சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் சாலையோர உணவகம் நடத்தும் நடிகை


சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் சாலையோர உணவகம் நடத்தும் நடிகை
x
தினத்தந்தி 12 Oct 2017 5:33 AM GMT (Updated: 12 Oct 2017 5:33 AM GMT)

சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை கவிதா லட்சுமி சாலையோர உணவகத்தை நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

பாலக்காடு,

கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா லட்சுமி. இவர் 1996-ல் மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி மோகன்லால், மம்முட்டி உள்பட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர். இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் என்பதால் சினிமா வாய்ப்பு கிடைத்த பிறகும் நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் இவருக்கு பல டி.வி. தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. குடும்பபாங்கான வேடங்களில் நடித்ததால் டி.வி. தொடர்கள் மூலமும் இவர் பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

பிரபல நடிகையான இவருக்கு நாளடைவில் சினிமா வாய்ப்புகள் குறையத்தொடங்கின. இதனால் முழு நேர டி.வி. நடிகையாக மாறினார். பிறகு அவருக்கு திருமணமானது. இவருக்கு ஆகாஷ் என்ற மகனும் உமாபாரதி என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு கணவர் வீடான நெய்யாற்றின்கரையில் கவிதா லட்சுமி வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது மகன் ஆகாஷ் வெளிநாட்டில் படிப்பதற்காக நடிகை கவிதா லட்சுமி முயற்சி எடுத்தார். அதற்காக ஒரு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் மகனை லண்டனுக்கு அனுப்பினார். இதற் காக அந்த நிறுவனத்திற்கு ரூ.36 லட்சம் வரை அவர் கொடுத்தார். தொடர்ந்து மகனின் படிப்பு செலவுக்கு ரூ.50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உருவானதால் அவர் கடன் வாங்கி அந்த தொகையை செலுத்தினார். கால ஓட்டத்தில் சினிமா, டி.வி. வாய்ப்புகள் அவரது கையைவிட்டு நழுவியது. அதே சமயம் கடன் தொல்லை அதிகரித்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும், கடனை அடைக்க வேறு வழி இல்லாததாலும் நடிகை கவிதா லட்சுமி நெய்யாற்றின் கரை பகுதியில் சாலையோரத்தில் உணவகம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது அதன் மூலம் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தனது மகளை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்க வைத்து வருகிறார். அவரது மகனும் படிப்பு முடிந்து வேலை கிடைக்காமல் உள்ளார்.

வறுமையில் வாடும் நடிகை கவிதா லட்சுமிக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது எனக்கு சினிமா பட வாய்ப்புகள் குறைந்ததாலும் மகனின் படிப்பு காரணமாக கடன் ஏற்பட்டதாலும் தற்போது உணவு விடுதியில் கிடைக்கும் பணம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது உடலில் சக்தி இருக்கும் வரை யாரையும் எதிர்பார்க்காமல் எனது குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றார்.

Next Story