“தயாரிப்பாளர் சங்கத்தில் கட்ட பஞ்சாயத்து நடப்பதாக பேசுவதா?” நடிகர் விஷாலுக்கு எஸ்.தாணு கண்டனம்


“தயாரிப்பாளர் சங்கத்தில் கட்ட பஞ்சாயத்து நடப்பதாக பேசுவதா?” நடிகர் விஷாலுக்கு எஸ்.தாணு கண்டனம்
x
தினத்தந்தி 23 March 2017 9:00 PM GMT (Updated: 23 March 2017 8:27 PM GMT)

“தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கட்ட பஞ்சாயத்து நடப்பதாக விஷால் கூறியதை கண்டிக்கிறேன். யாராக இருந்தாலும் நாவடக்கம் தேவை” என்று எஸ்.தாணு கூறினார்.

சென்னை, 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, நடிகர் விஷால் ஆகியோர் தலைமையில் 4 அணிகள் போட்டியிட்டன. இவர்களில் டி.சிவா போட்டியில் இருந்து விலகி, ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

பேட்டி

இதைத்தொடர்ந்து, ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ என்ற பெயரில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, செயலாளர்கள் பதவிக்கு போட்டியிடும் சிவசக்தி பாண்டியன், ஜே.சதீஷ்குமார், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் விஜயமுரளி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து எஸ்.தாணு பேசியதாவது:-

“இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடவடிக்கைகளை பார்த்து, இந்த அணிக்கு ஆதரவாக வந்து இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கட்ட பஞ்சாயத்து நடப்பதாக அவரும், பிரகாஷ்ராஜும் பேசியிருக் கிறார்கள். அவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். யாராக இருந்தாலும் நாவடக்கம் தேவை. பல படங்கள் திரைக்கு வருவதற்கு நான் என் சொந்த பணத்தை கொடுத்து உதவியிருக்கிறேன்.

சங்கத்தில் சிரமப்படும் தயாரிப்பாளர்களில் 12 பேர் விஷாலை வைத்து படம் எடுத்தவர்கள். இப்படிப்பட்டவரிடம் தயாரிப்பாளர் சங்கம் போகக் கூடாது”.

இவ்வாறு எஸ்.தாணு பேசினார்.

ராதாகிருஷ்ணன்

ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

“எங்கள் அணி வெற்றி பெறுவது உறுதி. அப்படி எங்கள் அணி வெற்றி பெற்றதும், சிறு பட வெளியீட்டுக்கு உதவும் வகையில், நிர்வாகிகள் குழு ஒன்று அமைக்கப்படும். அதன் மூலம் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட ஏற்பாடு செய்யப்படும். சிறு பட தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் கேமரா மற்றும் படப்பிடிப்பு கருவிகளுக்கான கட்டணங்களை 50 சதவீதம் குறைத்து வாங்கி தரப்படும். நடிகர்-நடிகைகள் சம்பள தொகையை தவணை முறையில் அளித்து அதன் மூலம் வட்டி தொகையை குறைக்க ஏற்பாடு செய்யப்படும்.

சங்க உறுப்பினர் மகள் திருமணத்துக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1 லட்சம், ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கப்படும். பிள்ளைகளின் கல்லூரி படிப்புக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.30 ஆயிரம் ரூ.40 ஆயிரமாகவும், பள்ளி படிப்புக்கு வழங்கப்பட்ட ரூ.15 ஆயிரம் ரூ.20 ஆயிரமாகவும் வழங்கப்படும். ரூ.4 லட்சமாக இருந்த மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். திருட்டு வீடியோவுக்கு எதிராக சிறப்புக்குழு அமைக்கப்படும்”.

மேற்கண்டவாறு ராதா கிருஷ்ணன் கூறினார்.

டி.சிவா

பட அதிபர்கள் டி.சிவா, கே.ராஜன், ஜே.கே.ரித்திஷ் ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக ஜே.சதீஷ்குமார் வரவேற்று பேசினார். சுரேஷ் காமாட்சி நன்றி கூறினார்.

Next Story