ஒரு தேவதை வந்துவிட்டார்..


ஒரு தேவதை வந்துவிட்டார்..
x
தினத்தந்தி 22 Oct 2017 6:37 AM GMT (Updated: 22 Oct 2017 6:37 AM GMT)

“பெண்கள் அனைவரிடமும் திறமை இருக் கிறது. அவர்கள் தன்னம்பிக்கை மூலம் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

“பெண்கள் அனைவரிடமும் திறமை இருக் கிறது. அவர்கள் தன்னம்பிக்கை மூலம் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை இருந்தால் பெண்களால் மேடையிலும் ஜொலிக்கமுடியும். பெண்கள் தயக்கமின்றி தங்கள் திறமையைக் காட்ட மேடை ஏறவேண்டும். மேடையில் நடக்கும் எல்லா போட்டிகளிலும் வெற்றி, தோல்வியை மட்டுமே நாம் நினைத்துப்பார்க்கிறோம். அவை களைவிட முக்கியமானது நல்ல அனுபவங்கள். ஒவ்வொரு மேடையும் நமக்கு புதுப்புது அனுபவங் களை கற்றுத்தரும். அந்த அனுபவங்களை மூலதனமாக வைத்துக்கொண்டு அடுத்தடுத்து நம்மால் வெற்றி களை குவிக்கமுடியும்” என்று தலைநிமிர்ந்து தன்னம்பிக்கையோடு கருத்துக் களை பகிர்ந்துகொள்கிறார், தீபிகா ஜெயின். சமீபத்தில் ‘மிஸ் கோயமுத்தூர்’ என்ற அழகுப் பட்டத்தை வென்றிருக்கும் இவர், அழகுப் போட்டி பற்றி வித்தியாசமாக விளக்கம் தருகிறார்.

“அழகுப் போட்டியில் வெல்ல ரொம்ப அழகு ஒன்றும் தேவையில்லை. சுமாரான அழகு இருந்தாலே போதும். அதற்கு சிவப்பு நிறம் ஒன்றும் முக்கியமில்லை. கலரைவிட திறமைதான் மேடையில் பளிச்சிடும். நம்மிடம் இருக்கும் திறமையை பார்வையாளர்களுக்கு ஏற்றபடி வெளிப்படுத்தவேண்டும். சுறுசுறுப்பு, சிரிப்பு, சமயோசிதமான பேச்சு மூலம் நமது அறிவாற்றலை வெளிப் படுத்தவேண்டும். எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது. நான் பெற்றிருக்கும் வெற்றிக்கு ஆர்வம், அனுபவம், தன்னம்பிக்கை போன்றவைதான் காரணம். நான் மூன்று வருடங்களாக பல்வேறு அழகுப்போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ‘சப்டைட்டிலில்’ வெற்றி பெற்றுக்கொண்டிருந்த நான் இப்போதுதான் கோவையில் முதலிடத்திற்கு வந்திருக்கிறேன்” என்கிறார்.

இவரது பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம் என்றாலும், தீபிகா பிறந்து, வளர்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில்தான்.

“என் தந்தை ஜவகர்லால் ராஜஸ்தானில் பார்மோர் பகுதியில் உள்ள பாதறு என்ற சிறிய நகரத்தை சேர்ந்தவர். தாயார் சுசீலாவும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்தான். முன்பே அவர்கள் கோவை வந்துவிட்டார்கள். என் அண்ணன் தீபக்குக்கு திருமணமாகிவிட்டது. தங்கை பிரீத்தி பேஷன் டெக்னாலஜி படித்திருக்கிறார். நான் கோவையில்தான் கல்லூரி படிப்பை முடித்தேன். இப்போது தொலைதூர கல்வியில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும். ஆங்கிலத்திலும், இந்தியிலும் நன்றாக உரையாடுவேன்” என்கிறார்.

