குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 22 Oct 2017 9:18 AM GMT (Updated: 22 Oct 2017 9:17 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, நயன்தாரா தனது உதவியாளராக என்னை சேர்த்துக் கொள்வாரா? (பி.விஜயகுமார், சென்னை–34)

உங்களுக்கு ‘டைரக்‌ஷன்’ அனுபவம் இருக்கிறதா? அந்த அனுபவம் இருந்தால் முயற்சி செய்யலாம்!

***

கதாநாயகனாக நடித்து வந்த சத்யராஜ், பிரபு ஆகிய இரண்டு பேரும் ‘சட்’ என்று குணச்சித்ர வேடங்களுக்கு மாறியது பற்றி..? (எஸ்.ரவிராஜா, கோவை)

அப்படி மாறியது, அவர்களின் புத்திசாலித்தனம். ‘‘கதாநாயகனாகத்தான் நடிப்பேன்’’ என்று அவர்கள் இருவரும் பிடிவாதமாக இருந்தால், இப்போது அவர்கள் இருக்கும் இடத்தை வேறு ஒரு மூத்த கதாநாயகன் பிடித்து இருப்பார்!

***

குருவியாரே, படக்குழுவினர் யாரைப் பார்த்தாலும், ‘‘அண்ணே’’ என்று நிக்கி கல்ராணி சகோதர பாசம் காட்டுகிறாராமே...ஏன், எதற்காக? (எம்.அரவிந்தராஜ், புதுச்சேரி)

ஒருதலை காதல்களை தவிர்ப்பதற்குத்தான்..! தன் மீது யாருக்கும் ஒருதலை காதல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ‘‘அண்ணே’’ என்ற பாதுகாப்பு கவசம்!

***

‘ஸ்கெட்ச்’ படத்தில் ஜோடி சேர்ந்துள்ள விக்ரம்–தமன்னா இருவரும் தொடர்ந்து மற்ற படங்களிலும் ஜோடி போடுவார்களா? (ஆர்.ராதாகிருஷ்ணன், பெங்களூரு)

விக்ரம் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை. அதனால்தான் படத்துக்கு படம் கதாநாயகிகள் மாறிக்கொண்டிருக்கிறார்கள்!

***

குருவியாரே, திரிஷா தினமும் ‘ஜிம்’முக்கு போய் வருகிறாராமே...? உடற்பயிற்சி மீது அவருக்கு அத்தனை ஈடுபாடா? (என்.குணசீலன், தர்மபுரி)

திரிஷா, நேரம் கிடைக்கும்போது மட்டுமே ‘ஜிம்’முக்கு போய் வருகிறார். அவருடைய அம்மாதான் தவறாமல் தினமும் ‘ஜிம்’க்கு போய் வருகிறாராம்!

***

ஜெயம் ரவி நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் எது, அதில் அவருக்கு ஜோடி யார்? (சண்முகராஜா, பண்ருட்டி)

ஜெயம் ரவி நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், ‘டிக் டிக் டிக்.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடி, நிவேதா பெத்துராஜ்!

***

குருவியாரே, ‘‘திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இதுவரை வரவில்லை’’ என்று கூறும் ஸ்ரேயா பற்றி...? (எச்.ரஹமத்துல்லா, நாகர்கோவில்)

இதுவரை சம்பாதித்தது போதாது...இதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையே ஸ்ரேயாவை இப்படி பேச வைக்கிறது!

***

சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், தாரை தப்பட்டை ஆகிய படங்களை இயக்கிய பாலா, ‘சைலன்ட்’ ஆகிவிட்டாரே, ஏன்? (ஏ.சுரேந்திரன், சேலம்)

பாலாவின் சுபாவமே அமைதிதான். வெற்றியை கண்டு ஆடவும் மாட்டார். தோல்வியை கண்டு துவளவும் மாட்டார். ஓசையே இல்லாமல் அவர் இப்போது, ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். அதில், ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில், ஜோதிகா நடித்து இருக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில், பட அதிபர் ராக்லைன் வெங்கடேஷ் நடித்துள்ளார்!

