பி.வாசு டைரக்‌ஷனில் ‘ஆப்தமித்ரா’ படத்தின் 2–ம் பாகம் தொடங்குகிறது


பி.வாசு டைரக்‌ஷனில் ‘ஆப்தமித்ரா’ படத்தின் 2–ம் பாகம் தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 Sep 2017 11:30 PM GMT (Updated: 21 Sep 2017 8:04 AM GMT)

பி.வாசு டைரக்டு செய்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற கன்னட படம், ‘ஆப்தமித்ரா.’ இந்த படத்தின் 2–ம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது.

‘ஆப்தமித்ரா’ படத்தில் விஷ்ணுவர்தன் கதாநாயகனாக நடித்து இருந்தார். அவர் மரணம் அடைந்ததால், இரண்டாம் பாகம் படத்தில், வேறு கதாநாயகன் நடிக்கிறார். அநேகமாக, ரவிச்சந்திரன் நடிப்பார் என்று தெரிகிறது.

கதாநாயகி மற்றும் நடிகர்–நடிகைகள் முடிவாகவில்லை. ஒவ்வொரு படத்தையும் இயக்குவதற்கு முன், பி.வாசு சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, கடந்த 18–ந் தேதி அவர் சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வணங்கினார். அவர் சென்னை திரும்பியதும், படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்.

‘ஆப்தமித்ரா’ படம்தான் சில மாற்றங்களுடன், ‘சந்திரமுகி’யாக தமிழில் தயாரானது. ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தார். அவருடன் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேல் மற்றும் பலரும் நடித்தனர். பி.வாசு டைரக்டு செய்திருந்தார். அந்த படம், சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

தற்போது, கன்னடத்தில் தயாராகும் ‘ஆப்தமித்ரா–2’ கர்நாடகாவில் வெற்றி பெற்றால், ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story