சிங்கம்-3


சிங்கம்-3
x
தினத்தந்தி 11 Feb 2017 11:13 PM GMT (Updated: 11 Feb 2017 11:13 PM GMT)

போலீஸ் கமிஷனர் கொலை வழக்கில் துப்பறிய ஆந்திரா சென்ற தமிழக போலீஸ் அதிகாரி.

கதையின் கரு:

ஆந்திர மாநிலத்தின் போலீஸ் கமிஷனர் ஜெயப்பிரகாசை அரசியல் செல்வாக்கு மிகுந்த தாதா ரெட்டி கொலை செய்கிறார். இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க தமிழ்நாட்டின் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி துரை சிங்கத்தை (சூர்யாவை) அழைக்கிறார், உள்துறை மந்திரி சரத்பாபு. அவருடைய அழைப்பை ஏற்று ஆந்திரா செல்கிறார், சூர்யா. ரெயில் நிலையத்திலேயே அவரை போட்டுத்தள்ள ஆட்களை அனுப்புகிறார், ரெட்டி.

ரவுடிகளை துவம்சம் செய்யும் சூர்யாவை பார்த்து அவர் மீது காதல்வசப்படுகிறார், துப்பறியும் நிருபர் சுருதிஹாசன். சூர்யா போகும் இடமெல்லாம் சுருதி பின் தொடர்ந்து காதல் வலை வீசுகிறார். அவருடைய காதல் வலையில் சிக்காத சூர்யா, மனைவி அனுஷ்காவை அடிக்கடி ரகசியமாக சந்திக்கிறார். இந்த சூழ்நிலையில், கமிஷனர் கொலை வழக்கில் ரெட்டியுடன் ஒரு ஆஸ்திரேலிய தொழில் அதிபர் (அனூப் தாகூர் சிங்) சம்பந்தப்பட்டிருப்பதை சூர்யா கண்டுபிடிக்கிறார். அரசியல் செல்வாக்கு மிகுந்த அந்த 2 வில்லன்களையும் போலீஸ் அதிகாரி சூர்யா எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறார்? என்பது மீதி கதை.

ரெயில் நிலைய சண்டையுடன் ஆரம்பிக்கும் சூர்யாவின் அறிமுக காட்சியே அமர்க்களமாக இருக்கிறது. படம் முழுக்க அவர் அனல் பறக்க (‘பஞ்ச்’) வசனம் பேசி, ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார். சமூக விரோதிகளை வேட்டையாடி, காக்கி சட்டைக்கு கம்பீரம் சேர்க்கிறார். இடையிடையே அனுஷ்கா, சுருதிஹாசன் ஆகிய இருவருடனும் கனவு பாடல்களுக்கு ஆடுகிறார். ரெட்டியிடம், “நான் உங்க ஆளுதான்” என்று பேசிக்கொண்டே அவருக்கு வலை விரிக்கும் சூர்யாவின் துப்பறியும் பாணி, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது.

தன்னை ஓட்டலுக்கு வரவழைக்கும் வில்லன் அனூப் தாகூர் சிங்கை சூர்யா போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கும் இடத்திலும், விமான நிலையத்தில் அவரை மடக்கும் ஆஸ்திரேலிய போலீஸ், டேனியை கொன்ற துரைசிங்கம் இவர்தான் என்பதை தெரிந்து, ‘சல்யூட்’ அடிக்கும் இடத்திலும், “இந்தியா குப்பை நாடு” என்று எகத்தாளமாக பேசும் வில்லனிடம் சூர்யா, இந்தியாவின் மாண்புகளை பட்டியலிடும் காட்சியிலும், தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.
அனுஷ்கா குண்டாக இருப்பதால், சூர்யாவுக்கு அக்காள் மாதிரி தெரிகிறார். பாடல் காட்சிகளில் அவரால் நடனம் ஆட முடியாததால், நடக்க விட்டு இருக்கிறார்கள். சுருதிஹாசன், பளிச் என்று இருக்கிறார். இவர் சூர்யாவை விரட்டி விரட்டி காதல் கணை வீசும் சீன்கள் எரிச்சலை ஏற்படுத்தினாலும், தன் காதல் தோல்வி அடைந்ததை உணர்ந்து, “ஒருநாள் முழுக்க கதவை பூட்டிக்கொண்டு அழுதால் சரியாயிடும்” என்று விம்முகிற இடத்தில், நடிப்பின் வாரிசு என்பதை பதிய வைக்கிறார்.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம். அவர்களில் கதாபாத்திரங்களாக மனதில் நிற்பவர்கள் ராதிகா சரத்குமார், நாசர், ராதாரவி, விஜயகுமார் என சிலரே. படத்தின் முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் இமான் அண்ணாச்சியும் கலகலப்பூட்டுகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், பாடல்கள் மெலடி விருந்து. வெளிநாட்டு பாடல் காட்சிகளில் பிரியனின் ஒளிப்பதிவு, பிரமிக்க வைக்கிறது. “நான் பார்த்ததை எல்லாம் திங்கிற ஒநாய் இல்ல. பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்,” “போலீஸ்காரன் ஒதுங்குறான்னா பதுங்குறான்னு அர்த்தம். பதுங்குறான்னா பாயப்போறான்னு அர்த்தம்” போன்றவை ஹீரோ இமேஜை உயர்த்திப் பிடிக்கிற வசன வரிகள். “தாய், தங்கை, தாரம் தவிர, எல்லா பொம்பளைகளையும் தப்பாதான் பார்ப்பீங்களா?” என்ற வரிகளுக்கு தாய்க்குலத்தின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும். திரைக்கதை பர பர...விறு விறு...என மின்னல் வேகம்.

வெளியில் தெரியாத ஒரு அபாயத்தை கருவாக வைத்து, சமூக அக்கறையுடன் கதை சொல்லியிருக்கும் டைரக்டர் ஹரிக்கு பாராட்டுகள்.

Next Story