***

குருவியாரே, திடீர் பிரபலமாகி விட்ட ஓவியாவிடம் ஒரு பக்க தலைமுடியை காணோமே...அதை என்ன செய்தார்? (சி.பாஸ்கர பால்பாண்டியன், திருப்பத்தூர்)

ஓவியா தனது தலைமுடியில் ஒரு பகுதியை கத்தரித்து, ‘கேன்சர்’ நோயாளிகளுக்கு தானமாக வழங்கி விட்டார்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், சிவகுமாரும் அப்பா–மகனாக நடித்த படம் எது? (சா.அடைக்கலராஜ், பொள்ளாச்சி)

‘உயர்ந்த மனிதன்!’

***

குருவியாரே, கே.ஆர்.விஜயா இப்போது எப்படியிருக்கிறார்? (சு.ஸ்ரீதர், ஊட்டி)

சில வருடங்களுக்கு முன்பு கே.ஆர்.விஜயா முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் சிகிச்சை பெற்ற பின், பூரண குணம் அடைந்து விட்டார். இப்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். சிறந்த கதைகளும், கதாபாத்திரங்களும் அவரை தேடி வந்தால் மட்டுமே நடிக்கிறார்!

***

ராகவா லாரன்சின் ‘காஞ்சனா–3’ படத்தில் கதாநாயகி யார்? (ப.இசக்கி சுடலை, கல்லிடைக்குறிச்சி)

‘காஞ்சனா–3’ படத்தில், கதாநாயகியாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இன்னொரு நாயகியாக வேதிகா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்!

***

‘‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ...காத்திருப்பேன் என்று தெரியாதோ...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடலை பாடியவர் யார், பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (எம்.செந்தில், துவரங்குறிச்சி)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘களத்தூர் கண்ணம்மா.’ பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா–பி.சுசீலா. நடித்தவர்கள்: ஜெமினிகணேசன்–சாவித்ரி!

***

குருவியாரே, அனுஷ்காவுக்கும், ராய் லட்சுமிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்னென்ன? (இரா.ராஜ்குமார், கோபிச்செட்டிப்பாளையம்)

இரண்டு பேருமே கர்நாடகாவை சேர்ந்தவர்கள். உயரமான கதாநாயகிகள் பட்டியலில் இருவரும் இருக்கிறார்கள்!

***

‘மெர்சல்’ படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் வருகிறார்? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

3 வேடங்களில் வருகிறார்!

***

குருவியாரே, தமிழ் பட கதாநாயகர்களில் சிம்புவுக்கு மட்டும் சோதனை மேல் சோதனை ஏற்படுவது ஏன்? (பாலாஜி, ராபர்சன் பேட்டை)

சோதனையில் கூட, சிம்புவினால் சாதனை செய்ய முடியும் என்று அந்த சோதனை நம்புகிறது போலும்!

***

எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் யார்? எத்தனை படங்கள் இயக்கியிருக்கிறார்? (ரஜினி செந்தில், பாப்பம்பட்டி)

எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்களை டைரக்டு செய்தவர், ப.நீலகண்டன். எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை அவர் இயக்கியிருக்கிறார்!

***

இந்திய நடிகர்களில் ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளிலும் பிரபலமாக இருந்தவர் யார்? (எஸ்.சீனிவாசன், ஆசீர்வாதபுரம்)

பிரபல இந்தி நடிகர்–டைரக்டர் ராஜ்கபூர்!

***

குருவியாரே, சுப்பிரமணியபுரத்தின் குட்டிப்புலியான சுந்தரபாண்டியன் சசிகுமாரின் அடுத்த படைப்பு எது, எப்போது வெளிவரும்? (பி.எஸ்.பிரபாகரன், உடுமலைப்பேட்டை)

சசிகுமார் அடுத்து 2 படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அந்த 2 படங்கள் முடிவடைந்ததும் ஒரு படத்தை டைரக்டு செய்ய முடிவு செய்துள்ளார்!

***

‘மாரி–2’ படத்தில் தனுசுக்கு ஜோடி யார்? (ஜார்ஜ், கோவில்பட்டி)

‘மாரி–2’ படத்தில் தனுஷ் ஜோடி யார் என்று இன்னும் முடிவாகவில்லை!

***

Next Story