வீர சிவாஜி


வீர சிவாஜி
x
தினத்தந்தி 17 Dec 2016 11:33 PM GMT (Updated: 17 Dec 2016 11:33 PM GMT)

கதாநாயகன்–கதாநாயகி: விக்ரம் பிரபு–ஷாம்லி. டைரக்ஷன்: கணேஷ் விநாயக். கதையின் கரு: கள்ள நோட்டு கும்பலிடம் சிக்கும் கதாநாயகன். ஆதரவற்ற இளைஞர் விக்ரம் பிரபுவின் ஒரே ஆதரவு அவருடைய அக்காளும் (வினோதினி), அக்காள் மகள் (பேபி சாதன்யா)வும்தான். இந்த நிலையில் அவருக்கும், ஷாம்லிக்கும் ஒரு மோ

கதாநாயகன்–கதாநாயகி: விக்ரம் பிரபு–ஷாம்லி.

டைரக்ஷன்: கணேஷ் விநாயக்.

கதையின் கரு: கள்ள நோட்டு கும்பலிடம் சிக்கும் கதாநாயகன்.

ஆதரவற்ற இளைஞர் விக்ரம் பிரபுவின் ஒரே ஆதரவு அவருடைய அக்காளும் (வினோதினி), அக்காள் மகள் (பேபி சாதன்யா)வும்தான். இந்த நிலையில் அவருக்கும், ஷாம்லிக்கும் ஒரு மோதலில் ஆரம்பிக்கிறது, காதல். இவர்கள் காதல் நெருக்கமாகி வரும் வேளையில், சிறுமி சாதன்யாவை ஒரு வினோத வியாதி தாக்குகிறது. ‘ஆபரேஷன்’ செய்து கொண்டால்தான் உயிரை காப்பாற்ற முடியும்...அதற்கு இருபத்தைந்து லட்சம் செலவாகும் என்கிறார், டாக்டர்.

விக்ரம் பிரபு, நண்பர்களான யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகிய இருவரின் உதவியை நாடுகிறார். பத்து லட்சம் அசல் நோட்டு கொடுத்தால், ஐம்பது லட்சம் போலி நோட்டு தருகிறோம் என்று யோகி பாபு–ரோபோ சங்கர் ஆகிய இருவரிடமும் கள்ள நோட்டு கும்பல் ஆசை காட்டுகிறது. இந்த சதி தெரியாமல் போய் பத்து லட்சம் பணத்தை கொடுக்கிறார், விக்ரம் பிரபு. அந்த பணத்துடன் கள்ள நோட்டு கும்பல் மாயமாகிறது.

அவர்களை பிடித்து தனது பணத்தை மீட்க முயற்சிக்கிறார், விக்ரம் பிரபு. அவர் கள்ள நோட்டு கும்பலை பிடித்தாரா, பணத்தை கைப்பற்றினாரா, அக்காள் மகளுக்கு ஆபரேஷன் நடந்ததா? என்பது மீதி கதை.

‘கால் டாக்சி’ டிரைவராக வருகிறார், விக்ரம் பிரபு. அக்காள் மகள் மீது பாச மழை பொழிதல், ஷாம்லியுடன் காதல், கள்ள நோட்டு கும்பலுடன் மோதல் என ஒரு அதிரடி நாயகனுக்கே உரிய பொறுப்புகளை சுலபமாக சுமந்து இருக்கிறார். ஜான் விஜய் கும்பலுடன் மோதுகிற சண்டை காட்சியில் இறங்கி அடித்து இருக்கிறார். இவருக்கும், ஷாம்லிக்குமான காதல் காட்சிகள் மனதை ஈர்க்கவில்லை என்றாலும், அதை பாடல் காட்சிகளில் சமன் செய்து இருக்கிறார்கள்.

அஞ்சலி பாப்பாவாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்த ஷாம்லி கதாநாயகியாகவும், அழகு. நடிப்பிலும் கவர்கிறார்.

யோகி பாபுவும், ரோபோ சங்கரும் சில இடங்களில், சிரிக்க வைக்கிறார்கள். வினோதினியும், பேபி சாதன்யாவும் உருக வைக்கிறார்கள். ஜான் விஜய்யும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் வில்லன்களாக மிரட்டுகிறார்கள். மாரிமுத்து போலீஸ் அதிகாரியாக ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார்.

‘‘தாறுமாறு தக்காளி சோறு,’’ ‘‘சொப்பன சுந்தரி நான்தானே’’ ஆகிய இரண்டு பாடல்களும், அதற்கேற்ற நடன அசைவுகளும், அட்டகாசம். புதுச்சேரியின் அழகை துல்லியமாக படம்பிடித்து இருக்கிறது, எம்.சுகுமாரின் கேமரா.

அக்காள் மகள் சென்டிமென்ட், காதல், கள்ள நோட்டு கும்பல் என விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் கணேஷ் விநாயக். படத்தின் கிளைமாக்ஸ், டைட்டிலுக்கு பெருமை சேர்க்கிறது.

Next Story