முப்பரிமாணம்


முப்பரிமாணம்
x
தினத்தந்தி 6 March 2017 11:49 PM GMT (Updated: 6 March 2017 11:49 PM GMT)

போலீஸ் அதிகாரி மகன் சாந்தனுவும் சாதி வெறிபிடித்த குடும்பத்தை சேர்ந்த சிருஷ்டி டாங்கேயும் சிறுவயதில் இருந்தே நட்பாக பழகுகிறார்கள்.

கதையின் கரு: மனம் மாறிய காதலியை கடத்தும் இளைஞன்.

இன்னொரு சாதி இளைஞரை காதலிக்கும் தனது தங்கையை கொன்று புதைக்கும் சிருஷ்டியின் சித்தப்பா ரவிபிரகாசை, சாந்தனுவின் தந்தை கைது செய்து சிறையில் அடைக்க பகை ஏற்படுகிறது. பிறகு சாந்தனு குடும்பம் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்கிறது.

சாந்தனு வளர்ந்த பிறகு அதே கிராமத்துக்கு மீண்டும் வருகிறார்கள். சிருஷ்டி டாங்கேயும் சாந்தனுவும் சந்தித்து காதல் வயப்படுகிறார்கள். இந்த காதல் விவகாரம் சிருஷ்டி குடும்பத்துக்கு தெரிந்ததும் அவரை நகரத்துக்கு அனுப்பி டாக்டருக்கு படிக்க வைக்கின்றனர். காதலிக்காக சாந்தனு வெளிநாட்டு வேலைக்கு செல்லும் வாய்ப்பை உதறுகிறார். இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்க்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், கல்லூரி விழாவுக்கு நடிகராக இருக்கும் ஸ்கந்தாவை சிருஷ்டி டாங்கே அழைத்து வருகிறார். அதன்பிறகு சிருஷ்டியை சாந்தனுவால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்கான காரணம் என்ன? சாந்தனு என்ன முடிவு எடுத்தார்? என்பது மீதி கதை.

சாந்தனுவுக்கு முக்கிய படம். ஆரம்பத்தில் இளமை துறுதுறுப்புடன் காதலில் சுற்றும் அவர் பிறகு உருமாறுகிறார். காதல் தோல்வியில் உடைந்து தாய் இறந்ததையும் உணரமுடியாத போதை அடிமையாகி அழுத்தம் பதிக்கிறார். தாடி, சீற்றமான பார்வை என்று இன்னொரு தோற்றத்திலும் மெனக்கெட்டு இருக்கிறார். திருமண மண்டபத்தில் புகுந்து மணப்பெண்ணாக இருக்கும் சிருஷ்டி டாங்கேயை கடத்தும் சண்டை காட்சியில் அனல்.

காட்டுக்குள் சிருஷ்டியின் சுயரூபம் அறிந்து என்னை சுற்றி எல்லாம் பொய் என்று அழுது புலம்பும் காட்சியில் மனதில் நிற்கிறார். சிருஷ்டி டாங்கே சிரிப்பில் வசீகரிக்கும் அழகான காதலி. அவரது இன்னொரு முகம் அதிர வைக்கிறது. கயல் பெரெரா, ரவிபிரகாஷ் வில்லத்தனம் காட்டுகின்றனர். நடிகராக வரும் ஸ்கந்தா, தம்பிராமையா, அப்புக்குட்டி, சுவாமிநாதன் கதாபாத்திரங்களும் நிறைவு.

காதல் கதையை திகில் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் அதிரூபன். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதியில் வேகம். ஜி.வி.பிராகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ராசாமதி கேமரா ரோட்டிலும் காட்டிலும் சேசிங் காட்சிகளில் கடுமையாக உழைத்து இருக்கிறது.

Next Story