 
நான்:– ‘அப்போ எனக்குத் தோணலே. இப்போ தோணுது. சக்ரபாணியார் சொன்னது ‘ஹண்ட்ரட் பர்ஸெண்ட் கரைக்ட். ‘அதுல நான் தெளிவாக இருக்கேன்.’ 
 
மாதவன்:– ‘எனக்குக் குழப்பமாக இருக்கு. இப்போ ‘லாஸ்ட் மொமண்ட்ல’ என்ன செய்றது?’
 
நான்:– ‘கவலைப்படாதீங்க மாதவன். ரொம்ப சிம்பிள். அண்ணனும் தன் குடும்பத்தோட சேர்ந்திருக்கிறது மாதிரி கிளைமாக்ஸை மாற்றி அதற்கு ‘லிங்க்’ ஆகுற மாதிரி முன்னால் இரண்டு மூணு சீனைச் சேர்த்து புதுசா, வேற விதமாக டயலாக் எழுதிக்கொடுக்கிறேன். அதை ஷூட் பண்ணிச் சேர்த்து அந்தக் கடைசி இரண்டு ரீலை, எடுத்திருக்கிற படத்தோட சேர்த்துப் பார்ப்போம். சரியா வரும்னு எனக்குத் தோணுது. நான் டயலாக் எழுதிக்காட்டுறேன், பாருங்க.’
 
சிவாஜி:– (என்னிடம்) ‘சரி. உனக்குத் தோண்றதை எழுது. மாதவா! ஆரூரான் எழுதுற சீனுக்குத் தகுந்தபடி ஆர்ட்டிஸ்டுங்களை வச்சி நீ ரீ ஷூட் பண்ணு. நான் இப்பவே ரெடி.’
 
இந்த ஏற்பாட்டை அறிந்து தம்பி சண்முகம், தயாரிப்பாளர் சந்தானண்ணன் இருவருக்கும் அதிர்ச்சி. 
 
சந்தானண்ணன் என்னிடம்:–
 
சந்தா:– ‘என்ன சாமி? சம்பந்தமே இல்லாம சக்ரபாணியார்            கிட்டேபோய் ஏன் கதையை சொன்னீங்க? அவரு இப்படி குழப்பி விட்டுட்டாரே. எப்போ ஷூட்டிங் பண்ணி, எப்படி எல்லா பிரிண்டுலேயும் சேர்க்கிறது? மெனக்கெட்ட வேலை. தீபாவளி வேற நெருங்குது.’
 
நான்:– ‘அண்ணே! சக்ரபாணியார் சொன்னதா நான் நினைக்கலே. என் மாதா அவர் உருவத்துல எனக்குச் சொன்னதாத்தான் எடுத்துக்கிட்டேன். எழுதிக்காட்டுறேன் பாருங்க. படம் ரொம்ப நல்லா வரும். சந்தேகமே வேண்டாம். பயப்படாதீங்க.’
 
சந்தா:– ‘நீங்க சொன்னா சரிதான். உங்க மேலே எனக்கு எப்பவுமே நம்பிக்கை உண்டு. அவ்வளவுதான்.’
 
படத்தின் உச்சக்கட்டத்தோடு ஒட்டி, இணைகிறாற்போல மாற்றி, நான் ஏற்கனவே எண்ணி இருந்த மூன்று காட்சிகளோடு மேலும் ஒரு காட்சி சேர்த்து எழுதி, மாதவனிடம் படித்துக்காட்டினேன். அதைக்கேட்டு அவர் மிக மகிழ்ச்சியுற்றார்.
 
புதிதாக எடுத்து இணைக்கப்பட்ட காட்சிகளோடு சேர்த்து மீண்டும் ஒருமுறை அன்னை இல்லத்தைப் பார்த்தோம்.
 
முன்பைவிட இப்பொழுது ‘கிளைமாக்ஸ்’ மற்றும் அதன் தொடர்புள்ள முன்காட்சிகள் மிக நன்றாக அமைந்திருப்பதாக அண்ணன் சிவாஜியும், தம்பி சண்முகமும் கூறி மகிழ்ச்சியுற்று எனக்கு நன்றி தெரிவித்தார்கள். 
 
