‘பள்ளிப்பருவத்திலே’ பற்றி கமல்ஹாசன்...


‘பள்ளிப்பருவத்திலே’ பற்றி கமல்ஹாசன்...
x
தினத்தந்தி 21 Sep 2017 10:30 PM GMT (Updated: 21 Sep 2017 7:38 AM GMT)

சிற்பியின் மகன் நந்தன் ராம் ‘பள்ளிப்பருவத்திலே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கோகுலம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சிற்பியின் மகன் நந்தன் ராம் ‘பள்ளிப்பருவத்திலே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இதில், நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, ஆர்.கே.சுரேஷ், பொன்வண்ணன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை வாசுதேவ் பாஸ்கர் டைரக்டு செய்துள்ளார். வேலு தயாரித்து இருக்கிறார்.

படத்தின் பாடல்களை நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் வெளியிட்டு, பள்ளிப்பருவ நாட்கள் தனக்கு நினைவுக்கு வந்ததாக கூறியிருக்கிறார். பாடல்கள் வெளியிட்டு விழாவில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, ‘‘இந்த படத்தில் பருவ சிட்டுகள் இடையே அரும்பும் காதலை யதார்த்தமாக படமாக்கி உள்ளனர். எனக்கும் பள்ளிப்பருவத்தில் காதல் வந்து இருக்கிறது. அந்த காதல் சுவாரஸ்யமானது. காதல் கடிதங்களும் பகிர்ந்து கொண்டோம். பிறகு அந்த காதல் விவகாரம் பஞ்சாயத்துவரை சென்று முறிந்து போனது. பள்ளி காதலில்தான் காதலுக்காக எதையும் செய்யும் பலமும், துணிவும் வரும். காதலிக்கிறவர்களுக்கும் காதலிக்கப் போகிறவர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்’’ என்றார். 

டைரக்டர் வாசுதேவ் பாஸ்கர் சொல்கிறார்:–

‘‘டாக்டர், என்ஜினீயர் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய ஒரு ஆசிரியர் தனது மகனை எப்படி வளர்த்தார்? என்பது, கதை. தஞ்சை ஒரத்த நாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் கதாநாயகனின் தந்தையாக ஆசிரியர் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளார். அவர் நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். ஏற்கனவே கொடுத்த சம்பளத்தில் சில லட்சங்களை அவர் திருப்பி கொடுத்து விட்டார். படத்தை பார்த்த டைரக்டர் பாரதிராஜா மண்வாசனையுடன் இருப்பதாக பாராட்டினார். பாடல்கள் எழுதிய வைரமுத்து, ‘பள்ளிப்பருவத்திலே’ படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார்.’’

Next Story