இவர் அழகுப் போட்டியில் கலந்துகொள்ள தொடக் கத்தில் இவரது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

“நான் கல்லூரியில் படிக்கும்போது எல்லாவிதமான கலைப் போட்டிகளிலும் பங்கு பெறுவேன். அப்போது மற்றவர்களைவிட தோற்றத்திலும் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புவேன். என்னை நானே நேர்த்தியாக அழகுபடுத்திக்கொள்வேன். முதலில் பெற்றோருக்கு தெரியாமல் நடனப்போட்டியில் பங்குபெற்றேன். அதில் கிடைத்த அனுபவங்களே என்னை அழகிப் போட்டியில் கலந்துகொள்ளத் தூண்டியது. ஆனால் என் பெற்றோர் முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை. அவர்களிடம், அழகிப்போட்டி என்பது அரைகுறை ஆடைகளுடன் தோன்றுவதில்லை. நேர்த்தியான அழகுடன் சிறப்பாக மேடையில் தோன்றி, நமது அறிவையும், சமயோசித ஆற்றலையும் வெளிப் படுத்தவேண்டும் என்பதை எல்லாம் அவர்களிடம் எடுத்துச்சொன்னேன். வெளிஉலகத்திற்கு என் திறமைகளை அடையாளம் காட்டிக்கொள்ள அழகிப் போட்டியில் பங்குகொள்வது அவசியம் என்றும் கூறினேன். நான் தெளிவாக எடுத்துச்சொன்ன பிறகே என்னை போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தார்கள். ஒவ்வொரு போட்டியும் எனக்கு நல்ல அனுபவங்களை தந்ததால் நான் தொடர்ச்சியாக பங்கேற்றேன்.

‘மிஸ் கோயமுத்தூர்’ போட்டி கடுமையாகவே இருந்தது. 30 அழகுப் பெண்கள் கலந்துகொண்டோம். எங்கள் தோற்றம், நடை, நளினம், தன்னம்பிக்கை போன்று ஒவ்வொன்றையும் பரிசீலித்து இறுதிச் சுற்றுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தார்கள். எனக்கு புடவை உடுத்திக்கொள்வதில் ஆர்வம் அதிகம். நீலநிற பட்டுப் புடவை கட்டி, கிராமத்து பெண் போன்று நீண்ட நீள ஜடை போட்டு அதில் நிறைய பூவைத்து என்னை தேவதைபோல் ஆக்கிக்கொண்டு மேடையில் ஒய்யாரமாக நடந்தேன். அந்த தோற்றம் எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது.

இறுதியில் எங்களில் மூன்று பேரை தேர்ந்தெடுத்தார்கள். எங்களில் யாருக்கு முதலிடம் என்பதை தேர்வு செய்ய, ஒருவருக்கு தெரியாமல் மற்றவர்களிடம் தனித்தனி கேள்விகளை கேட்டார்கள். என்னிடம் ‘கடவுள் உங்கள் முன்னால் தோன்றினால் அவரிடம் என்ன வரம் கேட்பீர்கள்?’ என்று கேட்டார்கள்..”

‘இந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?’

“பெண்களின் கல்வியில் பெற்றோர் அவ்வளவாக ஆர்வம்காட்டுவதில்லை. பெண்களும், ஆண்களை போன்று நிறைய படிக்கவேண்டும். அதற்காக பெண்களுக்காகவே ஒரு சிறப்பு கல்வியை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்று கடவுளிடம் வரம் கேட்பேன், என்று சொன்னேன். எனது பதிலுக்கு பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கரவொலி கிடைத்தது. திறமையின் அடிப்படையில் நடுவர்கள் முடிவும் எனக்கு சாதகமாக அமைந்தது. நான் முதலிடம் பிடித்ததும் கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

அழகி என்றாலே சமூகத்தில் சிலர் தவறாக கருதுகிறார்கள். இன்னொரு பக்கம் சிவப்பாக இருந்தால்தான் அழகு என்று பெண்களே நினைக்கிறார்கள். அழகுப் போட்டிக்கு உடல் அழகல்ல, மன அழகுதான் முக்கியம். மாநிறம் உள்ள பெண்களும் தயக்கமின்றி இத் தகைய போட்டிகளில் கலந்துகொள்ளவேண்டும். தன்னம்பிக்கை இருந்தால் வெற்றியடைந்துவிடலாம்” என்கிறார், தீபிகா. இவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியை செய்து வரு கிறார்.

