நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? பட விழாவில் நடிகர் விஷால் பேச்சு


நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? பட விழாவில் நடிகர் விஷால் பேச்சு
x
தினத்தந்தி 19 Jan 2018 10:56 PM GMT (Updated: 19 Jan 2018 10:56 PM GMT)

பட அதிபர் புகார் தொடர்பாக சிம்பு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்தார்.

சென்னை,

நடிகர் சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பட அதிபர்கள் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்து இருந்தார். சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரவில்லை என்றும், தன்னிடம் உறுதி அளித்தபடி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதனால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் எனவே சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தார். இந்த புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஜீவா-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ள கீ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

சலசலப்பு

இந்த விழாவில் சிம்பு விவகாரம் பற்றி பிரச்சினை கிளப்பப்பட்டது. விழாவில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது, “சிம்புவுக்கு எதிராக மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்து இருக்கிறார். இந்த புகார் மீது விஷால் நடவடிக்கை எடுக்கவில்லை. விஷாலும், சிம்புவும் சேர்ந்து இருக்கும் படங்கள் மட்டும் வெளிவருகின்றன” என்றார்.

இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. தேனப்பன் பேச்சுக்கு விஷால் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் விழாவில் பேசியதாவது:-

விளக்கம் கேட்டோம்

“சிம்பு மீது மைக்கேல் ராயப்பன் புகார் அளித்து இருந்தார். அந்த புகாருக்கு சிம்புவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் சிம்பு இதுவரை பதில் சொல்லவில்லை. அவர் விளக்கம் கொடுத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினையில் நல்லது நடக்கும். பொறுமை அவசியம். தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வோம். திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை அரசு குறைத்து இருக்கிறது. ஆனால் பல தியேட்டர்கள் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார்கள்.”

இவ்வாறு விஷால் பேசினார். 

Next Story