எமன்


எமன்
x
தினத்தந்தி 27 Feb 2017 6:54 AM GMT (Updated: 27 Feb 2017 6:54 AM GMT)

அப்பாவை கொன்றது தெரியாமலே வில்லனை பழிவாங்கும் கதாநாயகன்.

கதையின் கரு:

விஜய் ஆண்டனியும், சில்பா மஞ்சுநாத்தும் வேறு வேறு சாதிகளை சேர்ந்தவர்கள். இருவரும் காதல் திருமணம் செய்துகொள்கிறார்கள். விஜய் ஆண்டனி அரசியலில் வளர்ந்து எம்.எல்.ஏ. ஆகப்போவது வாரிசு அரசியல்வாதியான அருள் டி.சங்கருக்கு பிடிக்கவில்லை. ஒரு மழை பெய்யும் இரவில் திட்டமிட்டு விஜய் ஆண்டனியை கொலை செய்கிறார்.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல், சில்பா மஞ்சுநாத் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார். மகன் விஜய் ஆண்டனி, தாத்தா சங்கிலி முருகன் பராமரிப்பில் வளர்ந்து ஆளாகிறார். தாத்தாவின் மருத்துவ செலவுக்காக, செய்யாத தப்பை செய்ததாக ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போகிறார், விஜய் ஆண்டனி. அங்கே அரசியல்வாதி மாரிமுத்துவின் அறிமுகம் கிடைத்து, மெதுவாக அரசியலுக்குள் நுழைகிறார்.

இவருக்கும் எம்.எல்.ஏ. ஆவதற்கான வாய்ப்பு வருகிறது. அதை விரும்பாத மூத்த அரசியல்வாதிகளான தியாகராஜனும், அருள் டி.சங்கரும் சேர்ந்து விஜய் ஆண்டனிக்கு எதிராக சதி செய்கிறார்கள். அவர்கள் திட்டப்படி, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் ஆண்டனியை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். அவர்களின் சதித்திட்டம் நிறைவேறியதா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

அப்பா–மகனாக விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரங்களில் வருகிறார். அப்பாவாக அனுதாபம் சம்பாதிக்கும் அவர், மகனாக அரசியல் சதுரங்க விளையாட்டுகளில் அழகாக காய்களை நகர்த்துகிறார். மியா ஜார்ஜுடன் மென்மையான காதல், வில்லன் ஆட்களுடன் ஆக்ரோ‌ஷ மோதல் என ஒரு அதிரடி நாயகனுக்கு உரிய வேலைகளையும் அட்டகாசமாக செய்கிறார்.

மியா ஜார்ஜ் நடிகை கதாபாத்திரத்தில், அழகு. விஜய் ஆண்டனியின் மனைவி ஆனபின், கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார்.

கதாநாயகன் விஜய் ஆண்டனிக்கு உதவி செய்வது போன்ற குணச்சித்ர பாத்திரத்தில் தோன்றி, கடைசியில் விஜய் ஆண்டனியின் உயிருக்கு உலை வைக்கும் வில்லனாக மாறி மிரட்டியிருக்கிறார், தியாகராஜன். அமைச்சராக வரும் அருள் டி.சங்கர், அமைதிப்புயல். கண்களிலேயே வில்லத்தனம் காட்டுகிறார். இவருடைய உதவியாளராக சார்லி. இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை, கதையுடன் ஒன்ற வைக்கிறது. ஒளிப்பதிவுடன் டைரக்டும் செய்திருக்கிறார், ஜீவா சங்கர். படத்தின் முதல் பாதி, மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில், வேகமான கதையோட்டம். அப்பாவை கொன்றவன் என்ற உண்மை தெரியாமலே கதாநாயகன், வில்லனை தண்டிக்கும் ‘கிளைமாக்ஸ்,’ வித்தியாசமாக இருக்கிறது. மற்ற காட்சிகள் எல்லாமே ஏற்கனவே பல படங்களில் பார்த்து ரசித்தவை. அரசியல் மற்றும் அரசியல்வாதி பற்றி வரும் வசன வரிகள், பளிச்.

Next Story