கடம்பன்


கடம்பன்
x
தினத்தந்தி 19 April 2017 5:17 PM GMT (Updated: 19 April 2017 5:16 PM GMT)

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்ப வனத்தில் மலைவாழ் மக்கள் பல தலைமுறைகளாக வசிக்கின்றனர்.

கதையின் கரு: காட்டை அழிக்க வரும் ‘கார்ப்பரேட்’ முதலாளியை எதிர்த்து போராடும் மலைவாழ் இளைஞன்.

அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார், ஆர்யா. காட்டுக்குள் சென்று உணவு சேகரித்து மலைவாழ் மக்களுக்கு வழங்குகிறார். யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் சமூக விரோதிகளை வனத்துறையினரிடம் பிடித்துக் கொடுக்கிறார். மலைவாழ் மக்கள் கூட்டத்தில் வசிக்கும் கேத்தரின் தெரசாவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் மலர்கிறது.

மகிழ்ச்சியாக நகரும் இவர்களின் வாழ்க்கை ஒரு ‘கார்ப்பரேட்’ நிறுவனத்தால் சின்னாபின்னமாகிறது. கடம்பவனத்தை சுற்றி உள்ள மலைப்பகுதியில் சிமென்ட் தொழிற்சாலைக்கு தேவையான தாதுப்பொருட்கள் பூமிக்குள் புதைந்து கிடப்பதாக கார்ப்பரேட் முதலாளி தீப்ராஜ் ராணாவுக்கு தகவல் கிடைக்கிறது. அந்த இடத்தை அபகரிக்க ரவுடிகளை அனுப்பி மலைவாழ் மக்களை விரட்டுகிறார். குடிசைகளுக்கு தீ வைக்கிறார். எதிர்க்கும் ஆர்யாவையும் அவருடைய நண்பர்களையும் அடித்து குற்றுயிராக்கி உயிரோடு மண்ணில் புதைக்கின்றனர்.

இதில் ஆர்யா மட்டும் பிழைக்கிறார். வீடு இழந்து அனாதைகளாக நிற்கும் தனது மக்களை பார்த்து தவிக்கும் அவர் கார்ப்பரேட் முதலாளியையும் அவர் கூட்டத்தையும் பழி தீர்க்க களம் இறங்குகிறார். அதில் வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை.

ஆர்யா கட்டுமஸ்தான மலைவாழ் இளைஞர் கதாபாத்திரத்தில் அபாரமாக பொருந்தி இருக்கிறார். விரிந்த மார்பு, அகன்ற தோள்கள், வெறித்த பார்வை, வில்லன்களை துவம்சம் செய்யும் அதிரடி என்று தெறிக்க விடுகிறார். உடலில் கயிறு கட்டி மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கில் குதித்து தேன் எடுப்பது, மரம் விட்டு மரம் தாவுவது, உயரமான மரத்தில் மின்னல் வேகத்தில் ஏறுவது என்று சாகசம் காட்டுகிறார். யானைகள் கூட்டத்தில் நடக்கும் ஆக்ரோஷமான கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிரட்டல்.

கேத்தரின் தெரசா வன தேவதையாக வசீகரிக்கிறார். காதல் காட்சிகளிலும் கவர்கிறார். தீப்ராஜா ராணா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ், ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி ஆகியோர் கதாபாத்திரங்களும் கச்சிதம். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. கார்ப்பரேட் நிறுவனத்தின் வருகைக்கு பின் கதை வேகம் எடுக்கிறது. காடுகள் அழிப்பை கருவாக வைத்து குடும்ப உறவுகள், காதல், அதிரடி கலவையில் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார், டைரக்டர் ராகவா.

‘காட்டை அழிப்பது தாயின் கர்ப்பப்பையை அழிக்கிற மாதிரி,’ ‘நம்ம பாட்டன் பூட்டன் பார்த்த பாதி வளங்களை நம்ம ஐயனுங்க பார்க்கலை. நம்ம ஐயனுங்க பார்த்த மீதி வளங்களை நாம பார்க்கலை. நாம் பார்த்த வளங்களை பின்னாடி வர்ற சந்ததிங்க பார்ப்பாங்களானு தெரியலை,’ ‘வசதிங்கிறது வாழ்ற தரத்துல இல்லை. வாழ்ற முறையில் இருக்கு...’ என்பனபோன்ற வசனங்கள் பலம். சதீஷ்குமார் கேமரா காடு, மலை, அருவிகளோடு வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன.



Next Story