‘இந்த நன்றி சென்று சேரவேண்டியது சக்ரபாணியாருக்குத்தான். அதனால் எனக்கு ஒரு பிரிண்ட் கொடுங்கள். கொண்டு போய் நாகிரெட்டியார், சக்ரபாணியார் குடும்பங்களுடன் நம் படத்தைப் பார்க்கச் செய்கிறேன்’ என்றேன்.
 
உடனே ‘அன்னை இல்லம்’ படத்தின் ஒரு பிரதி அடங்கிய பச்சைப்பெட்டி என் கார் டிக்கியில் வைக்கப்பட்டது. நேராக அதை விஜயா கார்டனுக்குக் கொண்டுபோய், வழக்கமாக அவர்கள் குடும்பத்துடன் படம் பார்க்கும் ‘கார்டன்’ தியேட்டரில் வைத்துவிட்டு, ஸ்டூடியோவுக்குச் சென்று இருவரிடமும் தகவல் தெரிவித்தேன்.
 
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள்:– ‘உனக்கு ஏன் இவ்வளவு சிரமம்’ என்றார்கள். 
 
‘எனக்கொண்ணும் சிரமம் இல்லேய்யா. என் படத்தை நீங்க பார்க்கணும்னு விரும்புகிறேன். அவ்வளவுதான்.’
 
‘சரி, ரொம்ப சந்தோஷம். சிவாஜி பிலிம்ஸ் படம் அதுவும் ரிலீஸாக வேண்டியது. ரொம்ப நேரம் இங்கே வச்சிருக்கக்கூடாது. அது தப்பு. சாயந்திரமே குடும்பத்தோட பார்த்திடுறோம். நீ இங்கேயே இருந்து எங்களோட சேர்ந்து படத்தைப் பார்த்திட்டு, கையோட பிரிண்டை எடுத்துக்கிட்டுப்போயிடு.’
 
ரெட்டியார் – சக்ரபாணியார் இருவரும் அவர்களுக்கு இருக்கும் அன்றாட முக்கிய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அன்று மாலையே தங்கள் குடும்பத்தினருடன், என் அன்னை இல்லத்தைக் கண்டுகளித்தார்கள். சக்ரபாணியார் சொன்னார்:–
 
‘நீ அப்போ எங்கிட்டே சொன்ன அந்த கிளைமாக்ஸைவிட, இப்போ படத்துல பார்க்கிற இதுதான் ரொம்ப நல்லாயிருக்கு. ஆல் த பெஸ்ட்!’
 
ரெட்டியார்:– ‘கங்கிராஜ்லேஷன்ஸ் தாஸ். இந்தப்படம் வழக்கம்போல உன் முந்தின சிவாஜி படங்கள் மாதிரி ‘ஹண்ட்ரட் டேஸ்’ கண்டிப்பா போகும். சிவாஜிகிட்டே நான் சொன்னதா சொல்லு.’
 
15.11.1963! தீபாவளித் திருநாளில் சிவாஜியின் சாந்தி தியேட்டரில் நான் எழுதிய அவருடைய ‘அன்னை இல்லம்’ – அதே நாளில், வழக்கம் போல் பிளாசா தியேட்டரில் நான் எழுதிய எம்.ஜி.ஆரின் ‘பரிசு’ ஆகிய இரண்டு போட்டிப் படங்களும் ரிலீஸாகி, தினமும் கொட்டகை நிறைந்த காட்சிகளாக நடைபெற்று வெற்றியடைந்து நூறு நாட்கள் ஓடி விழா கண்டன!
 
இரு பக்கத்தினராலும் எத்தகைய பாரபட்சமும் இன்றி நான் பாராட்டப்பெற்றேன்.
 
தீபாவளிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு 18.11.1963–ல் நான் வசனம் எழுதி என்.டி.ராமாராவ், பி.சரோஜாதேவி, கண்ணாம்பாம்மா நடித்த வாகினியின் ‘ஜகதலப்பிரதாபன்’ வெளிவந்து எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவருடைய படங்களுடன் கூட 60 நாட்களையும் கடந்து நன்றாக ஓடியது.
 
சிவாஜி – சவுகார்ஜானகி நடித்து ஏ.பீம்சிங் இயக்கிய கஸ்தூரி பிலிம்ஸ் ‘பார் மகளே பார்’ படக்கதைக்குள் வேறொரு சுவையான உண்மைக்கதை இருக்கிறது. அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
 
(‘ஹீரோக்கள் ஹீரோயின்களாக மாறினர்!’ 
 
– அடுத்த வாரம்)
 
***
 
சிவாஜி  படம்  பற்றிய  கிசுகிசு
 
‘‘அன்னை இல்லம் ‘கிளைமாக்ஸ்’ ரீ ஷூட்டிங்கா...?’’ 
 
சிவாஜி பிலிம்ஸ் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆச்சரியம். 
 
வாகினி சக்ரபாணியார் சொல்லி, அதைக்கேட்டு நான் எழுதி, மீண்டும் படப்பிடிப்பு நடக்கப்போக, அது வேறு விதமாக வெளியிலும் சில சினிமா பத்திரிகைகளிலும் விமர்சிக்கப்பட்டது.
 
‘அன்னை இல்லம்’ படத்தைத் தயாரித்த சிவாஜி, திருப்தி இல்லாமல் எம்.ஜி.ஆரின் ‘பரிசு’ படத்தினால் எங்கே நம் படம் பாதித்து விடுமோ என்று பயந்து அதனால் பல காட்சிகளை மீண்டும் மாற்றி எழுதி ‘ரீ ஷூட்’ பண்ணுகிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது.
 
எப்படி இருக்கிறது இது? 
 
உள்ளே நடப்பது ஒன்று, வெளியில் பேசப்படுவது வேறு ஒன்று. 
 
இதுதான் சினிமா உலகம்.
 
எங்கள் பட உலகில் எப்போதுமே இன்றைக்குக்கூட வதந்திகளுக்குப் பஞ்சமே இல்லை. 
 
ஆதாரமற்ற செய்திகளை மக்களில்  ஒரு சாரார் அதிக ஆர்வத்துடன் படிப்பார்கள். அதைப்பற்றி ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள். அதை ஆங்கிலத்தில் ‘டாக் ஆப் தி டவுன்’ என்று சொல்வதுண்டு.
 
***
 
ஜாவர் சீதாராமனின் ‘இரட்டை வேடம்’
 
கதை சொல்ல கூட்டிக்கொண்டு வந்த தாதா மிராஸியை இயக்குனராகவும் ஆக்கிய சின்னஅண்ணாமலை, தனது சொந்தத் தயாரிப்பான ‘கடவுளின் குழந்தை’ படத்தை இயக்க ‘சான்ஸ்’ கொடுத்தார்.
 
‘கடவுளின் குழந்தை’ கதைக்குள் ஒரு கதை உண்டு. அது முழுக்க முழுக்க தாதா மிராஸியின் மூளையில் உருவான கதை அல்ல.
 
அப்பொழுது ‘நோபடிஸ் சைல்டு’ என்ற ஓர் ஆங்கிலப்படம் சென்னை மவுண்ட் ரோடு ‘நியூ குளோப்’ தியேட்டரில் தினமும் கொட்டகை நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது.
 
‘நோபடிஸ் சைல்டு’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘அனாதைக் குழந்தை’ அல்லது ‘தெய்வக் குழந்தை’ என்றும் பொருள் கொள்ளலாம்.
 
