மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்


மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்
x
தினத்தந்தி 28 May 2017 10:45 PM GMT (Updated: 28 May 2017 3:38 PM GMT)

‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் நெல்லை தமிழ் பேசி நடித்தார்.

சென்னை,

பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 164–வது படம் ஆகும். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

கதாநாயகியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவிகேளா, சயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சுகன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

படப்பிடிப்பு

காலா படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் பூஜை போட்டு சாமி கும்பிட்டு விட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி, ஜிப்பா, கண்ணாடி அணிந்து தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. சமுத்திரக்கனியும் அவருடன் இணைந்து நடித்தார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் நெல்லை தமிழ் பேசி நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் ‘பாபநாசம்’ படத்தில் நெல்லை தமிழ் பேசி நடித்துள்ளார்.

‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவிலும் தாராவி அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

காலா படத்தின் கதை குறித்து யூகமான செய்திகள் இணையதளங்களில் பரவி வருகிறது. ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இதனை ரஜினிகாந்த் தரப்பில் மறுத்தனர்.

நெல்லை குடும்பம்

நெல்லையில் இருந்து பிழைப்பு தேடி மும்பை சென்று தாதாவாக மாறிய ஒருவரை பற்றிய கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. குளம் குட்டையாக கிடந்த தாராவி பகுதியில் மண், கற்களை போட்டு குடிசைகள் அமைத்து, தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, குடிசைகளை சேதப்படுத்திய மராட்டியர்களை எதிர்த்து போராடிய அந்த தாதாவின் வீரதீர வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது என்று கூறப்படுகிறது.


Next Story