அதியா ஷெட்டியின் சமூக வலைதள கவலை


அதியா ஷெட்டியின் சமூக வலைதள கவலை
x
தினத்தந்தி 22 Oct 2017 6:17 AM GMT (Updated: 22 Oct 2017 6:16 AM GMT)

பிரபல நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி இந்தி திரை உலகில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

பிரபல நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி இந்தி திரை உலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்துவிட்டார். அவரோடு ஒரு கலகலப்பான உரையாடல்!

சினிமாவில் நடிப்பதை நீங்கள் ரொம்பவும் விரும்புகிறீர்களா?


ஆமாம். எனது தந்தை சினிமாவில் பிரபலமாக இருந்திருக்காவிட்டாலும், நான் சினிமாவை நோக்கித்தான் ஈர்க்கப்பட்டிருப்பேன். எனது சிறுவயதிலேயே திரையுலகமும், நடிப்பும் என்னைக் கவர்ந்தது. 12 வயது முதலே பள்ளி நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன். மேடையேறுவதும், மக்கள் முன் நடிப்பதும் எனக்குப் பிடித்தமானதானது. அது எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. வளர வளர நான் ஒரு பெரிய இந்தி சினிமா ரசிகையாகவும் ஆகிவிட்டேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியேட்டருக்குச் சென்று சினிமா பார்த்த நினைவு இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. எதிர்காலத்தில் எனக்காக எதை தேர்ந்தெடுப்பது என்று நான் யோசித்தபோது, சினிமா என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

உங்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சினிமா?

அந்த வரிசையில் பல படங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘தில் தோ பாகல் ஹை’, ‘குச் குச் ஹோத்தா ஹை’ போன்ற படங்களைச் சொல்லலாம். நான் நிறைய கஜோல், ராணி முகர்ஜி, ஐஸ்வர்யா ராய் படங்கள் பார்த்திருக்கிறேன். அவர் களின் எல்லா கதாபாத்திரங்களையும் தெளிவாகச் சொல்ல என்னால் முடியும்.

உங்களின் முதல் படமான ‘ஹீரோ’ வாய்ப்பு எப்படி வந்தது?

நான் பிளஸ் டூ முடித்ததும், சினிமாவில் இறங்குவதற்காக அதுதொடர்பாகப் படிக்கலாம் என்று தீர்மானித்தேன். எனவே நியூயார்க் திரைப்பட அகாடமியில் திரைப்பட உருவாக்கம் தொடர்பாகக் கற்பதற்காகச் சேர்ந்தேன். அங்கிருந்து நான் மும்பை திரும்பிவந்த தருணத்தில், ‘ஹீரோ’ படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது என்னை ஒரு ‘ஜிம்’மில் சல்மான் கானின் சகோதரி பார்த்தார். அப்படித்தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதெல்லாமே வேகமாக நடந்துமுடிந்துவிட்டன. எனவே, இப்போது நினைத்தால் ஒரு கனவைப் போலிருக்கிறது. நமது முதல் படம்தான் நம்மைத் தேர்வு செய்கிறது என்று நினைக்கிறேன். அந்த வகையில் ‘ஹீரோ’ படம் எனக்கு அருமையாக அமைந்ததில் மகிழ்ச்சி.

நீங்கள் முதன்முதலில் காமிரா முன் நின்றபோது எப்படி இருந்தது?

அப்போது ஏதோ வானில் மிதப்பதைப் போலிருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும், ‘நான் இதைத்தான் வாழ்நாள் முழுக்கச் செய்ய விரும்புகிறேன்’ என்று என் பெற்றோரிடம் கூறினேன். காமிராவுக்கு முன்னாலும் நான் நானாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

நீங்கள் சமூக ஊடகங்களில் அதிக ஆர்வமாக இருக்கிறீர்கள். அதில் கிண்டல்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

கிண்டல்களுக்கு உள்ளாகியிருக்கிறேன். ஆனால் இணையத்தில் என்னைப் பற்றி வரும் எல்லாவற்றையும் நான் படிப்பதில்லை. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை என்று ஆரம்பத்திலேயே நான் தெளிவாக முடிவெடுத்திருக்கிறேன். நான் உணர்வுபூர்வமானவள். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று அறிந்தால் அது என்னைப் பாதிக்கும். எப்போதும் என்னைப் பலரும் கிண்டலடிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. நாம் நம்பிக்கையோடு நமது வேலையை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

