காதல் கண் கட்டுதே


காதல் கண் கட்டுதே
x
தினத்தந்தி 21 Feb 2017 11:39 PM GMT (Updated: 21 Feb 2017 11:39 PM GMT)

ஒரு காதல் ஜோடியின் ஊடலும், கூடலும்... நட்பாக பழகி வரும் கே.ஜி.க்கும், அதுல்யாவுக்கும் இடையே ஒரு கட்டத்தில் காதல் மலர்கிறது.

கதையின் கரு:  கே.ஜி. கோவையில் உள்ள ‘பைக்’ ஷோரூமில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார். அதுல்யா, பொள்ளாச்சியில் பத்திரிகை நிருபராக இருக்கிறார். இருவருக்குமான காதல் கனிந்து வரும் வேளையில், கே.ஜி. தன் வேலையில், ‘பிஸி’யாகி விடுகிறார். அதனால் காதலியிடம் பேசுவதை குறைத்துக் கொள்கிறார்.

கிடைத்த இந்த இடைவெளியில், போட்டோகிராபரான அனிருத்ஜி, அதுல்யாவிடம் காதலை தெரிவிக்கிறார். அதோடு அதுல்யாவை பின்தொடர்ந்து காதல் வளர்க்க முயற்சிக்கிறார். இதை அதுல்யா கே.ஜி.யிடம் தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் அதை அலட்சியப்படுத்தும் கே.ஜி. பின்னர் மெதுவாக சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்.

அவருடைய சந்தேகத்தை சூழ்நிலைகள் உறுதி செய்வது போல் அமைகின்றன. கே.ஜிக்கும், அதுல்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இரண்டு பேரும் ஒருவரையொருவர் வெறுத்த நிலையில் அனிருத்ஜி, அதுல்யாவுடன் மேலும் நெருக்கமாகிறார். கே.ஜி.-அதுல்யா காதல் என்னவாகிறது? இருவரும் சேர்ந்தார்களா, பிரிந்தார்களா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

கதாநாயகன் கே.ஜி.யும், நாயகி அதுல்யாவும் பக்கத்து வீட்டு பையனும், பெண்ணும் போல் மிக இயல்பாக தெரிகிறார்கள். இரண்டு பேர் தொடர்பான காட்சிகளிலும், நடிப்பிலும் யதார்த்தம். படம் பார்ப்பவர்களில் நிறைய பேர், ‘பிளாஷ்பேக்’குக்குள் போய் வருவார்கள்.

படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம், ஒளிப்பதிவு. பெரும்பாலான காட்சிகளில், பசுமை புரட்சி. பொள்ளாச்சி வட்டார எழில் கோலம். அந்த வசன நடை பாடலில், பவனின் இசை, மெல்லிசை. ஒரு இளம் ஜோடியின் காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் மற்றும் டைரக்டர் ஷிவராஜ் ஆர். கதாநாயகனின் நண்பர்கள் என்றாலே பாட்டிலும், கையுமாகத்தான் இருக்க வேண்டுமா? இந்த குறையை நீக்கிவிட்டு பார்த்தால், ‘காதல் கண்கட்டுதே’ ஒரு சுகமான இம்சை.


Next Story