குலேபகாவலி


குலேபகாவலி
x
தினத்தந்தி 18 July 2017 10:28 AM GMT (Updated: 16 Aug 2017 8:17 AM GMT)

பிரபுதேவா-ஹன்சிகாவுடன் மீண்டும் ஒரு ‘குலேபகாவலி’ எம்.ஜி.ஆர். நடித்து, ‘குலேபகாவலி’ என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் திரைக்கு வந்தது.

 அந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் டி.ஆர்.ராஜகுமாரி, ராஜசுலோசனா, ஜி.வரலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, ஈ.வி.சரோஜா ஆகியோர் நடித்து இருந்தார்கள். டி.ஆர்.ராமண்ணா டைரக்டு செய்திருந்தார். 1955-ம் ஆண்டில் அந்த படம் வெளியானது.

62 வருடங்களுக்குப்பின், ‘குலேபகாவலி’ என்ற பெயரில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது. இதில், பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். எஸ்.கல்யாண் டைரக்டு செய்கிறார். கே.ஜே.ஆர்.ராஜேஷ் தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடை பெறுகிறது.

‘குலேபகாவலி’ படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி டைரக்டர் கல்யாண் சொல்கிறார்:-

“குலேபகாவலி படத்துக்காக ரூ.2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினோம். கலை இயக்குனர் கதிர் அரங்கம் அமைக்க, அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் உருவான இந்த பாடல் காட்சிக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி நடனம் அமைத்தார்.

ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களின் முன்னிலையில், ‘கிராபிக்ஸ்’ காட்சிகள் வடிவமைக்கப்பட் டுள்ளன.”

பிரபுதேவா-ஹன்சிகா நடிக்கும் ‘குலேபகாவலி’ படத்துக்காக உருவான தொங்கு தோட்டம்

பிரபுதேவா-ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘குலேபகாவலி’ படத்தை எஸ்.கல்யாண் டைரக்டு செய்கிறார். கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்து வருகிறார். இதில், ரேவதி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், முனீஸ்காந்த், ராமதாஸ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக, பாபிலோன் தொங்கு தோட்டத்தைப் போல், சென்னை அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில், கார்கள் தொங்கும் ஒரு அரங்கை கலை இயக்குனர் கதிர் அமைத்தார். 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 25 நாட்கள் இரவு-பகலாக உழைத்து, 100 விதமான கார்கள் தொங்குவது போல், இந்த பிரமாண்டமான அரங்கை உருவாக்கினார்கள்.

விவேக்-மெர்வின் இசையில் உருவான பிரபுதேவாவின் அறிமுக பாடல் காட்சியை, இந்த பிரமாண்டமான அரங்கில் படமாக்கினார்கள். நடன இயக்குனர் ஜானி-பிரபுதேவா ஆகிய இருவரின் மேற்பார்வையில், அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பிரபுதேவா- ஹன்சிகாவுடன் 400-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் மற்றும் மும்பை மாடல் அழகிகள், பாடல் காட்சியில் பங்கேற்றார்கள்.

Next Story