‘உரிய நேரம் வரும் போது சொல்கிறேன்’ அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் பேட்டி


‘உரிய நேரம் வரும் போது சொல்கிறேன்’ அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 27 May 2017 9:45 PM GMT (Updated: 27 May 2017 9:05 PM GMT)

‘‘உரிய நேரம் வரும் போது சொல்கிறேன்’’ என அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?, மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஜெயலலிதா மரணத்தாலும், கருணாநிதி உடல்நல குறைவாலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் பூர்த்தி செய்ய வேண்டும் என அவருடைய ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 15–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை அவர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் கெட்டுப்போய் உள்ளது. போர் வரும். அப்போது நாம் அதை சந்திக்க தயார் ஆவோம்’’, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சத்தியநாராயணா மறுப்பு

ரஜினிகாந்தின் இந்த கருத்து தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பி உள்ளது. அவர் அரசியலுக்கு வருவதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விமர்சனமும் செய்தனர்.

இதனிடையே ரஜினிகாந்தின் நண்பர் ராவ்பகதூர் அளித்த பேட்டியில், ‘‘ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்’’, என உறுதிபட தெரிவித்தார்.

அதே சமயம் ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி. அவர் தனிக்கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை ஜூலை மாத இறுதியில் வெளியிடுவார்’’, என்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா பேட்டி அளித்ததாக தகவல் பரவியது.

ஆனால் அவர் அதனை மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று தான் தெரிவித்தேன்’’ என கூறினார்.

மும்பை புறப்பட்டார்

இந்த சூழ்நிலையில் ‘எந்திரன்’ 2–ம் பாகமான ‘2.0’ படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அடுத்த படமான ‘காலா’ படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுவதற்கு முன்பாக அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘காலா படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்காக மும்பை புறப்பட்டு செல்கிறேன். இது என் தொழில். அதை பார்க்க போகிறேன். என் தொழிலை பார்க்க தற்போது விடுங்கள். பிறகு சந்திக்கலாம்’’ என கூறிவிட்டு சென்றார்.

உரிய நேரம் வரும்

பின்னர் சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்தை செய்தியாளர்கள் மீண்டும் சூழ்ந்துகொண்டு அரசியல் பிரவேசம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவர், ‘‘விமானத்தில் ஏற நேரம் ஆகி விட்டது. எனவே உரிய நேரம் வரும் போது அது பற்றி சொல்கிறேன்’’ என கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அரசியல் தொடர்பான கேள்விகள், மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.


Next Story