பவர் பாண்டி


பவர் பாண்டி
x
தினத்தந்தி 15 April 2017 6:30 AM GMT (Updated: 17 April 2017 6:17 AM GMT)

‘பவர் பாண்டி’ (ராஜ்கிரண்), ஒரு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர். மகன் பிரசன்னா, மருமகள் சாயாசிங், பேரன், பேத்தியுடன் வசிக்கிறார்.

கதையின் கரு: சினிமா ஸ்டண்ட் மாஸ்டரின் வாழ்க்கை.

 நேர்மையானவர். அக்கம் பக்கத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கிறார். வீதியில் கஞ்சா விற்கும் கும்பல் பற்றி போலீசில் இவர் புகார் செய்ய–பிரச்சினை ஆகிறது. மகன் பிரசன்னா கோபித்துக்கொள்கிறார். மகனின் கோபத்தை தாங்க முடியாத ராஜ்கிரண், கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போகிறார். அதன் பிறகு அவர் என்ன ஆகிறார்? என்பது உணர்ச்சிகரமான மீதி கதை.

கதையும், கதாபாத்திரமும் ராஜ்கிரணை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது போல், அத்தனை பொருத்தம். 64 வயதான ஸ்டண்ட் மாஸ்டர் ‘பவர் பாண்டி’யாகவே வாழ்ந்திருக்கிறார், ராஜ்கிரண். ரேவதியை சந்தித்தபின், ராஜ்கிரணின் நடிப்புக்கும், வசனங்களுக்கும் காட்சிக்கு காட்சி, கைதட்டல். குறிப்பாக, ‘‘உன் மனதில் நான் இன்னும் இருக்கேனா?’’ என்று ரேவதியிடம், ‘மெசேஜ்’ மூலம் கேட்கும் இடத்திலும், அவர் பதில் தராமல் போனதற்காக நேரில் போய் கதவைத்தட்டி, ‘‘நான் உன் கிட்ட பேச மாட்டேன், போ’’ என்று செல்லமாக கோபித்துக்கொள்ளும் இடத்திலும், தியேட்டரில் ஆரவாரம்.

இளமைப் பருவத்து ‘பவர் பாண்டி’யாக தனுஷ், படத்தை இன்னும் ஒரு படி மேலே தூக்கி நிறுத்துகிறார். தனுஷ் ஆஜரான பிறகே கதை வேகம் பிடிக்கிறது. அவருக்கும், மடோனா செபாஸ்டியனுக்குமான காதல் ‘கெமிஸ்ட்ரி,’ வாலிப–வயோதிக வேறுபாடில்லாமல், அனைத்து தரப்பினரின் இதயங்களையும் ஊடுருவும். ‘‘தட்டி தூக்கிட்டோம்ல’’ என்று தனுஷ் கெத்து காட்டும் ஸ்டைல், அழகு. சந்தையில், மடோனா செபாஸ்டியனிடம் வம்பு செய்பவரை சுளுக்கு எடுக்கும் சண்டை காட்சியில், வேகம்.

வயதான தந்தையை வைத்துக்கொண்டு அவருடைய பலம்–பலவீனங்களை அனுசரிக்க முடியாமல் ஆதங்கப்படுகிற சராசரி மகனாக பிரசன்னா, நடிப்பில் ‘ஸ்கோர்’ செய்கிறார். காணாமல் போன அப்பாவை நினைத்து அவர் கலங்குகிற காட்சிகளில், நெகிழ வைக்கிறார். இவருடைய மனைவியாக சாயாசிங், வந்து போவதுடன் சரி. நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை.

நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் ரேவதி. ராஜ்கிரணை சந்திக்கும் அந்த முதல் பார்வையிலேயே ரேவதி, ரேவதிதான் என்று சொல்ல வைக்கிறார். இவருக்கும், ராஜ்கிரணுக்குமான காட்சிகள், காதலுக்கு வயது ஒரு தடையல்ல என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றன.

டைரக்டர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன், திவ்யதர்ஷினி ஆகிய மூவரும் கவுரவ வேடங்களில், சிறப்பு சேர்க்கிறார்கள்.

கிராமத்து அழகை காட்டியதிலும், சென்னை–ஆந்திரா நெடுஞ்சாலையை காட்சிப்படுத்தியதிலும், ரா.வேல்ராஜின் கேமரா, கவனம் ஈர்க்கிறது. ஷான் ரோல்டன் இசையில் 2 பாடல்களில் மென்மையான ராகங்கள். பின்னணி இசை, கதையோடு இசைந்து இருக்கிறது.

தனுஷ், முதன்முதலாக டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதி, பெரிய அளவில் மனதை ஈர்க்காமல் மெதுவாக கடந்து போகிறது. ராஜ்கிரண் வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிளில் தேடலை தொடங்கியதும், படம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தனுசின் கபடி ஆட்டம், மடோனா செபாஸ்டியனின் காதல், பிரிவு என படத்தில் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது.

ராஜ்கிரண்–ரேவதியின் வயதை தாண்டிய காதலை டைரக்டர் தனுஷ் விரசம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பது, வசீகரிக்கிறது. அந்த கடைசி காட்சியில் ரேவதி, ராஜ்கிரணிடம் பழைய கருப்பு–வெள்ளை புகைப்படத்தை பரிசாக கொடுப்பதும், பதிலுக்கு ராஜ்கிரண், ரேவதியிடம் பத்திரமாக வைத்திருந்த பழைய காதல் கடிதத்தை கொடுப்பதும், கவிதை. தனுஷ் எழுதிய கவிதை.

Next Story