இந்தப் படத்தைப் பார்த்த தாதா (இப்படித்தான் இவரை நான் அழைப்பது வழக்கம்) இதே கதையை நம் தமிழ்ப் படத்திற்குத் தகுந்த மாற்றங்களுடன் திரைக்கதை அமைத்து இயக்கத் தொடங்கினார். ஆங்கில மொழி நன்கு அறிந்தவராதலால் அந்தத் ‘தழுவல் கலை’ அவருக்குக் கைவந்த கலையாகியது.
 
இது ஒருபுறம் இருக்க, அன்றைய பிரபல நடிகரும், சினிமா கதாசிரியருமான ஜாவர் சீதாராமன், இதே ஆங்கிலப் படத்தைப் பார்த்து அதைத் தழுவித் திரைக்கதை, வசனம் எழுதி, அது ‘களத்தூர் கண்ணம்மா’ என்னும் பெயரில், ஜெமினி கணேசன், சாவித்திரி, சிறுவன் கமல்ஹாசன் நடித்து, ஏ.பீம்சிங் இயக்கத்தில் ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் படமாகத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தப்படத்தில் ஜாவர் சீதாராமன் ‘சேவல் பட்டி சிங்காரம்’ என்ற பாத்திரத்தில் நடித்தும் வந்தார்.
 
இதில் விசித்திர – விந்தை – வேடிக்கை என்னவென்றால், ஜாவர் சீதாராமன் எழுதிய ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் எந்த வேடத்தில் அவர் நடித்து வந்தாரோ, அதே வேடத்தில் ‘‘கடவுளின் குழந்தை’’ படத்தில் வேறொரு பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதுதான். 
 
இந்த விஷயத்தையும், ‘களத்தூர் கண்ணம்மா’வும், ‘கடவுளின் குழந்தை’யும் ஒரே ‘நோபடிஸ் சைல்ட்’ ஆங்கிலப் படத்தைத் தழுவியதுதான் என்பதையும் அறிந்த சின்னஅண்ணாமலை திடுக்கிட்டுப்போய் எங்கே தன்னுடைய ‘கடவுளின் குழந்தை’ ஜாவர் மூலமாக ‘களத்தூர் கண்ணம்மா’விடம் போய் விடுமோ என்று அச்சம் கொண்டார். உடனே, ஜாவருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கி பணத்தைக் கொடுத்து, வவுச்சரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ‘ஐயா! எம்படத்துல ஒங்க வேலை இதோட முடிஞ்சி போச்சி. இனிமே நீங்க வரத்தேவை இல்லை, வணக்கம்’ என்று கைநிறைந்த கும்பிடு போட்டு அவரைக் கச்சிதமாகக் கழற்றி விட்டுவிட்டார். 
 
அது மட்டுமா? மேற்கொண்டு ஜாவர் நடிக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் திரைக்கதையிலிருந்து நீக்கி விட்டு, வழக்கமான எங்கள் ‘சினிமா டெக்னிக்’படி அவர் நடித்து வந்த அந்தப் பாத்திரம் காசிக்குத் தீர்த்த யாத்திரைக்குப் போய்விட்டதாக ஒரு வசனத்தை எழுதி இடையில் செருகி – நுழைத்து விட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
 
இங்கு இப்படி என்றால், அங்கே ஏவி.எம்மில் ‘இந்த இரண்டு படங்களும் ஒரே கதையைக் கொண்டவை’ என்பதை எப்படியோ அறிந்து கொண்ட செட்டியார், ‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பை வேகமாக முடுக்கிவிட்டு முடித்து 12.8.1960–ல் வெளியிட்டு வெற்றி பெற்றார். படம் நூறு நாட்கள் ஓடியது!
 
அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக 29.7.1960–ல் ‘கடவுளின் குழந்தை’ சின்னஅண்ணாமலையின் வெற்றிவேல் பிலிம்ஸ் கர்ப்பத்திலிருந்து வெளிவந்தது! கல்யாண்குமார், எம்.ஆர்.ராதா, கே.ஏ.தங்கவேலு, டி.கே.சண்முகம், நாகேஷ், ஜமுனா, ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்த அந்தப்படமும் நன்றாக 10 வாரங்கள் ஓடியது.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Most Read