சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன் நடிகர் விஷால் உறுதி


சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன் நடிகர் விஷால் உறுதி
x
தினத்தந்தி 23 March 2017 11:00 PM GMT (Updated: 23 March 2017 9:31 PM GMT)

சுயநலத்துக்காக நான் எதையும் செய்யமாட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார். நடிகர் விஷால் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதன்படி விஷா

புதுச்சேரி,

சுயநலத்துக்காக நான் எதையும் செய்யமாட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார்.

நடிகர் விஷால்

சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதன்படி விஷால் தலைமையிலான அணியினர் நேற்று புதுச்சேரி வந்து ஆதரவு திரட்டினார்கள்.

அதைத்தொடர்ந்து நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை, கடலூர், சிதம்பரம் பகுதிகளில் உள்ள தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளோம். தயாரிப்பாளர் சங்கத்தில் 1,212 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சினிமா தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத்தை எப்படி எடுப்பது? கேள்வி எழுந்துள்ளது.

ஜெயிப்பது உறுதி

முதலீட்டை எடுக்க படத்துக்கு பூஜை போடுவது முதல் இறுதிவரை நாங்கள் தயாரிப்பாளருக்கு உறுதுணையாக இருப்போம். அதேபோல் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உரிய சலுகைகளையும் வழங்குவோம். சினிமாத்துறையில் வருமானம் இருந்தும் அது தயாரிப்பாளருக்கு கிடைப்பதில்லை. இந்த தேர்தலில் நாங்கள் ஜெயிப்பது உறுதி. அதன்பின் மாற்றங்கள் நடக்கும்.

எங்களது வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரு வருடத்தில் நிறைவேற்றுவோம். இதற்காக அனைத்து தயாரிப்பாளர்களுடனும் கைகோர்த்து செயல்படுவோம். எங்கள் குடும்பம் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும். கடந்த 4, 5 நாட்களாக நிறைய காமெடிகள் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிலர் கூறும் நிலை இப்போது வந்துள்ளது.

சுயநலத்துக்காக...

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றதும் நலிந்த தயாரிப்பாளர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தருவோம். திருமண உதவித்தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்துவோம். தயாரிப்பாளர்களுக்கான வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

தயாரிப்பாளர் சங்க தலைவராக என்னை தேர்வு செய்தால் சுயநலத்துக்காக நான் எதையும் செய்யமாட்டேன். நாங்கள் நடிகர் சங்க பொறுப்புக்கு வந்தபின்தான் கடன்களை அடைத்து ரூ.9 கோடி இருப்பு வைத்துள்ளோம். விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம்.

ஆதரவு

சினிமா நடிகைகளுக்கான பாலியல் துன்புறுத்தலை அவர்கள் துணிச்சலாக வெளியில் சொல்வதால் பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. தங்களுக்கு நேர்ந்த துன்புறுத்துவதை வெளிப்படையாக சொல்வதால்தான் அதற்கு தீர்வு காணப்படுகிறது. பாதிக்கப்படுவோர் எந்த துறையாக இருந்தாலும் நாம் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். வயதான அவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. மத்திய, மாநில அரசுகள் அவர்கள் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு வழியில் தீர்வுகாண வேண்டும் என்று கூறினார்.

பேட்டியின்போது இயக்குனர் மிஷ்கின் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story