‘யாகம்’ படத்தில் நெப்போலியன் ஜோடி ஜெயப்ரதா!


‘யாகம்’ படத்தில் நெப்போலியன் ஜோடி ஜெயப்ரதா!
x
தினத்தந்தி 21 Sep 2017 11:00 PM GMT (Updated: 21 Sep 2017 7:57 AM GMT)

டைரக்டர் மணிரத்னத்திடம் உதவி டைரக்டராக இருந்த என்.நரசிம்மா, ‘யாகம்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.

ஆகாஷ்குமார் கதாநாயகனாகவும், மிஸ்தி சக்ரவர்த்தி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

நெப்போலியன் கதாநாயகனுக்கு தந்தையாக ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெயப்ரதா நடிக்கிறார். இருவரும் கணவன்–மனைவியாக நடித்து வருகிறார்கள். இவர்களுடன், நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், தணிகலபரணி, சாயாஜி ஷின்டே, புனீத் இஸ்ஸார், சரந்தீப் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். கோட்டி, இசையமைக்கிறார். அஷ்வனி குமார் சகாதேவ் தயாரிக்கிறார்.

தெய்வ சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன், சில வருட இடைவெளிக்குப்பின் நடிக்கும் படம், இது. ‘யாகம்’ படத்தில் நடிப்பது பற்றி அவர் சொல்கிறார்:–

‘‘நான் அமெரிக்காவில் குடியேறியது நிறைய பேருக்கு தெரியும். சிறந்த கதைகள், மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் நரசிம்மா போனிலேயே ஒரு மணி நேரம் கதை சொன்னார். பிடித்து இருந்தது. நடிக்க வந்து விட்டேன். எனக்கு மனைவியாக நடிப்பவர் யார்? என்று கேட்டேன். ஜெயப்ரதா என்றார்கள். உடனே சம்மதம் சொல்லி விட்டேன்.

ஜெயப்ரதா ‘எம்.பி.’யாக இருந்தபோது, நானும் ‘எம்.பி’யாக இருந்தேன். அவரும், ஹேமாமாலினியும் பாராளுமன்றத்துக்கு வரும்போது, எம்.பி.க்களில் நிறைய பேர் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஜெயப்ரதாவுடன் ஜோடியாக நடித்ததை பெருமையாக கருதுகிறேன்.’’

Next Story