பொதுவாக இன்றைய ‘டிஜிட்டல் புரட்சி’ எல்லாவற்றையும் நல்லவிதமாக மாற்றியிருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக மாற்றியிருக்கிறது. இது அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. நமது கருத்துகளை வெளியிடுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அதேநேரம் இதற்கு ஒரு கறுப்புப் பக்கமும் இருக்கிறது. எல்லோருமே நமது நலம்விரும்பிகளாக இருப்பார்கள் என்று கூற முடியாது. மோசமான நபர்கள், நம்மைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பிவிட இதை ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இணையத்தை நாம் இன்னும் பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும், இதன் மூலம் நல்ல விஷயங்களை அதிகம் பரப்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அன்றாடம் ஆன்லைனில் ஈடுபடுவது குறித்து உங்கள் கருத்து?

நான் சமூக ஊடகங்களில் ஆர்வமாக இருந்தாலும், அவ்வளவு தீவிரமாக அவற்றில் ஈடுபடுவதில்லை. ஒவ்வொரு நாளும் எனது கருத்துகளை வெளியிட நான் சமூக ஊடகங்களைப் பயன் படுத்துவதில்லை. சமூக ஊடகம் என்பது என்னைப் பொறுத்தவரை சந்தோஷமான, அமைதியான இடம். இங்கே ஒரு மோசமான விஷயத்தைப் பார்த்தால், அதை வெளியிட்ட நபரை உடனே நான் ‘பிளாக்’ செய்துவிடுவேன். எனது பணியைப் பாராட்டும் நபர்களுடன் தொடர்புகொள்வதற்கான மையமாக சமூக ஊடகத்தை நான் கருதுகிறேன். ஜீவகாருண்யம், சமூக சேவை, ஊக்கமூட்டும் மேற்கோள்கள் குறித்த விஷயங்களை நான் வெளியிடு கிறேன்.

ஆன்லைனில் தென்படும் அதியாதான் நிஜத்திலுமா?

ஆன்லைனிலும் வெளியிலும் நாம் நாமாக இருப்பது முக்கியம் என்பது என் எண்ணம். வேறு எந்தப் பெண்ணையும் விட வித்தியாசமானவள் அல்ல நான். எனக்கும் எல்லா பெண்களுக்கும் உள்ள பிரச்சினைகளும் அனுபவங்களும் இருக்கின்றன. எனவே நான் அவற்றை உண்மையாகவும், இயல்பாகவும் வெளியிடுகிறேன். ஆனால் நான் என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் வெளியே கொட்டிவிடுவதில்லை. காரணம் நான் அடிப்படையில் ஒரு தனிமை விரும்பி. ஆனால் நான் இணையத்தில் வெளியிடுவதெல்லாம் பிறருக்கு நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டுவதாக அமைய வேண்டும் என்று எண்ணுகிறேன். இன்று சமூக ஊடகங்கள் எல்லோர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கம் நல்லதாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

உங்களின் அழகுப் பராமரிப்பு ரகசியம் என்ன?


தங்கள் அழகைப் பராமரிக்க விரும்பு பவர்களுக்கு, நிறையத் தண்ணீர் குடியுங்கள், ‘சன்ஸ்கிரீன் லோஷன்’ பயன்படுத்துங்கள் என்று நான் அறிவுரை சொல்வேன். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் என்ன நிறத்தைப் பெற்றிருந்தாலும் அதை தன்னம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வதும், அதை வசதியாக உணர்வதும்தான் நல்லது. அந்த தன்னம்பிக்கை நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பிரதிபலிக்கும். குறைவே நிறைவு என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே, எப்போதும் எளிமையைப் பின்பற்றுகிறேன். அது எனது ஒப்பனைக்கும் பொருந்தும். நாம் சுவாசிக்கும் அளவுக்கு நமது சருமமும் சுவாசிக்க வேண்டும். 

Next Story