கவண்


கவண்
x
தினத்தந்தி 3 April 2017 5:19 PM GMT (Updated: 3 April 2017 5:19 PM GMT)

போஸ் வெங்கட், ஒரு மோசமான அரசியல்வாதி. இவருடைய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அந்த பகுதி மக்களை பாதிக்கிறது.

கதையின் கரு: தொலைக்காட்சி அதிபரின் அராஜகத்தை எதிர்த்து போராடும் நிருபர்.

அதை மூடி மறைத்து, போஸ் வெங்கட்டை நல்லவர், வல்லவர் என்று காட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார், தனியார் தொலைக்காட்சி அதிபர் ஆகாஷ்தீப் சைகல். தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பெண்ணை நாசம் செய்கிறார்கள், போஸ் வெங்கட்டின் அடியாட்கள். அவருடைய முகமூடியை கிழிக்க முயற்சிக்கிறார், அந்த தொலைக்காட்சியின் நிருபர் விஜய் சேதுபதி. அவரையும், அவருக்கு ஆதரவாக இருக்கும் மடோனா செபாஸ்டியன் மற்றும் பணியாளர்களையும் வேலை நீக்கம் செய்கிறார், தொலைக்காட்சி அதிபர் ஆகாஷ்தீப் சைகல்.

வியாபார நோக்கம் இல்லாமல் நேர்மையாக தொலைக்காட்சி நடத்தும் டி.ராஜேந்தர், விஜய் சேதுபதிக்கும், அவருடைய நண்பர்களுக்கும் கை கொடுக்கிறார். அதனால் டி.ராஜேந்தர், ஆகாஷ்தீப் சைகலின் பகையை சம்பாதிக்கிறார். இவருடைய தொலைக்காட்சியை ஒரேயடியாக இழுத்து மூடி, விஜய் சேதுபதியையும் தீர்த்துக்கட்ட ஆகாஷ்தீப் சைகல் சதி செய்கிறார்.

அந்த சதியில் இருந்து விஜய் சேதுபதியும், டி.ராஜேந்தரும் தப்பினார்களா, இல்லையா? என்பதே ‘கவண்.’ கனமான கதை. மிக கவனமாக கையாண்டிருக்கிறார், டைரக்டர் கே.வி.ஆனந்த்.

வீட்டில், சோம்பேறி பையன். வெளியில், நல்லவர்களுக்கு உதவும் மனப்பக்குவம் கொண்ட டி.வி. நிருபராக விஜய் சேதுபதி. வழக்கம் போல் யதார்த்தத்தை மீறாத நாயகனாக மனதில் நிற்கிறார். வில்லன் போஸ் வெங்கட்டிடம் இவர் அடி–உதை வாங்குவது, ஒரு உதாரண காட்சி. ஒரு பாடலுக்கு கலர் கலர் உடைகளில் கண் கவரும் பிரதேசங்களில், மடோனா செபாஸ்டியனுடன் ஆடிப்பாடுகிறார். இன்னொரு இடத்தில், டி.ராஜேந்தருடன் குத்து பாடலுக்கு ஆடியிருக்கிறார். மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதியுடன் ஊடலும் கூடலுமாக மனம் கவர்கிறார்.

படத்தின் கலக்கல் ‘ஸ்டார்,’ டி.ராஜேந்தர். அவருடைய சுபாவத்துக்கு அச்சு அசலாக பொருந்துகிற மாதிரி கதாபாத்திரம். அடுக்கு மொழி வசனம் பேசி, விஜய் சேதுபதி குழுவினருடன் குத்து பாடலுக்கு ஆடி, தூள் பறத்துகிறார். இவர் வரும் இடங்களில் எல்லாம் தியேட்டரில் கைதட்டல்.

‘மீண்டும் விக்ராந்த்’ என்று சொல்கிற மாதிரி, விக்ராந்துக்கு ஒரு முக்கிய வேடம். ‘கிளைமாக்ஸ்’சில் கதையை நகர்த்தி செல்லும் நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பாண்டியராஜன். ஆகாஷ்தீப் சைகல் மேட்டுக்குடி வில்லன் என்றால், இறங்கி அடிக்கிற தரை லோக்கல் அரசியல்வாதியாக போஸ் வெங்கட், கெத்து காட்டியிருக்கிறார்.

பாடல் காட்சிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம். பாடல்களை விட, ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை பாராட்டும்படி அமைந்து இருக்கிறது. படத்தின் முதல் பாதியில், கலகலப்பாக கதை சொல்லியிருக்கும் டைரக்டர் கே.வி.ஆனந்த், இரண்டாம் பாதியில் கனமான காட்சிகள் மூலம் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார். என்றாலும், நீளம் அதிகம். காட்டுக்குள் நடைபெறும் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகளை குறைத்து இருக்கலாம்.

Next Story