இணையதளத்தில் மெர்சல் படத்தை எச்.ராஜா பார்த்தது கண்டிக்கத்தக்கது நடிகர் விஷால்


இணையதளத்தில் மெர்சல் படத்தை எச்.ராஜா பார்த்தது கண்டிக்கத்தக்கது நடிகர் விஷால்
x
தினத்தந்தி 22 Oct 2017 10:15 PM GMT (Updated: 22 Oct 2017 7:06 PM GMT)

இணையதளத்தில் எச்.ராஜா மெர்சல் படத்தை பார்த்தது கண்டிக்கத்தக்கது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை,

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி வரியை விமர்சித்ததற்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்தார். மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்து விட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு பட அதிபர்கள் சங்க தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து விஷால் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஒரு தேசிய கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில், நான் இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன் என்று ஒப்புக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. ஒருவேளை ‘பைரசி’ எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டப்பூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்?

அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை அழிய விட்டு வேடிக்கை பார்க்கின்றனவா? இந்த அரசுகள், என்ற சந்தேகம் எழாமல் இல்லை. எச்.ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்து கொண்டு எப்படி இப்படி ‘பைரசி’யை ஆதரிக்கிறீர்கள்?

உங்களைபோன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டுப் பிரதியை பார்ப்பது என்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம்.

இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு திருட்டு வி.சி.டி மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Next Story