பகடி ஆட்டம்


பகடி ஆட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2017 9:13 AM GMT (Updated: 28 Feb 2017 9:13 AM GMT)

கவுரி நந்தா ஏழை குடும்பத்து பெண். இவர் ஆட்டோ ஓட்டி தனது தங்கை மோனிகாவை கல்லூரியில் படிக்க வைக்கிறார்.

ஆனால் பணக்கார இளைஞர் சுரேந்தர் காதல் வலை வீசி மோனிகாவை வீழ்த்துகிறார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் சொல்லி படுக்கையிலும் இணைகிறார். அதன்பிறகு மோனிகாவை கழற்றி விடுகிறார். இதனால் விரக்தியான மோனிகா தூக்கில் தொங்குகிறார். பாசமாக வளர்த்த தங்கை இறந்ததில் அதிர்ச்சியாகும் கவரி நந்தா பழிவாங்குவதற்காக சுரேந்தரை கடத்தி மரப்பெட்டிக்குள் அடைத்து உயிரோடு புதைக்கிறார். கவுரி நந்தா கைது செய்யப்பட்டாரா? சுரேந்தர் நிலைமை என்ன ஆனது? என்பது ‘கிளைமாக்ஸ்.’
சுரேந்தர் இளமை துறுதுறுப்புடன் வருகிறார். இளம்பெண்களை வசியப்படுத்தி ஆசையை தீர்த்துக்கொள்வதில் பணக்கார மிடுக்கு காட்டுகிறார். மோனிகாவை காதலிப்பதுபோல் நடித்து நாசப்படுத்தும் காட்சிகளில், வில்லத்தனம். இவர், மரப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு உயிருக்கு போராடும்போது, பதற்றம். லட்சிய கனவுகளுடன் ஆட்டோ ஓட்டும் பெண்ணாக மனதில் நிற்கிறார் கவுரி நந்தா. தங்கை காதலில் சிக்கி வழிமாறி போவது கண்டு தவிக்கும்போதும், சுரேந்தரை கடத்தி ஆவேசப்படும்போதும் நடிப்பில் கவனம் பெறுகிறார். மோனிகா அழகில் கவர்கிறார். காதல் உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். முடிவு, பரிதாபம்.
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ரகுமான் நிறைவு. கடத்தல் பற்றி துப்பு துலக்குவதை இன்னும் வேகப்படுத்தி இருக்கலாம். அழுத்தமான கதை களத்தில் சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் காட்சிகளை நகர்த்தி கதையோடு ஒன்ற வைக்கிறார், இயக்குனர் ராம் கே.சந்திரன். கார்த்திக்ராஜா இசையும் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவும் பக்கபலம்.


Next Story