விஜய்யின் ‘மெர்சல்’ படம் புதிய சாதனை ஜி.எஸ்.டி. வரி குறித்து வசனம் பா.ஜ.க பாய்ச்சல்


விஜய்யின் ‘மெர்சல்’ படம் புதிய சாதனை ஜி.எஸ்.டி. வரி குறித்து வசனம் பா.ஜ.க பாய்ச்சல்
x
தினத்தந்தி 19 Oct 2017 9:51 AM GMT (Updated: 19 Oct 2017 9:50 AM GMT)

விஜய்யின் ‘மெர்சல்’ படம் புதிய சாதனை ஜி.எஸ்.டி. வரி குறித்து வசனம் பா.ஜ.க பாய்ச்சல்

சென்னை, 

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியையொட்டி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளிவந்தது. இந்த படம் வெளிவருவதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்ற சர்ச்சை இருந்து வந்த நிலையில், கேளிக்கை வரி காரணமாக மெர்சல் படம் தீபாவளி அன்று வெளிவருவதில் சிக்கல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் கேளிக்கை வரியை 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் விஜய் கடந்த 15-ந் தேதி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து, மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரியமும் அனுமதி அளித்தது. எனவே மெர்சல் படம் வெளியாவதற்கு இருந்த தடை நீங்கியது. நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளிவருவதற்கு முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியதாக தெரிகிறது. 

மெர்சல் படத்தில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம்  வியாபாரம் ஆகிவிட்டது. எனவே அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்க வேண்டும் என்ற கருத்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட வேண்டும். அனைவருக்கும் அரசு இலவச மருத்துவம் கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதை  வற்புறுத்தும் விஜய், “7 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு அந்த நாட்டில் உள்ள அனைவருக்கும்  இலவச மருத்துவம்  வழங்குகிறது. ஆனால் நமது நாட்டில் 28 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டும் மருத்துவ வசதி செய்யப்படவில்லை. ஆனால் மக்களை சீரழிக்கும் மதுவுக்கு  வரி இல்லை. இதற்கு காரணம் யார்?என்று சாடுகிறார்.

அரசியல் குறித்து விஜய் பேசும்போது, “ஒரு குழந்தை உருவாக 10 மாதம் ஆகிறது. ஒரு பட்டதாரி  உருவாக 3 ஆண்டுகளும், டாக்டர், வக்கீல், என்ஜினீயரிங் படிக்க 4, 5 ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் ஒரு நல்ல அரசியல் தலைவன் உருவாக ஒரு யுகம் தேவை” என்று குறிப்பிடுகிறார். 

மத்திய அரசை பற்றி விஜய் வசனம் பேசுகிறார். எனவே மாநில அரசியல் தொடர்பான வசனங்கள் நீக்கப்பட்டிருக்கலாம்” என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். 

சமூக  அக்கறை கொண்ட படமாக உருவாகி இருப்பதால்  ‘மெர்சல்’ படத்துக்கு  மக்களிடம் வரவேற்பு அதிகரித்து இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

மெர்சல் படம்  தமிழ்நாட்டில் 400 முதல் 500 தியேட்டர்கள் வரை ‘ரிலீஸ்’ ஆகலாம் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இது 700-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் அனைத்திலும் ‘மெர்சல்’ படம்தான் திரையிடப்பட் டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 3500 தியேட்டர்களில் ‘மெர்சல்’ திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால்   ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளிலும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.  உலகம்   முழுவதும்  4500-க்கும் அதிகமான  தியேட்டர்களில் மெர்சல் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் ஆஸ்திரேலியாவில் ரூ 68 லட்சம், இங்கிலாந்தில் ரூ 98 லட்சம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

 தீபாவளி படங்களில் ‘மெர்சல்’ அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

சென்னை ரோகினி திரையரங்கில் பாகுபலி-2 தான் இதுநாள் வரை அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது. சென்னையில் மட்டும் மெர்சல் 1.52 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார்கள். விவேகம் 1.21, கபாலி 1.12 கோடி வசூல் செய்திருந்தது.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. பொருளாதார நிலைமை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? தவறு இல்லாத திட்டங்களை குறித்து குறை சொல்ல இவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வருகிறது? இவர்கள் அரசியலில் நுழைய வேண்டியதில்லை.

அரசியல் தலைவர்கள் இவற்றை பார்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் தெளிவான முடிவு எடுப்பார்கள். அவர்கள் டிக்கெட்டுகளையே நியாயமாக விற்க முடியவில்லை. வாங்கும் சம்பளத்தை நேர்மையாக மக்களிடம் சொல்ல முடியவில்லை. நேர்மையாக வரி கட்ட முடியவில்லை எனறு  இவர்கள்தான் கூறுகிறார்கள். 

ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் ஆட்சி நடத்தும் பிரதமரின் திட்டங்களை குறை சொல்ல முடியாது. ஜி.எஸ்.டி.யில் சின்ன சின்ன குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 53 லட்சம் பேர் முத்ரா வங்கியில் எந்தவித ஆதாரம் இல்லாமல் கடன் பெற்றுள்ளார்கள். அவர்களை கந்து வட்டியில் இருந்து காப்பாற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story