கோடிட்ட இடங்களை நிரப்புக


கோடிட்ட இடங்களை நிரப்புக
x
தினத்தந்தி 16 Jan 2017 6:24 AM GMT (Updated: 16 Jan 2017 6:24 AM GMT)

கதாநாயகன்-கதாநாயகி: சாந்தனு-பார்வதி நாயர். டைரக்‌ஷன்: பார்த்திபன். கதையின் கரு: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு தமிழ் இளைஞனுக்கு ஏற்படும் அனுபவங்கள். சாந்தனு, வெளிநாட்டில் ‘சாப்ட்வேர்’ தொழில் செய்யும் இளைஞர். நிலம் வாங்குவதற்காக, சென்னை வருகிறார். அவருக்கு ரியல் எஸ்டேட் தரகரான பார்த்திபன் உதவ முன்வரு

கதாநாயகன்-கதாநாயகி: சாந்தனு-பார்வதி நாயர்.
டைரக்‌ஷன்: பார்த்திபன்.

கதையின் கரு: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு தமிழ் இளைஞனுக்கு ஏற்படும் அனுபவங்கள்.

சாந்தனு, வெளிநாட்டில் ‘சாப்ட்வேர்’ தொழில் செய்யும் இளைஞர். நிலம் வாங்குவதற்காக, சென்னை வருகிறார். அவருக்கு ரியல் எஸ்டேட் தரகரான பார்த்திபன் உதவ முன்வருகிறார். வீட்டு சாப்பாட்டை விரும்பும் சாந்தனுவின் ரசனை அறிந்து, அவரை தன் வீட்டிலேயே தங்க வைக்கிறார். வயதான அவருக்கு மோகினி என்ற பெயரில், ஒரு அழகான மனைவி. (பார்வதி நாயர்)
பார்த்திபனுடன் இல்லற வாழ்க்கையில் திருப்தி இல்லாத பார்வதி நாயர், சாந்தனுவுடன் நெருக்கமாக பழகுகிறார். சபலத்தை தூண்டுகிற மாதிரி நடந்து கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், அவருடைய சபல வலையில் சாந்தனுவும் சிக்குகிறார். இருவரும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, இணைந்து விடுகிறார்கள்.

அதை பார்த்திபனின் நண்பர் தம்பிராமய்யா பார்த்து விடுகிறார். அவர் பார்த்திபனிடம் சொல்லி விடுகிறார். பார்த்திபன் என்ன செய்தார், சாந்தனு-பார்வதி நாயர் இருவரும் என்ன ஆகிறார்கள்? என்பது எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய ‘கிளைமாக்ஸ்.’

சென்னை விமான நிலையத்தில், கதை ஆரம்பிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவை பார்த்திபன் வரவேற்று அழைத்துச் செல்வது போல் படம் தொடங்குகிறது. மோகினி (பார்வதி நாயர்) பேயா, பெண்ணா? என்ற சின்ன ‘சஸ்பென்ஸ்’சுடன் ஆரம்ப காட்சிகள் நகர்கின்றன. அவர் பெண்தான் என்பது நிரூபணம் ஆனதும், கதை ‘கிளுகிளுப்பான ரூட்’டுக்கு மாறுகிறது.

மோகினியின் மோக வலைவீச்சு பற்றி தனது குரு சிம்ரனிடம் சாந்தனு அவ்வப்போது போனில் தெரிவிப்பது போலவும், அவருக்கு சிம்ரன் ஆலோசனை சொல்வது போலவும் கதை நகர்ந்து, கேள்விக்குறியுடன் இடைவேளை வருகிறது. இடைவேளைக்குப்பின், திரைக்கதை விறுவிறுப்பாக பயணித்து, யூகிக்க முடியாத காட்சியுடன் முடிவுக்கு வருகிறது.

வெளிநாட்டில் ‘சாப்ட்வேர்’ தொழிலில் இருக்கும் இளைஞர் கதாபாத்திரத்தில், சாந்தனு கச்சிதம். ஆரம்பத்தில் பார்வதி நாயரின் ‘மோகினி விளையாட்டில்’ பயந்து மிரண்டு போவதையும், பின்னர், பார்வதி நாயரின் அழகில் படிப்படியாக மயங்குவதையும் மிக தெளிவாக முகத்துக்கு கொண்டு வருகிறார். “தப்பு செய்து விட்டோம்” என்ற குற்ற உணர்ச்சியில் ஏற்படும் தவிப்பை மிக இயல்பாக காட்டுகிறார்.

ஒரு விபத்தில் கால் ஊனமான வயதான ஆசாமியாக பார்த்திபன். அவருக்கே உரிய வசன விளையாட்டுகளுடன் படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். சில இடங்களில், கைதட்டவும் வைக்கிறார். ‘மோகினி’ கதாபாத்திரத்துக்கு மிக சரியான தேர்வு, பார்வதி நாயர். அவருடைய வசீகரமான உடற்கட்டும், நடிப்பும்தான் படத்தின் பிரதான அம்சம். சாந்தனுவுக்கு சபலத்தை தூண்டுகிற காட்சிகளில், மற்ற கவர்ச்சி நாயகிகளுக்கு சவால் விட்டு இருக்கிறார்.

ஓடிப்போன மனைவி தொடர்பான தம்பிராமய்யாவின் நகைச்சுவை காட்சிகள், தியேட்டரை அமர்க்களப்படுத்துகின்றன. அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக கடத்துகிறது. சத்யா இசையில், பாடல்கள் எடுபடவில்லை. பின்னணி இசை, கதையுடன் இசைந்து இருக்கிறது.
இடைவேளை வரை கதை மப்பும் மந்தாரமுமாக (மந்தமாக) நகர்கிறது. இடையிடையே வரும் சிலேடை மற்றும் ‘பசுமை புரட்சி’ வசனங்களுக்கு தியேட்டரில் சிலர் கைதட்டுகிறார்கள். படத்தின் கடைசி பதினைந்து நிமிட காட்சிகள், பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனை.

Next Story