நல்ல சித்தி.. நெருங்கிய தோழி..! கரீனா கபூரின் குழந்தை வளர்ப்பு அனுபவங்கள்


நல்ல சித்தி.. நெருங்கிய தோழி..! கரீனா கபூரின் குழந்தை வளர்ப்பு அனுபவங்கள்
x
தினத்தந்தி 20 Aug 2017 8:09 AM GMT (Updated: 20 Aug 2017 8:08 AM GMT)

இரண்டாவது திருமணம் செய்துகொள்பவர்களிடத்தில் குழந்தைகளை பற்றிய கவலைகள் குடிகொள்ளும். எந்தவொரு குழந்தையும் புதிதாக வந்த பெண்ணை தாயாக ஏற்றுக்கொள்ள தயங்கும்.

ரண்டாவது திருமணம் செய்துகொள்பவர்களிடத்தில் குழந்தைகளை பற்றிய கவலைகள் குடிகொள்ளும். எந்தவொரு குழந்தையும் புதிதாக வந்த பெண்ணை தாயாக ஏற்றுக்கொள்ள தயங்கும். தனது அம்மா இருந்த ஸ்தானத்தில் வேறு ஒரு பெண்ணை வைத்து பார்க்க அவர்களது மனம் இடம் கொடுக்காது. அம்மா இல்லாத வெற்றிடம் மனதில் வெறுமையை ஏற்படுத்தும். அதன் தாக்கமாக வெளிப்படும் தவிப்பும், ஏக்கமும் அவர்கள் மன நிலையை வெகுவாக பாதிக்கும். குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது போன்றதொரு உணர்வு அவர்களை குடிகொள்ளும். குடும்பத்துக்குள் புதிதாக நுழையும் பெண், குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது முக்கியம். இல்லாவிட்டால் குழந்தைகளுக்கும், புதிதாக வந்த பெண்ணுக்கும் இடையே மனக்கசப்பும், மோதலும் பின்தொடரும். குழந்தையின் உள்ளுணர்வுகளுக்கு செவிமடுத்து, அதற்கேற்ப செயல்படுபவர்கள் அவர்களின் அம்மா ஸ்தானத்திற்கு இணையான இடத்தில் இடம் பிடித்து விடுகிறார்கள். அதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர் பிரபல நடிகை கரீனா கபூர். இவர் பிரபல நடிகர் சையிப் அலிகானின் இரண்டாவது மனைவி.

சையப் அலிகானின் முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் கரீனாவிடம் நெருக்கமாகவும், அன்பாகவும் பழகு கிறார்கள். இதுபற்றி கரீனா கபூர் சொல்கிறார்:

“குழந்தைகளின் மனநிலை எனக்கு தெரியும். நான் அவர்களுடைய அம்மாவின் இடத்தை கேட்கவில்லை. நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று சொன்னேன். அவர்களும் சம்மதித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக என் அன்பை புரியவைத்தேன். கணவன்-மனைவிக்குள் எவ்வளவு பிரச்சினை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கும், அம்மாவிற்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது.

கணவன்-மனைவி பிரிவு என்பது குழந்தைகளை மிகவும் பாதிக்கும் விஷயம். அவர்களுடைய மன வேதனையை யாரும் புரிந்துகொள்வதில்லை. உணவு, உடை, கல்வி இதுமட்டும்தான் அவர்கள் தேவையா? அதையும் தாண்டி யாராலும் நிரப்ப முடியாத ஒரு விஷயம் உள்ளது. அதுதான் தாயின் அன்பு, அரவணைப்பு. அந்த அன்பு விலகிப்போகும் பட்சத்தில் அவர்கள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். இந்த நிலை எந்த குழந்தைக்கும் வரக்கூடாது.

அதோடு அம்மாவின் இடத்தில் புதிதாக யாராவது வந்துவிட்டால் அந்த வருத்தம் முழுவதும் வெறுப்பாக மாறிவிடும். காரணமே இல்லாமல் சித்தியாக இருப்பவர்கள் அந்த வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும். குழந்தைகள் மீது வெறுப்பை காட்ட யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் அலட்சியம் புதியவர்கள் மனதை பாதித்துவிடும். சித்திக்கும்-குழந்தைகளுக்கும் இடையே எப்போதும் பெரிய போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். கொஞ்சம் அமைதியாக சிந்தித்தால் இதை தவிர்க்கலாம். ஏற்கனவே தாயை இழந்து காயம்பட்ட மனது மேலும் புண் படும்படி நடந்துகொள்ளக்கூடாது. சித்திகளின் வாழ்க்கை ஒரு சவால்தான்.

சையிப்பின் குழந்தைகள் என்னை ஒரு நல்ல தோழியாக ஏற்றுக்கொண்டார்கள். அதுவே எனக்கு மனநிறைவை தருகிறது. திருமணத்திற்கு முன்பு சையிப் என்னிடம் பேசும்போது ‘என் இரண்டு குழந்தைகளை எப்படி சமாளிக்கப் போகிறாய் என்பதுதான் எனக்கு யோசனையாக இருக்கிறது’ என்றார். அப்போதி லிருந்து நான் அவர்கள் இருவரைப் பற்றிதான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

நல்ல சித்தியாக இருப்பது ரொம்ப கஷ்டம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் சித்திகள் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஒரு காலத்தில் கொடுமைக்கு உதாரணமாக சித்தியின் உறவு சித்தரிக்கப்பட்டது. அவர்கள் குழந்தைகளின் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் சுபாவம் குறைந்தவர்களாக இருந்தார்கள். அதனால் குழந்தைகளுக்கும் சித்திகளுக்கும் இடையே ஒருவித மோதல் போக்கு இருந்து கொண்டே இருந்தது. குழந்தைகள் சொல்வதை தான் அனைவரும் நம்புவார்கள். சித்திகள் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் சந்தேக கண்ணோடு தான் பார்க்கப்பட்டார்கள்.

