ஜாக்குலின்: பிறந்தது இலங்கை.. வளர்த்தது இந்தியா..


ஜாக்குலின்: பிறந்தது இலங்கை.. வளர்த்தது இந்தியா..
x
தினத்தந்தி 28 May 2017 9:07 AM GMT (Updated: 28 May 2017 9:07 AM GMT)

இலங்கையில் பிறந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்திய திரை உலகில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறார்.

லங்கையில் பிறந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்திய திரை உலகில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறார். இந்தியில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வரும் இவருக்கு இலங்கை ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது தெரியுமா?

“சினிமாவிற்கு நான் வருவதற்கு முன்பே இலங்கை மக்கள் எனக்கு ‘மிஸ் ஸ்ரீலங்கா’ பட்டம் கொடுத்து கவுரவித்து விட்டார்கள். நான் இந்திய சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலங்கை மக்களின் ஆசை. நான் இந்தியாவிலிருந்தாலும் என் நாட்டைப் பற்றிய எண்ணம்தான் என் மனதிலிருக்கும். நாடு தாண்டி வந்து வெற்றி பெறுவது சவாலானது”

நடிகை பிரியங்கா சோப்ரா உங்களை புகழ்ந்துதள்ளியிருக்கிறாரே?

“ஆமாம். அவர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா போய் சாதித்தவர். என்னைப் போல நாடுவிட்டு நாடுபோய் சாதித்தவர் என்ற முறையில் என் சிரமங்கள் அவருக்கு புரிந்திருக்கிறது. முதலில் எனக்கு எல்லோருமே புதுமுகமாகத் தெரிந்தார்கள். யாரிடமும் நான் நெருங்கிப்பழகவில்லை. நெருங்கினாலும் மற்றவர்கள் என்னை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோரும் நெருங்கி வர சில வருடங்கள் ஆனது. அதுவரை ஏதோ ஒரு தனிமை என்னை சூழ்ந்திருந்தது. பிரியங்கா என்னிடம் பேசும்போது வெளிநாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். நம்முடைய திறமை தான் நமக்கு அறிமுகம் என்று கூறுவார்”

உங்கள் பார்வையில் இந்திய- இலங்கை சினிமாக்களை ஒப்பீடு செய்யுங்கள்?

“இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டு நாடுகளிலுமே சினிமா எடுப்பது பெரிய விஷயமல்ல. அதனை வியாபாரம் செய்வதுதான் பெரிய விஷயம். அந்த வகையில் பொருளாதார நிலையில் இலங்கை இன்னும் வளர்ச்சி பெற வேண்டியிருக்கிறது. அங்கு நடந்த தொடர் போர்களால் மக்கள் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அது முதலில் சீர்பட வேண்டும். அங்கு நடிப்பு கற்றுத்தர இந்தியா போன்று கல்லூரிகள் கிடையாது. சினிமா தியேட்டர்கள் கூட அதிகம் கிடையாது. சினிமாவை முன்னுக்கு கொண்டு வர கீழ் மட்டத்தி லிருந்து வேலை செய்ய வேண்டும். அதுதான் இன்றைய இலங்கை சினிமாவின் நிலை”

உங்களைப் பார்த்து வேறு யாராவது இந்தியாவிற்கு நடிக்க வர விரும்புகிறார்களா?

“நடிக்க வேண்டும் என்ற ஆசை பலர் மனதில் இருக்கிறது. அதற்காக என்னை போன்று யாரும் முயற்சிப்பதில்லை. பலருக்கு மொழிப் பிரச்சினை. நான் நடிப்பதைப் பார்த்து பலருக்கு ஆசைதான். வந்தால் வழி நடத்தவும் தயாராக இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் வரவில்லை. மக்கள் மனது போரை மறந்து அமைதியான வேறு வழியில் திரும்பவேண்டும் என்பதுதான் என் ஆசை”

ஹாலிவுட் போக வேண்டும் என்ற ஆசை உள்ளதா?

“எனக்கு இந்தியாவிலே போதுமான வேலை கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதுவே எனக்கு மகிழ்ச்சி. வருங்காலத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம். செய்து கொண்டிருக்கும் வேலைக்கு முதல் மரியாதை கொடுக்கவேண்டும் என்பது என் கொள்கை”

இந்தியாவில் உங்கள் திறமைக்கு மரியாதை கிடைக்கிறதா?

“கிடைக்கிறது என்பதற்கு நானே நல்ல உதாரணம். பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து என்று எங்கிருந்து வந்தாலும் பாலிவுட்டில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கிறது”

உங்கள் அழகுதான் உங்கள் திரை உலக வெற்றிக்கு காரணமா?


“அழகு தேவையான ஒன்றுதான். ஆனால் அது மட்டுமே வெற்றிக்கு போதுமானதல்ல. பொதுவாக அழகுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவிற்கு வர விரும்புவார்கள். அது நியாயமான ஆசை தான். ஆனால் நடிப்புத் திறனும் தேவை. அனுபவம் இல்லாவிட்டாலும் ஆர்வமாவது இருக்கவேண்டும்”

இலங்கையில் நடிப்பு கல்லூரி இல்லை. நடிப்பை எப்படி கற்றுக் கொண்டீர்கள்?

“எனக்கு முன்னோடியாக நடிப்புத்துறையில் இருந்தவர்களை பார்த்துதான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன். நான் நிறைய சினிமாக்கள் பார்ப்பேன். எல்லோருடைய நடிப்பையும் கூர்ந்து கவனிப்பேன். அதனால் எனக்கும் நடிக்க ஆசை வந்தது. என்னுடைய நடிப்பு, எனக்கு பின்னால் நடிக்க வருபவர் களுக்கு பாடமாக அமைய வேண்டும். எல்லோரும் ரசிக்கும்படி இருக்கவேண்டும். திரையில் பார்த்து எனக்கு நானே பெருமை கொள்ளவேண்டும்”

நீங்கள் நடிகையானதால் உங்களுக்கு என்ன லாபம்?


“நடிக்கவேண்டும் என்ற ஆசையால் என் அழகை நன்றாக பராமரித்துக் கொண்டேன். நடிக்கும் ஆசை உள்ளவர்கள் எப்போதும் தங்களை அழகாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். அழகு என்பது ஒரே நாளில் வந்துவிடாது. தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது. நான் நடிக்க வந்ததால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்”


Next Story