சிவலிங்கா


சிவலிங்கா
x
தினத்தந்தி 5 Jan 2017 9:50 AM GMT (Updated: 7 Jan 2017 6:56 AM GMT)

சந்திரமுகி, மன்னன், வால்டர் வெற்றிவேல், சின்னத்தம்பி மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தியில் 62 க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை எழுதி இயக்கியவர் பி.வாசு. இவர் அடுத்து ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மிக பிரம்மாண்டமான முறை

சந்திரமுகி, மன்னன், வால்டர் வெற்றிவேல், சின்னத்தம்பி மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தியில் 62 க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை எழுதி இயக்கியவர் பி.வாசு. இவர் அடுத்து ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார்.

சமீபத்தில் சிவராஜ்குமார், ஷக்திவேல் வாசு, வேதிகா நடித்த சிவலிங்கா திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

கன்னடத்தில் வெற்றிப்பெற்ற ‘சிவலிங்கா’ திரைப்படம் தமிழ் - தெலுங்கு மொழிகளுக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய பொலிவுடன், அதே பெயரில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

400-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்தவருமான ஆர்.ரவீந்திரன் இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக “இறுதிச்சுற்று” புகழ் ரித்திக்கா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்திரமுகிக்கு பிறகு அதே முக்கிய வேடத்தில் மீண்டும் பி.வாசுவுடன் வடிவேலு இணைகிறார். மிக முக்கிய வேடத்தில் ஷக்திவேல் வாசு நடிக்கிறார்.

ஒளிப்பதிவு: பி.கே.எச்.தாஸ், இசை : எஸ்.எஸ்.தமன், படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ், கலை : துரை ராஜ், தயாரிப்பு: ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் - ஆர். ரவீந்திரன், எழுத்து, - இயக்கம்: பி.வாசு

பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்குகிறது.

பி.வாசுவின் ‘சிவலிங்கா’ படத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக ராகவா லாரன்ஸ்

பி.வாசு இயக்கியுள்ள ‘சிவலிங்கா’ படத்தில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியாக ராகவா லாரன்ஸ் நடித்து இருக்கிறார். இம்மாதம் இறுதியில் திரைக்கு வர உள்ள இந்த படத்தை பற்றி டைரக்டர் பி.வாசு கூறியதாவது:-

“இது, ஒரு குற்ற பின்னணியிலான திகில் படம். நான் இயக்கிய ‘ஆப்தமித்ரா’ என்ற கன்னட படம், ‘சந்திரமுகி’யாக தமிழில் உருவானது போல், என் டைரக்‌ஷனில் உருவான ‘சிவலிங்கா’ என்ற கன்னட படத்தையும் அதே பெயரில் தமிழில் உருவாக்கி இருக்கிறோம். ‘சிவலிங்கா’ (கன்னட படம்), கர்நாடகாவில் ஒரு வருடத்துக்கு முன்பு திரைக்கு வந்து 86 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. அந்த படத்தை சில மாற்றங்களுடன் தமிழில் உருவாக்கியிருக்கிறோம்.
ராகவா லாரன்ஸ், சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக நடித்துள்ளார். அவருடைய மனைவியாக ரித்திகாசிங் நடித்து இருக்கிறார். வடிவேல் திருடனாக வருகிறார். சக்திவாசு,ராதாரவி, சந்தானபாரதி, ஜெயப்பிரகாஷ், பிரதீப்ராவத், வி.டி.வி.கணேஷ், ஊர்வசி, பானுப்ரியா, மதுவந்தி அருண், மதுமிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஒரு புறா, முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. அந்த புறா வரும் காட்சிகள் திகிலூட்டும்.

சர்வேஷ் முராரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை விவேகா எழுத, எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஆர். ரவீந்திரன் தயாரித்துள்ளார். இணைதயாரிப்பு: ஜே.அப்துல் லத்தீப். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெறுகின்றன. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம், 1,400 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.”

Next Story