இப்போதைய பெண்கள் சாமர்த்தியமாக நடந்து குழந்தைகளை தன் வசப்படுத்தி விடுகிறார்கள். இன்றைய பெண்கள் வெளி யுலகை பார்க்கிறார்கள். பல விஷயங்கள் அவர்களுக்கு புலப்படுகிறது. பெரிய பிரச்சினைகளை எளிமையாக எப்படி கையாளுவது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதுவே இன்றைய சித்திகளின் வெற்றிக்கு காரணம்” என்கிறார், கரீனா.

தாயை இழந்த குழந்தைகள் சித்தியை மாற்றந்தாய் எண்ணத்தோடு பாவிப்பதற்கு அவர்களின் மனநிலையே காரணம். அதுபற்றி பிரபல மனநல மருத்துவர் யூசுப் கூறுகிறார்:

“மற்றவர்களை புரிந்துகொள்ளும் திறன் குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும். அவர்களிடத்தில் அதீத கற்பனைகள் சூழ்ந்திருக்கும். இதையெல்லாம் அவர்கள் கடந்து வருவது கஷ்டம். பெரியவர்கள் இந்த நிலைகளை கடந்தவர்கள். அவர்கள்தான் குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்ளவேண்டும். அந்த இருட்டு உலகிலிருந்து அவர்களை மீட்க முயற்சிக்கவேண்டும். அதற்கு பொறுமையும், கால அவகாசமும் தேவை. அவர்களுக்கு சரிசமமாக நடந்துகொள்ளக்கூடாது. அவர்களுடைய பயங்கர கற்பனைகளுக்கு உருவம் கொடுத்ததை போல உருமாறிவிடக் கூடாது.

சித்தியாக வருகிறவர்கள் அந்தக் குடும்பத்தில் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்கள். அதனால் நல்லவை கெட்டவைகளை அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் அவர்களிடம் இருக்கும். ஆனால் குழந்தைகள் அதனை புரிந்துகொள்ளாமல், எதிரியாக நினைக்க முற்படும் போதுதான் எதிர்விளைவுகள் ஏற்படும். இந்த நிலைக்கு அப்பாவும் ஒருவகையில் காரணம் என்பதை மறந்து, முழுக்க முழுக்க சித்தியை வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இது தவறு என்பது நாளாக, நாளாக புலப்படும். அதுவரை சித்தி பொறுமை காக்க வேண்டும். குழந்தைகள் எல்லா உறவுகளையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் சித்தி என்ற உறவு மட்டும் கேள்விக் குறியாகவே இருப்பதற்கு மனதில் தோன்றும் ஒருவித காரணமற்ற பயமே காரணம்” என்கிறார் யூசுப்.

தாயை பிரிந்த வேதனையில் தவிக்கும் குழந்தைகள் மனதில் இடம் பிடிப்பதற்கு சித்தி ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு பொறுமையும், சகிப்பு தன்மையும் அவசியம் என்பதும் கரீனா கபூரின் கருத்தாக இருக்கிறது.

“எந்த உறவாக இருந்தாலும் நம்மை ஏற்றுக்கொள்ள சற்று அவகாசம் தேவை. அதுவரை பொறுத்திருக்கத்தான் வேண்டும். உறவுகள் நம்மை புரிந்து ஏற்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும், அதுவும் குழந்தைகளின் பக்குவமற்ற மனதில் நல்லது, கெட்டது பற்றி புரிய சில காலமாகும். சித்தி என்பவள் தன் தாயின் இடத்தை பறித்துக்கொள்ள வந்தவள் என்பது போன்ற உணர்வுதான் அவர்கள் மனதில் இருக்கும். அது தவறு என்பது புரிந்துவிட்டால் சித்தியின் மீதிருக்கும் வெறுப்பு நீங்கிவிடும். என் மகன் இப்ராஹிம் என்னிடம் மிகவும் அன்பாக பழகுவான். அவனிடம், ‘என்னை உன் அம்மா இடத்தில் வைத்து பார்க்க முடியாவிட்டால் பரவாயில்லை. நல்ல தோழியாகவாவது நினைத்துக்கொள்’ என்றேன். அவன் எதுவும் பேசாமல் என்னைப் பார்த்து சிரித்தான். அதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றி. அவனைத் தொடர்ந்து மகள் சாராவும் என்னிடம் நெருங்கி வந்து விட்டாள். அவர்களிடம் ‘நான் உங்களுக்கு அம்மாவாக இருக்கவேண்டும் என்று அடம்பிடிக்க மாட்டேன். உங்களை பாதுகாக்கும் ஒரு வேலைக்காரியாக இருக்கிறேன்’ என்று சொன்னேன். இருவரும் என்னை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள். திருமண ஏற்பாடுகளை தன் அப்பாவோடு இருந்து பார்த்துக் கொண்டார்கள். அந்த அளவுக்கு மனதளவில் பக்குவப்பட்டு விட்டார்கள். அதுதான் என் மகிழ்ச்சி” என்கிறார் கரீனா.

கரீனாவை பற்றி சையிப் குறிப்பிடுகையில், “கரீனா என் குழந்தைகளை நேசிப்பதுதான் என் குடும்பத்தாரை மிகவும் கவர்ந்த விஷயம். எல்லா விஷயத்திலும் குழந்தைகளும் பங்கேற்க வேண்டும் என்று அவர் விரும்புவார். குழந்தைகளை மதிக்கவும், நேசிக்கவும் தெரிந்த நல்ல சித்தி” என்கிறார். 

Next Story