அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’ சிவா டைரக்டு செய்கிறார்


அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’ சிவா டைரக்டு செய்கிறார்
x
தினத்தந்தி 23 Nov 2017 10:00 PM GMT (Updated: 23 Nov 2017 8:13 PM GMT)

‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார் புதிய படத்தில் நடிக்கிறார். டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், சிவா டைரக்டு செய்யும் இந்த படத்துக்கு, ‘விசுவாசம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித்குமார், கடந்த 2015-ம் ஆண்டில், ‘என்னை அறிந்தால்,’ ‘வேதாளம்’ ஆகிய 2 படங்களில் நடித்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘என்னை அறிந்தால்’ படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்திருந்தார். ‘வேதாளம்’ படத்தை சிவா டைரக்டு செய்தார்.

2016-ம் ஆண்டில், அஜித்குமார் நடித்து எந்த படமும் வெளிவரவில்லை. அவர் நடித்த ‘விவேகம்’ படம், கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி திரைக்கு வந்தது. அதில், அஜித்குமார் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார். சிவா டைரக்டு செய்திருந்தார். டி.ஜி.தியாகராஜன் தயாரித்து இருந்தார்.

‘விவேகம்’ படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எனவே டி.ஜி.தியாகராஜனுக்கு மீண்டும் ஒரு படத்தை நடித்துக் கொடுக்க அஜித்குமார் முன்வந்தார். அதன்படி, அவர் நடிக்கும் அடுத்த படத்தை டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா, இந்த படத்தையும் டைரக்டு செய்கிறார்.

படத்துக்கு, ‘விசுவாசம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் (2018) தீபாவளி விருந்தாக, ‘விசுவாசம்’ படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த படத்தை பற்றி டைரக்டர் சிவா, ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“இது, ‘வீரம்’ படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. வேறு கதை. ஜனரஞ்சகமான குடும்ப படமாக இருக்கும். அஜித்குமார் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி, மற்றும் நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கும். தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும்.”

இவ்வாறு டைரக்டர் சிவா கூறினார்.

Next Story