நடிகை அமலாபால் - பகத் பாசில் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய கேரள போலீசார் முடிவு


நடிகை அமலாபால் - பகத் பாசில் மீது  கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய கேரள போலீசார் முடிவு
x
தினத்தந்தி 24 Nov 2017 5:51 AM GMT (Updated: 24 Nov 2017 5:51 AM GMT)

சொகுசு கார் வரி ஏய்ப்பில் நடிகை அமலாபால் ,நடிகர் பகத் பாசில் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய கேரள போலீசார் முடிவு செய்து உள்ளனர்.


திருவனந்தபுரம்,

பிரபல நடிகை அமலாபால் சொகுசு கார் ஒன்று வாங்கியிருந்தார். அந்த காரை அவர் புதுச்சேரி முகவரி கொடுத்து அங்கு பதிவு செய்து இருந்தார். அதன்பிறகு அவர் அந்த காரை கேரளாவில் பயன்படுத்தினார்.

அமலாபாலை போல  பிரபல மலையாள நடிகரான பகத் பாசிலும் புதுச்சேரி முகவரியில் பதிவு செய்த சொகுசு காரை கேரளாவில் பயன்படுத்தி வந்தார்.

இதேபோல் புதுச்சேரியில் பதிவு செய்து விட்டு கேரளாவில் கார்களை பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது 1500-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு ரூ.500 கோடி வரிஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.  இதுதொடர்பாக 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் ஆகியோர் புதுச்சேரியில் வசிப்பதாக கொடுத்த முகவரிகள் போலி முகவரிகள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புகாரை அமலாபால் மறுத்தார். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் கேட்டு அமலாபாலுக்கு நோட்டீசு அனுப்பினர். அதற்கு பதில் அளிக்க முடியாது என அமலாபால் மறுத்து விட்டார். நடிகர் பகத் பாசில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே இந்த வழக்கு குற்றப்பிரிவு  போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை அமலாபால் மற்றும் நடிகர் பகத் பாசில் ஆகியோர்  மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவரால் ஜாமீனில் வெளி வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story