தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம் நடிகர் கமல்ஹாசன் பேட்டி


தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 26 May 2017 11:30 PM GMT (Updated: 26 May 2017 5:42 PM GMT)

தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அந்த நிகழ்ச்சி தொடர்பான டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:–

போட்டி அரசியலுக்கு வரவில்லை

கேள்வி:– அரசியலுக்கு யார் வரலாம் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:– இப்போது இருக்கும் அரசியல் நிலவரங்களை பார்க்கையில் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறேன். அது ஏன் நடிகர்களை தனியாக ஒதுக்கவேண்டும். பகுத்து அறிபவர்கள் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்று தான் தோன்றுகிறது.

கேள்வி:– டீசரில் இந்தியனாக நடித்தேன், வாழ்ந்து வருகிறேன் என்று சொல்கிறீர்கள். அதற்கான சரியான விளக்கம் என்ன?

பதில்:– நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் எப்படி புரிய வைப்பது. இன்னும் கொஞ்ச நாட்கள் இந்தியனாக வாழ்ந்து காட்டினால்தான் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். இந்தியனாக நடித்திருக்கிறேன் என்பதை இந்தியன் படத்திலும், இந்தியனாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை என்னுடைய வாழ்க்கையை பற்றியும் சொல்லலாம். இந்தியன் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் என்னுடைய நாட்டை, அதன் சட்டத்திட்டத்தை மதித்து நடக்க வேண்டும். முக்கியமாக வரி கட்டவேண்டும். நான் அதை செய்கிறேன்.

கேள்வி:– நீங்கள் எப்போது அரசியலுக்கு வர இருக்கிறீர்கள்?

பதில்:– நான் அரசியலுக்கு வந்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. 21 வயதில், ஓட்டுக்காக விரலில் ‘மை’ தடவியதுமே நான் அரசியலுக்கு வந்துவிட்டதாக கருதுகிறேன். ஆனால் போட்டி போடும் அரசியலுக்கு நான் வரவில்லை. யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்று முடிவுசெய்யும் வெகுஜன கூட்டத்தோடு கூட்டமாக நானும் நின்று கொண்டிருக்கிறேன்.

தமிழ் உணர்வுள்ள யாரும்....

கேள்வி:– அரசியலுக்கு ரஜினிகாந்த் வரலாம் என்று சொல்கிறீர்களா?

பதில்:– அந்த 5 வருடம் வரும்போது அதை சொல்லலாம்.

கேள்வி:– தமிழன் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:– தமிழ் உணர்வோடு இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். காந்தி தமிழனா..?, நேரு தமிழனா..?, சுபாஷ் சந்திரபோஸ் தமிழனா..?. ஆனால் போஸ் என்ற பெயரில் எங்க ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். காந்தி என்ற பெயரில் இந்தியாவின் பல ஊர்களிலும் இருக்கிறார்கள். அதை ஒரு பெரிய வி‌ஷயமாக எடுத்து கொள்ளமாட்டேன். என்னைப்பொறுத்தவரையில் கேரள மக்கள் என்னை ஒரு மலையாளியாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் இதுவும் தான், அதுவும் தான். அதற்காக நான் அந்த ஊருக்கு முதல்–அமைச்சர் ஆகவேண்டுமா..? என்று கேட்டால் விருப்பம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

கேள்வி:– போட்டிபோடும் அரசியலுக்கு நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்?

பதில்:– போட்டி என்ற வார்த்தையே தவறானது. அரசியல் என்பது சேவை சம்பந்தப்பட்டது என்று நினைக்கும்போது, அதை சம்பாதிக்கக்கூடிய ஒரு அரங்கமாக நினைத்துக்கொள்வது தவறு என்று நான் நினைக்கிறேன்.

அரசியல் சிஸ்டம்

கேள்வி:– அரசியல்வாதிகள் சேவை மனப்பான்மையோடு இருக்கிறார்களா?

பதில்:– கண்டிப்பாக இல்லை என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா உங்களுக்கு.

கேள்வி:– அரசியல் சிஸ்டம் மாறவேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அதுபற்றி?

பதில்:– எல்லோரும் சொல்லக்கூடிய குற்றச்சாட்டைத்தான் அவரும் சொல்லியிருக்கிறார். வித்தியாசமாக ஒன்றும் சொல்லவில்லை. தப்பாகவும் ஒன்றும் சொல்லவில்லை.

கேள்வி:– அரசியலில் எது மாறவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

பதில்:– அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை முடிவு செய்து கொள்ளவேண்டும். இனிவரப்போகும் எம்.எல்.ஏ.க்களுக்கும், எம்.பி.க்களுக்கும், முதல்–அமைச்சர்களுக்கும் நல்ல சம்பளத்தை கொடுத்து எங்களுக்காக வேலை செய்கிறீர்கள் என்பதை நினைவூட்டவேண்டும். நீங்கள் தியாகம் செய்யுங்கள், சேவை செய்யுங்கள் என்று சொல்வதனால் அவங்க அந்தமாதிரி செய்வதாக நினைத்துக்கொண்டு வேற வி‌ஷயங்கள் செய்கிறார்களோ என்னவோ? எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற பல வி‌ஷயங்கள் மாற்றப்படவேண்டி இருக்கிறது.

ரஜினிகாந்துக்கு ஆதரவா?

கேள்வி:– அரசியலுக்கு வருபவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?

பதில்:– அது தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா..?

கேள்வி:– ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஆதரவு வழங்குவீர்களா?

பதில்:– ஆதரவை இந்த பத்திரிகையாளர் சந்திப்பிலா வழங்கமுடியும். தனியாகத்தானே வழங்கமுடியும்.

கேள்வி:– பிக் பாஸ் டி.வி. நிகழ்ச்சியால் விஸ்வரூபம்–2 மற்றும் சபாஷ் நாயுடு திரைப்பட பணிகள் பாதிக்குமா?

பதில்:– திரைப்பட வேலைகளுக்கு இன்னும் ஒரு மாத கால இடைவெளி இருக்கிறது. அதற்குள் டி.வி. நிகழ்ச்சிகான வேலைகளை முடித்துவிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story