எதிர்கால திட்டம் பற்றி தீபிகாவிடம் கேட்டபோது, “மாநில, தேசிய அளவிலான அழகுப் போட்டிகளில் பங்கு பெறுவேன். அழகுப் போட்டி தன்னம்பிக்கையையும், அறிவையும் சார்ந்த விஷயம் என்பதால், அதற்கு வயது ஒருபொருட்டில்லை. நான் திருமணத்திற்கு பின்பும் ‘மிசஸ் அழகி’ப்போட்டிகளில் பங்கு பெறுவேன். அதற்குரியவகையில் என் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன்” என்கிறார்.

மிஸ் கோயமுத்தூர் அழகுப் போட்டியில் இரண்டாம் இடத்தை சிவகன்யாவும், மூன்றாம் இடத்தை இஷா அரோராவும் பெற்றனர்.

சுடச்சுட கேட்ட பத்து கேள்விகளுக்கு, தீபிகா ஜெயின் அளித்த
படபட பதில்: தாய், தந்தை, சகோதரியுடன்...


அழகு என்று எதை சொல்வீர்கள்?

முக அழகைக் காட்டிலும் அகத்தின் அழகையே அழகாக கருதுகின்றேன். நல்ல பண்புகள்தான் அகத்தை அழகாகக்காட்டும்.

உங்கள் வீட்டில் ரொம்ப அழகாக இருப்பது யார்?

ஏன் வம்புல மாட்டிவிடுறீங்க! எங்க வீட்ல எல்லோரும் அழகுதான்.

அறிவு இல்லாமல் அழகுப் போட்டியில் வெல்ல முடியுமா?

நிச்சயமாக முடியாது. அழகு போட்டியில் வெற்றி பெறுவதை தீர்மானிப்பதே அறிவு தான். அறிவு இருந்தால் மட்டுமே நடுவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை கூற முடியும்.

அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு?

நல்ல உடல் நலத்துடன் இருந்தால் மட்டுமே நாம் அழகாக இருக்க முடியும். அழகுக்கு ஆரோக்கியம் மிக அவசியம்.

எல்லா பெண்களும் அழகாகத் தோன்ற உங்கள் அறிவுரை என்ன?

கிடைக்கிறது என்பதற்காக எல்லா தின்பண்டங்களையும் வெளுத்து வாங்க வேண்டாம். அளவோடு சாப்பிட வேண்டும். நிறைய பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக தினமும் காலையில் மூச்சுப்பயிற்சி எடுத்தால் உடலுக்கு நல்லது.

நீங்கள் அழகுக்காக எந்த விஷயங்களில் எல்லாம் அதிக அக்கறை காட்டுவீர்கள்?

நான் சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். நிறைய பழங்கள் சாப்பிடுவேன். உடற்பயிற்சி தினமும் செய்வேன். கண்ணாடியில் பார்க்கும்போது நான் தான் எப்போதும் அழகு என்று எனக்குள்ளே நினைத்துக் கொள்வேன்.

ரொம்ப அழகான பெண்களை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?

பொறாமைப்பட மாட்டேன். அதே நேரத்தில் அவங்களைவிட நான் அழகில் குறைந்தவள் என்று என்னையே நான் தாழ்த்திக்கொள்ளவுமாட்டேன். அந்த பெண்கள் இருக்கும் இடத்தை திரும்பிப் பார்க்கவுமாட்டேன்.

உங்கள் அழகுக்கு கிடைத்த முதல் பரிசு எது?

காலேஜ் கல்ச்சுரல் புரோகிராமில் பங்கேற்றபோது கூடி இருந்த நண்பர்கள் பட்டாளம் கொடுத்த கைத்தட்டல்கள்தான் முதலில் கிடைத்த பரிசு. அதையே முதற்பரிசாகவும் கருதுகிறேன்.

உலகிலே ரொம்ப அழகாக இருப்பவர் யார்?


நல்ல எண்ணம் கொண்டவர்கள்தான் ரொம்ப அழகு. ஏனெனில் நல்ல எண்ணம் கொண்டவர்களிடத்தில் தான் நல்ல செயல்கள் இருக்க முடியும். முக அழகு மட்டும் அழகுக்கான அடையாளம் அல்ல. நல்ல பண்பு, நன்னடத்தை அவசியம். அவைதான் பேரழகு.

உங்கள் அழகில் உங்களை கவர்ந்தது எது?

அனைத்துமே அழகுதான். எல்லாம் என்னை கவர்ந்ததுதான். 

Next Story