திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது..


திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது..
x
தினத்தந்தி 24 Sep 2017 7:24 AM GMT (Updated: 24 Sep 2017 7:24 AM GMT)

“எனது பெயரை அறிவித்து, மேடைக்கு அழைத்தபோது முதலில் என்னால் நம்பமுடியவில்லை. என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டு, மேடைக்கு சென்று விருதினை பெற்றுவந்தேன்”

“எனது பெயரை அறிவித்து, மேடைக்கு அழைத்தபோது முதலில் என்னால் நம்பமுடியவில்லை. என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டு, மேடைக்கு சென்று விருதினை பெற்றுவந்தேன்” என்று தனு குரியன், மான்ட்ரீட் சர்வதேச திரைப்பட விழாவில் முழுநீள சினிமா வரிசை யிலான ஆங்கில பட பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். ஷோம் சுக்லாதாஸ் என்பவர் இயக்கிய ‘ஒயிட் பீ’ என்ற சினிமாவில் நடித்ததற்காக தனுவுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் இங்கிலாந்தில் வசிக்கிறார்.

“பள்ளியில் நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். அதை தவிர்த்து நடிப்பு சார்ந்த அனுபவம் எதுவும் எனக்கு கிடையாது. சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையும் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் என் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள்தான் வழக்கமாக நடந்துகொண்டிருக்கின்றன. பெங்களூருவில் பிரபலமான பத்திரிகை ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்தேன். அங்கே பரத்தை சந்தித்தேன். இரண்டு பேரும் ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்தோம். எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பிறகு அவர் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரிவுக்கு தலைமை அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார். அதனால் நாங்கள் பெங்களூருவில் இருந்து லண்டனில் குடியேறினோம்.

சினிமா துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், அந்த துறைசார்ந்த விவாதங்களில்கூட நான் கலந்துகொண்டதில்லை. எனது சகோதரி லதாவும், அவரது கணவர் ராஜீவ்குமாரும் சினிமா துறையில் இருக்கிறார்கள். அவர்கள் சினிமாவில் தேசிய அளவிலான விருதுகளை பெற்றிருந்தாலும், எனக்கு சினிமா மீது மோகம் உருவானதில்லை. நான் நல்ல வேலைக்காகவும், அதன் மூலம் என் திறமையை வளர்த்துக்கொள்வதற்காகவுமே லண்டன் சென்றேன். ஆனால் விதி என்னை சினிமாவை நோக்கித்தான் இழுத்துச்சென்றது.

‘ஒயிட் பீ’ சினிமாவின் இயக்குனர் சுக்லாவுடன் எனக்கு சில மாத பழக்கம்தான். அவரது ஐந்தாவது படம் இது. அவர் சினிமா மீது வைத் திருந்த பற்று என்னை வியக்கவைத்தது. ஆனாலும் அவரது துறை பற்றி நான் ஒருமுறைகூட கருத்து தெரிவித்ததில்லை. அதற்கான அவசியம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. ஒருநாள் திடீரென்று அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது. முகநூலில் நான் பதிவு செய்திருந்த எனது போட்டோ அவரை கவர்ந்திருக்கிறது. ‘எனது சினிமாவின் நாயகிக்கு உங்கள் முகம்தான்..’ என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

போனில் அவர் சொன்ன தகவல் எனக்கு ஒருவிதத்தில் அதிர்ச்சியைதான் தந்தது. ஏன்என்றால் அவர் இயக்கும் சினிமாக்கள் ஆழமான கதையம்சம் கொண்டவை. கடினமாக உழைத்து அந்த சினிமாவை தூக்கி நிறுத்தவேண்டியவள் அந்த கதையின் நாயகிதான். அதனால் நான் உடனே சம்மதம் தெரிவிக்கவில்லை. நான் சம்மதம் தெரிவிக்காததற்கான காரணங்களை சொன்னபோது, அதற்கெல்லாம் விளக்கமாக அவர் பதிலளித்தார். அப்போதுதான் அவர் என்னை கதாநாயகியாக அங்கீகரித்திருந்ததை நான் உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையும் எனக்கு ஒருவிதத்தில் மனஅழுத்தத்தை தந்திருந்தது. அதில் இருந்து விடுபடவேண்டும் என்றும் நான் விரும்பினேன்.

நான் சினிமாவில் நடிப்பதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ‘தெரியாத தொழிலிலும் தைரியமாக சிலர் இறங்கிவிடுவார்கள். அவர்களில் ஒருவராக நீ இருக்கவேண்டும்’ என்று பரத் சொன்னார். அதை தொடர்ந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த சினிமாவில் நடிப்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டேன்.

அந்த படத்தின் கதாநாயகன் சுமந்தோ சட்டோபாத்தியாவும், சுக்லாவும் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்தார்கள். நான் லண்டனில் இருந்து அங்கு போய் சேர்ந்தேன். முதல் மாதம் நடிப்பு பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது நிறைய சினிமாக்கள் பார்த்தேன். பலரிடம் பேசினேன். நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி உணர்ந்தேன். இயக்குனருக்கு திருப்தி ஏற்பட்ட பின்பே படப்பிடிப்பை தொடங்கினார்.

‘நீங்கள் நடிப்பதுபோல் ஒருபோதும் உணரவேண்டாம். அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டு அதுவாக கடந்துபோனால்போதும்’ என்று எங்களுக்கு சொல்லியிருந்தார்கள். எங்கள் இஷ்டம்போல் நடிக்கவும், பேசவும் அனுமதி கொடுத்தார்கள். அதனால் நடிப்பது போன்ற உணர்வே எங்களுக்கு தோன்றவில்லை.

காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவருக்கு இடையே ஏற்படும் அதிருப்திகளும், பிரச்சினைகளும் எப்படி அவர்களை விவாகரத்தை நோக்கி கொண்டு செல்கிறது என்பதுதான் ‘ஒயிட் பீ’யின் கதை. எப்படி எல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள ஒரு வருடம் திருமண பந்தத்தில் இருந்து விலகி வாழ்வார்கள். அப்போது அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதை சினிமா விளக்குகிறது.

மான்ட்ரீட் உலக படவிழாவில் சிறந்த நடிகை விருது மட்டுமின்றி, மேலும் கூடுதலாக மூன்று விருதுகளையும் ஒயிட் பீ பெற்றிருக்கிறது. சிறந்த நடிகை விருது மூலம் எனக்கு பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது” என்கிறார், தனு.

இங்கிலாந்து நடிகையான லில்லி கோலின் மற்றும் ஐரிஷ் நடிகை பியோனா ஆகியோர் பெயர் களும் சிறந்த நடிகைக்கான தேர்வு பட்டியலில் இருந்தது. அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு திறமை மூலம் முன்னேறி விருதை தட்டிச்சென்ற தனுவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. 

Next Story