யாக்கை


யாக்கை
x
தினத்தந்தி 6 March 2017 11:54 PM GMT (Updated: 6 March 2017 11:53 PM GMT)

அபூர்வ வகை ரத்தத்துக்காக நடக்கும் படுகொலை. கிருஷ்ணாவும், சுவாதியும் காதலர்கள். சுவாதியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஒரு பரிசு கொடுக்க கிருஷ்ணா விரும்புகிறார்.

கதையின் கரு: சொந்தமாக உழைத்த பணத்தில் தங்க சங்கிலி வாங்கிக் கொண்டு சுவாதியை சந்திக்க புறப்படுகிறார். அவர் கண் எதிரிலேயே சுவாதி மீது ஒரு ஆட்டோ மோதுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவரை ஒரு ஆம்புலன்ஸ் ஏற்றி செல்கிறது. ஆஸ்பத்திரியில் குற்றுயிராக கிடக்கும் அவரை ஆம்புலன்ஸ் டிரைவர் சுத்தியலால் அடித்து கொலை செய்கிறார்.

சுவாதி மீது மோதிய ஆட்டோ டிரைவர், ஆம்புலன்ஸ் டிரைவர், ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் ராதாரவி ஆகிய மூன்று பேரையும் காதலர் கிருஷ்ணா எப்படி பழிவாங்குகிறார்? என்பதை வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார், டைரக்டர் குழந்தை வேலப்பன்.

வெளிநாட்டில் இருந்து வரும் ராதாரவியின் மகன் குரு சோமசுந்தரம்தான் வில்லன் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. மூன்று கொலைகளையும் இவரே செய்தது போல் திரைக்கதை நகர்கிறது. துரு துரு ஜாலிப்பையன் கிருஷ்ணா-அவருடைய அழகான காதலி சுவாதி...இவர்களின் ஊடலும், கூடலுமாக மெலிதான காதல் கதை இன்னொரு பக்கம் நகர்கிறது. இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, எதிர்பாராத திருப்பம்.
இப்படி, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புடன், துப்பறியும் நாவலை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார், டைரக்டர். கிருஷ்ணாவின் இளமையும், நடிப்பும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. கலகல மாணவர், காதலியை பறிகொடுத்து பழிதீர்க்க பாய்பவர் ஆகிய இரண்டு விதமான உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், கிருஷ்ணா. சுவாதியின் தெத்துப்பல் சிரிப்பும், வசீகரமான அசைவுகளும், அழகு.

வில்லன் குரு சோமசுந்தரம், அட்டகாசமான தேர்வு. ஹாலிவுட் வில்லன்களை நினைவூட்டுகிறார். போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ், போலீஸ்காரராக சிங்கம்புலி, கிருஷ்ணாவின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர்...கவனம் ஈர்க்கும் இதர கதாபாத்திரங்கள். சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளன.

படத்தின் முதல் பாதி, மெதுவாக கடந்து போகிறது. இரண்டாம் பாதியில் வேகமும், விறுவிறுப்பும் அதிகம். கதை சம்பவங்கள் நிகழ்வது சென்னையிலா, கோவையிலா? என்ற குழப்பம் ஏற்படுவதை தவிர்த்து இருக்கலாம்.

Next Story