தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார் நடிகை சுருதி ஹரிகரன் புகார்


தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார் நடிகை சுருதி ஹரிகரன் புகார்
x
தினத்தந்தி 21 Jan 2018 9:30 PM GMT (Updated: 21 Jan 2018 8:19 PM GMT)

“தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்” என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறினார்.

ஐதராபாத்,

“தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்” என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறினார்.

பாலியல் புகார்

கேரளாவை சேர்ந்தவர் நடிகை சுருதி ஹரிகரன். இவர் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நிபுணன், ரா ரா ராஜசேகர், சோலோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தமிழ் பட அதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:-

“நான் 18 வயதில் சினிமாவில் பாடல் காட்சிகளில் நடனம் ஆடி வந்தேன். அப்போது எனக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டன. நடன இயக்குனரை அணுகி இதுபற்றி முறையிட்டு இந்த தொல்லைகளில் இருந்து தப்பிக்க வழி சொல்லும்படி கேட்டேன். அவரோ உன்னால் இந்த பிரச்சினைகளை கையாள முடியவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகி விடு என்று அறிவுரை கூறினார்.

பதிலடி

அதன்பிறகு எனக்கு சினிமாவை பற்றிய புரிதல் ஏற்பட்டு, தவறான கண்ணோட்டத்தில் நெருங்குபவர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பதை தெரிந்து கொண்டேன். தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தேன். நான் நடித்த கன்னட படமொன்று நன்றாக ஓடி வசூல் குவித்தது.

அந்த படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவர் வாங்கி இருந்தார். தமிழிலும் நான்தான் நடிக்க வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார். நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு அந்த படத்தில் நடிக்க தயாரானேன். அப்போது அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.

எச்சரித்தேன்

அவருக்கு நெருக்கமான மேலும் 4 தயாரிப்பாளர்களின் ஆசைக்கும் நான் இணங்க வேண்டும் என்றார்.

நான் கையில் எப்போதும் செருப்புடன்தான் இருப்பேன் என்று அந்த தயாரிப்பாளரை எச்சரித்து பதிலடி கொடுத்தேன். இதனால் அவர் என்னைப் பற்றி தவறான வதந்தி பரப்பி பட வாய்ப்புகள் வராமல் செய்து விட்டார்.

சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை. அவர்களின் உடலை வைத்து வியாபாரம் செய்வது வேதனை அளிக்கிறது.”

இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறினார்.

Next Story