என் ஆளோட செருப்ப காணோம்


என் ஆளோட செருப்ப காணோம்
x
தினத்தந்தி 18 Aug 2017 10:23 AM GMT (Updated: 20 Nov 2017 7:12 AM GMT)

“ஒரு குடும்பம் போல் பழகினார்கள்” ஆனந்தியை கவர்ந்த படக்குழுவினர்.

‘கோடம்பாக்கம்,’ ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ஜெகன்நாத் அடுத்து, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இதில், ‘பசங்க,’ ‘கோலி சோடா’ படங்களில் நடித்த பக்கோடா பாண்டி தனது பெயரை, ‘தமிழ்’ என்று மாற்றிக்கொண்டு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்து இருக்கிறார்.

“இந்த படத்துக்காக முதலில் ஆனந்தியை அணுகியபோது, பக்கோடா பாண்டி ஜோடியாக நடிக்க மாட்டேன் என்றார். படத்தின் பெயரை கேட்டு, நடிப்பதற்கு தயங்கினார். கதையை கேட்ட பிறகு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்பின்போது, பாண்டி என்ற தமிழின் நடிப்பை பார்த்து ஆனந்தி அசந்து போனார்” என்கிறார், டைரக்டர் ஜெகன்நாத்.

“அப்படி என்ன கதை?” என்று அவரிடம் கேட்டபோது, சிரித்தபடி சொன்னார்:
“கதாநாயகி சந்தியா மற்றும் அவள் தொலைத்த ஒரு ஜோடி செருப்புகளை சுற்றி நடக்கும் கதைதான், ‘என் ஆளோட செருப்ப காணோம்.’ ஒரு அடைமழை காலத்தில் தொலைத்த அந்த செருப்புகளை தேடி, குடையுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான், கதாநாயகன் கித்தான்.

30 நாட்கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில், அவன் சந்திக்கும் வித விதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் அந்த செருப்புகளால் ஏற்படும் நிகழ்வுகளின் தொகுப்பே இந்த படம்.

டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், யோகி பாபு, சிங்கம் புலி, பாலசரவணன், தளபதி தினேஷ், ரேகா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். வெடிக்காரன் பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து இருக்கிறார்.
படம் முழுக்க மழை பெய்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ஒரு காட்சியில் கூட ஆட்சேபம் தெரிவிக்காமல் படத்துக்கு, ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் நடிக்க முதலில் தயங்கிய ஆனந்தி, பின்னர் படக்குழுவினர் அனைவரிடமும் நட்புடன் பழகினார். கடைசி நாள் படப்பிடிப்பில் அழுது விட்டார். “படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகினார்கள். சவுகரியமாக உணர்ந்தேன்” என்று கண்களை துடைத்துக் கொண்டார்.”

ஒளிப்பதிவு - சுக செல்வன், இசை - இஷான்தேவ், தயாரிப்பு - வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இவர் தயாரிக்கும் முதல் படம் இது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜெகன்நாத்.

Next Story