சினிமா கேள்வி - பதில் : குருவியார்


சினிமா கேள்வி - பதில் : குருவியார்
x
தினத்தந்தி 25 Jun 2017 6:32 AM GMT (Updated: 25 Jun 2017 6:32 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, ரஜினிகாந்த் அடுத்த படத்தில் திரிஷாவை ஜோடியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. என் ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா? (எஸ்.சீனிவாசன், வேலூர்)

ரசிகர்களின் விருப்பங்களை மதிப்பவர், ரஜினிகாந்த். உங்கள் விருப்பம் பற்றியும் அவர் பரிசீலிப்பார்!

***

குருவியாரே, கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடல் எது, அந்த பாடல் இடம்பெற்ற படம் எது? (எஸ்.பாரதி மணி, சுத்தமல்லி)

கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடல், “பொன்மாலைப் பொழுது...இது ஒரு பொன்மாலைப் பொழுது...” அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘நிழல்கள்.’

***

நாக சைதன்யாவுக்கும், தனக்கும் உள்ள காதல் தெய்வீகமானது என்று சமந்தா கூறுகிறாரே...? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

காதல் மயக்கம் தெளியும் வரை, அது தெய்வீக மானதாகவே தெரியும்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனும், ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கரும் அண்ணன்- தம்பியாக நடித்து இருக்கிறார்களா? (ஆர்.ஜெயதுரை, அருப்புக்கோட்டை)

இருவரும் ‘குலமா குணமா’ என்ற படத்தில் அண்ணன்-தம்பியாக நடித்து இருந்தார்கள்!

***

குருவியாரே, ‘வனமகன்’ படத்தில் இணைந்து பணிபுரிந்த ஜெயம் ரவியும், டைரக்டர் விஜய்யும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிவார்களா? (எஸ்.கே.சுமந்த், வந்தவாசி)

‘வனமகன்’ படத்தில் பணிபுரிந்தது பற்றி இருவரும் கூறும்போது, “ஒரு சகோதரருடன் இணைந்து பணிபுரிந்தது போல் உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே இரண்டு பேரும் மறுபடியும் இணைய வாய்ப்பு இருக்கிறது!

***

அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் இடையே காதல் இருந்து வருகிறதா? (என்.ஜெயந்த், உளுந்தூர்பேட்டை)

இரண்டு பேருக்கும் இடையே நட்பு இருந்து வருகிறதாம். அதை காதல் என்று தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என் கிறார்கள் அனுஷ்காவும், பிரபாசும்!

***

குருவியாரே, தமிழ் பட உலகின் ‘நம்பர்-1’ கதாநாயகி நயன்தாராவா? காஜல் அகர்வாலா? (வி.தங்கமணி, நாகர்கோவில்)

பந்தய மைதானத்தில், கேரள குதிரை முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை முந்துவது போல் மும்பை குதிரை படுவேகமாக ஓடி வருகிறது. பந்தய முடிவு, வெகு விரைவில் தெரிந்து விடும்!

***

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த ஊர் எது? (கே.சோனியா, திருபுவனம்)

ராஜபாளையம்!

***

குருவியாரே, டைரக்டர் ஷங்கர், டைரக்டர் ராஜமவுலி இருவரில் சிறந்த டைரக்டர் யார்? (ஜெ.லத்தீப், ஆம்பூர்)

ஷங்கர் சிறந்த டைரக்டர் என்பதை ஏற்கனவே நிரூபித்து விட்டார். ராஜ மவுலி சிறந்த டைரக்டர் என்பதை சமீபத்தில் நிரூபித்து இருக்கிறார்!

***

“பாட்டுப்பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா பால் நிலாவைப் போல வந்த பாவை அல்லவா...” என்ற பாடல் இடம்பெற்ற படம் எது? அந்த பாடலை பாடியவர்கள் யார்? பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்? (எஸ்.அக்கீம், கரூர்)

அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘தேன்நிலவு.’ பாடலை பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா-பி.சுசீலா. பாடல் காட்சியில் நடித்தவர்கள்: ஜெமினிகணேசன்-வைஜயந்திமாலா!

***

குருவியாரே, பார்த்திபன் நடித்து இயக்கிய படங்களில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஓடி அமோக வெற்றி பெற்று விருதுகளை குவித்த படம் எது? (மா.பழனிச்சாமி, உடுமலைப்பேட்டை)

‘புதிய பாதை!.’

***

சந்தானம் இனிமேல் நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டாரா? (கா.சாந்தகுமார், நசரத் பேட்டை)

சந்தானம் இனிமேல் நகைச்சுவை நாயகனாக மட்டுமே நடிப்பாராம்!

***

குருவியாரே, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ எந்த படத்தின் தழுவல்? (ஜி.பிரபாகர், காஞ்சிபுரம்)

‘சச்சா ஜுட்டா’ என்ற இந்தி படத்தின் தழுவல்!

***

சாய் தன்ஷிகா எத்தனை மொழி படங்களில் நடித்து வருகிறார் (கே.பார்த்தசாரதி, சேலம்)

சாய் தன்ஷிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் நடித்து வருகிறார். இந்தி படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடை பெறுகின்றன!

***

‘நன்றி’ படத்தில் அறிமுகமான அர்ஜுன் இதுவரை எத்தனை படங்களில் நடித்து முடித்துள்ளார்? தற்போது அவர் நடித்து வரும் ‘நிபுணன்’ எத்தனையாவது படம்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அர்ஜுன் இதுவரை 149 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். ‘நிபுணன்,’ அவருடைய 150–வது படம்!

***

குருவியாரே, எமிஜாக்சன் மார்க்கெட் நிலவரம் எப்படியிருக்கிறது? (எஸ்.அரிகிருஷ்ணன், கோணலூர்)

தமிழில் மந்தமாக இருக்கும் எமிஜாக்சன் மார்க்கெட், ரஜினிகாந்துடன் அவர் நடித்து வரும் ‘2.0’ படம் வெளிவந்தால் உச்சத்துக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

***

குருவியாரே, கேத்தரின் தெரசா, கீர்த்தி சுரேஷ் இடத்தை பிடித்து விடுவாரா? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

கீர்த்தி சுரேஷ் தமிழ் பட உலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகிலும் வலுவாக காலூன்றி விட்டார். அவருடைய இடத்தை கேத்தரின் தெரசா பிடிப்பது, சிரமம்!

***

சத்யராஜின் 100–வது படம் எது? அதை இயக்கியவர் யார்? (எஸ்.அர்‌ஷத் பயாஸ், குடியாத்தம்)

சத்யராஜின் 100–வது படம், ‘வில்லாதி வில்லன்.’ அந்த படத்தின் இயக்குனரும் அவர்தான்!

***

Next Story