பாம்பு சட்டை


பாம்பு சட்டை
x
தினத்தந்தி 29 March 2017 10:37 AM GMT (Updated: 29 March 2017 10:37 AM GMT)

குடிநீர் ‘கேன்’ வினியோகிக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனிடம், பாபிசிம்ஹா வேலை செய்கிறார்.

கதையின் கரு: ஒரு ஏழை இளைஞரும், கள்ள நோட்டு கும்பலும்...

அண்ணனை இழந்த அண்ணி பானுவுடன், அவர் ஒரே வீட்டில் வசிக்கிறார். தப்பாக பேசும் அக்கம்பக்கத்தினர் பற்றி கவலைப்படாமல், பானுவின் உடன் பிறந்த தம்பி போல் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்.

பானுவுக்கு மறுமணம் செய்து வைக்க பாபிசிம்ஹா முயற்சிக்கிறார். ஒரு ஆட்டோ டிரைவரை மணமகனாக்க முடிவு செய்கிறார். ஆட்டோ டிரைவருக்கு எட்டு லட்சம் கடன் இருக்கிறது. அந்த கடனை அடைக்க முன்வருகிறார், பாபிசிம்ஹா. இதற்காக, ஒரு கள்ள நோட்டு கும்பலின் வலையில் அவர் சிக்குகிறார்.

அதில் இருந்து அவர் மீண்டாரா, இல்லையா? அண்ணிக்கு ஆட்டோ டிரைவருடன் திருமணம் நடந்ததா? போன்ற கேள்விகளுக்கு படத்தின் உச்சக்கட்ட காட்சி விடையளிக்கிறது.

‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் வாட்டர் கேன் கம்பெனியில், பாபிசிம்ஹா வேலைக்கு சேருவது போல் படம் தமாசாக ஆரம்பிக்கிறது. கீர்த்தி சுரேசை பார்த்த முதல் பார்வையிலேயே அவர் மீது பாபிசிம்ஹா காதல்வசப்படுகிறார். பாதி படம் வரை இவர் அவரை காதலிப்பதாக கூறுவதும், அவர் அந்த காதலை ஏற்க மறுப்பதுமாக, கதை வழக்கமான காதல் ‘ரூட்’டில் பயணிக்கிறது.

கே.ராஜன் தலைமையிலான கள்ள நோட்டு கும்பல் அறிமுகமானதும், பெரிய திருப்பம். கள்ள நோட்டு கும்பலை போலீஸ் சுற்றி வளைக்கும்போது, பாபிசிம்ஹாவும் சிக்கி விடுவாரோ என்ற பதைபதைப்பு ஏற்படுவது, நிஜம்.

பாபிசிம்ஹாவும், பானுவும் அப்பழுக்கற்ற சினேகத்துடன் பழகுவதும், பானுவுக்கு மறுமணம் செய்து பார்க்க பாபிசிம்ஹா ஆசைப்படுவதும், கவித்துவமான காட்சிகள். பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் சார்லியும், அவர் தொடர்பான காட்சிகளும் நெகிழவைக்கின்றன. சாப்பிடும்போது ஒரு பருக்கையை தவற விட்ட மகளிடம், அந்த பருக்கை எப்படியெல்லாம் தப்பி தட்டுக்கு வந்து சேர்ந்தது? என்பதை சார்லி விளக்கும் இடத்தில், தியேட்டரில் கைதட்டல். இதுபோல் படம் முழுக்க அங்கங்கே ஜீவனுள்ள வசன வரிகள்.

பாபிசிம்ஹா கதாபாத்திரத்தை உள்வாங்கி, மிக இயல்பாக நடித்து இருக்கிறார். இவருக்கும், கீர்த்தி சுரேசுக்குமான காதல், ஊடல், கூடல் சீன்கள் எல்லாமே கிளுகிளு. கீர்த்தி சுரேஷ் சிரிக்கும்போதும், முறைக்கும்போதும், அழகாக இருக்கிறார். அனுதாபத்துக்குரிய கதாபாத்திரத்தில் பானு, உருக வைக்கிறார். கே.ராஜன், முக்கிய வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

சார்லி, திறமையான நடிகர் என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கிறார். குருசோமசுந்தரம், ஆர்.வி.உதயகுமார் ஆகிய இருவரும் மனதில் பதிந்த இதர கதாபாத்திரங்கள். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இனி, சிரிப்பு வில்லனில் இருந்து குணச்சித்ரத்துக்கு மாறுவது உத்தமம்.

கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவும், அஜேஷ் அசோக்கின் பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. ஆடம் தாசன் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. கள்ள நோட்டு கும்பல் ஆஜரானதும் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. ‘பாம்பு சட்டை’க்கு சொல்லப்படும் விளக்கம், கூர்மையான வரிகள். ‘கிளைமாக்ஸ்,’ சரியான முடிவு.

Next Story