திட்டமிட்டபடி டிசம்பர் 1–ந்தேதி பத்மாவதி படம் வெளியாகும்


திட்டமிட்டபடி டிசம்பர் 1–ந்தேதி பத்மாவதி படம் வெளியாகும்
x
தினத்தந்தி 18 Nov 2017 10:45 PM GMT (Updated: 18 Nov 2017 6:56 PM GMT)

இந்தி திரைப்படமான பத்மாவதி, 14–ம் நூற்றாண்டை சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தி திரைப்படமான பத்மாவதி, 14–ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ராணி பத்மாவதி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளனர். அடுத்த மாதம்(டிசம்பர்) 1–ந்தேதி நாடு முழுவதும் வெளியாகிறது.

படத்தில் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் பாத்திரம் மோசமாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி அந்த படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என பா.ஜனதா, ராஜ புத் சேனா, கர்னி சேனா அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்த அமைப்பினர் நேற்று முன்தினம் சித்தூர்கர் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நோற்று ராஜ்சமாந்த் மாவட்டத்தில் உள்ள கும்பால்கர் கோட்டைக்குள் யாரையும் செல்ல விடாமல் தடுத்து நூற்றுக்கணக்கான ராஜபுத்திர வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பத்மாவதி திட்டமிட்டவாறு வருகிற 1–ந்தேதி திரையிடப்படும். படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்று கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என்று படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஜித் அந்தாரே கூறுகையில், “படத்தை போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க தயாராக இருக்கிறோம். அப்போது ராஜபுத்திரர்களின் பெருமையை படம் வெளிப்படுத்துவது தெரியவரும்“ என்றார்.


Next Story