குற்றம் 23


குற்றம் 23
x
தினத்தந்தி 6 March 2017 11:58 PM GMT (Updated: 6 March 2017 11:57 PM GMT)

கர்ப்பிணி பெண்களின் மர்ம மரணங்களை துப்பறியும் போலீஸ் அதிகாரி. ராஜேஷ் குமாரின் நாவலை தழுவிய கதை.

கதையின் கரு:
ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாரும், அவரிடம் பாவமன்னிப்பு கேட்கும் பணக்கார கர்ப்பிணி பெண்ணும் கொல்லப்பட, திகிலுடன் படம் தொடங்குகிறது. போலீஸ் அதிகாரி அருண் விஜய் துப்பு துலக்குகிறார். கொலை நடந்தபோது சர்ச்சுக்குள் சென்ற மகிமா, கொலையாளிகள் வந்த கருப்பு நிற கார் பற்றி தகவல் சொல்கிறார்.

அப்போது கர்ப்பிணியாக இருக்கும் மந்திரியின் மருமகள் கழிவறையில் செத்து பிணமாக கிடக்கிறார். மகிமாவையும், கொலையாளிகள் கொல்ல முயற்சிக்கின்றனர். நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்து மாமியாரின் நச்சரிப்புக்கு ஆளான அருண் விஜய் அண்ணியும் பிரபல ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று கர்ப்பமாகிறார். அவரும் ஒருநாள் தூக்கில் பிணமாக தொங்க-அதிர்ச்சி. தற்கொலை என்று போலீசார் வழக்கை முடிக்கின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் டெலிவிஷன் நடிகையை அரவிந்த் ஆகாஷ் போனில் மிரட்டி பணம் பறித்துக்கொண்டு ஓடுகிறார். அவரை அருண்விஜய் விரட்டி பிடித்து விசாரிக்கும்போது கர்ப்பிணி பெண்கள் சாவின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. குற்றவாளிகள் யார் என்பதும் அவர்களுக்கும் அருண் விஜய்க்கும் நடக்கும் மோதலும் மீதி கதை.

அருண் விஜய்க்கு முக்கிய படம். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கம்பீரமாக வருகிறார். கொலையை வித்தியாசமாக துப்பு துலக்கும் காட்சிகளிலும் ஒன்ற வைக்கிறார். மகிமாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததால் அவரை இனிமேல் யார் திருமணம் செய்து கொள்வார் என்று பெற்றோர் புலம்பும்போது “நான் கட்டிக்கிறேன்” என்று சொல்லி மகிமாவின் நல்ல குணங்களை பட்டியலிடும் காட்சியில் கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றுகிறார்.

டெலிவிஷன் நடிகையிடம் மிரட்டி பணம் பறிக்கும் அரவிந்த் ஆகாசை பிடிக்க ரகசியமாக பின்தொடரும் சீன்கள் பரபரக்க வைக்கின்றன. அருண் விஜய்க்கும் அரவிந்த் ஆகாசுக்கும் ஒரு சிறிய அறைக்குள் நடக்கும் ஆக்ரோஷமான சண்டை பதற்றமூட்டுகிறது. கிளைமாக்ஸ் மோதலிலும் இடியாய் தாக்குகிறார், அருண்விஜய்.

மகிமா துருதுருவென வருகிறார். அருண்விஜய்யுடனான மோதலும் காதலும் ரசிக்க வைக்கின்றன. கொலையாளிகளை பார்த்து கதவுகளை சாத்தி நடுங்கும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அரவிந்த் ஆகாஷ், வம்சி கிருஷ்ணா இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். தம்பிராமையா, அபிநயா, சுஜா கதாபாத்திரங்களும் நிறைவு. வம்சி கிருஷ்ணா குற்றவாளியாகும் பிளாஸ்பேக்கை இன்னும் வலுவாக்கி இருக்கலாம்.
செயற்கை கருத்தரிப்பில் நடக்கும் குற்றங்களை சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் மிரட்டலாக காட்சிப்படுத்தி திறமையான இயக்குனர் என மீண்டும் நிரூபித்துள்ளார், அறிவழகன். விஷால் சந்திரசேகரன் பின்னணி இசையும், ‘தொடுவானம்’ பாடலும் ஈர்க்கின்றன. கே.எம்.பாஸ்கரன் கேமரா, காட்சிகளை அழகுபடுத்தி இருக்கிறது.


Next Story