பாகுபலி-2


பாகுபலி-2
x
தினத்தந்தி 29 April 2017 7:30 AM GMT (Updated: 29 April 2017 7:30 AM GMT)

"பாகுபலி" படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் அதன் இரண்டாம் பாகம். மகிழ்மதி தேசத்தின் அரச வாரிசான பாகுபலியை அந்த நாட்டின் விசுவாசமான தளபதி கட்டப்பா வாளினால் குத்தி கொல்வது போல், முதல் பாகம் முடிவடைந்திருந்தது. பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்பதற்கு இரண்டாம் பாகம் விளக்கம் அளிக்கிறது.


மகிழ்மதி தேசத்துக்கு அரசனாக பாகுபலியான பிரபாசை, ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் அறிவிக்கிறார். பிரபாசுக்கு முடி சூட்டும் நாளும் குறிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், நாட்டில் உள்ள மக்கள் குறைகளை தெரிந்துகொள்வதற்காக பிரபாசை, திக் விஜயத்துக்கு அனுப்புகிறார், ரம்யா கிருஷ்ணன். பிரபாஸ் மாறு வேடத்தில், திக் விஜயத்துக்கு புறப்படுகிறார். அவருடன் சத்யராஜும் செல்கிறார்.

மகிழ்மதி சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட குந்தல தேசத்துக்கு செல்லும் பிரபாஸ், அந்த நாட்டின் யுவராணியான அனுஷ்காவின் பேரழகில் மனம் பறி கொடுக்கிறார். இருவரும் ஒருவரையருவர் விரும்புகிறார்கள். குந்தல தேசத்துக்குள் புகுந்த கொள்ளையர்களை பிரபாஸ் வீர தீர சாகசங்கள் செய்து விரட்டியடிக்கிறார். அப்போது, அவர்தான் மகிழ்மதி தேசத்தின் இளவரசர் என்பது அனுஷ்காவுக்கு தெரிய வருகிறது.

இந்த நிலையில், அனுஷ்காவின் ஓவியத்தைப் பார்த்து மகிழ்மதி தேசத்தின் இன்னொரு இளவரசரான (ரம்யாகிருஷ்ணனின் சொந்த மகன்) ராணா மயங்குகிறார். அதை அறிந்து அவருக்கு அனுஷ்காவை மணமுடித்து வைப்பதாக ரம்யாகிருஷ்ணன் வாக்கு கொடுக்கிறார். வருங்கால மருமகளுக்கு பரிசு பொருட்களை அனுப்பி அவர் தனது விருப்பதை தெரிவிக்கிறார். அவரை அவமானப்படுத்துவது போல், அனுஷ்கா பதில் கடிதம் அனுப்புகிறார்.

அவரை கைது செய்து அழைத்து வரும்படி, பிரபாசுக்கு உத்தரவிடுகிறார், ரம்யாகிருஷ்ணன். முதலில் கைதாக மறுப்பு தெரிவிக்கும் அனுஷ்கா, பிரபாஸ் கொடுக்கும் உத்தரவாதத்தை நம்பி, அவருடன் மகிழ்மதி தேசத்துக்கு வருகிறார். அரசவையில், அவரை அவமானப்படுத்த முயற்சிக்கும்போது, பிரபாஸ் குறுக்கே வந்து காப்பாற்றுகிறார். "உனக்கு அரச பதவி வேண்டுமா, இந்த சாகசக்காரி வேண்டுமா?" என்று ரம்யா கிருஷ்ணன் கேட்க- பிரபாஸ் அரச பதவியை தியாகம் செய்து, அனுஷ்காவை மணக்க சம்மதம் தெரிவிக்கிறார்.

ராணா மகிழ்மதி தேசத்தின் அரசனாகிறார். அனுஷ்காவை மணந்த பிரபாஸ், ராணாவின் படை தளபதி ஆகிறார். அவரை கொல்வதற்கு நாசரும், ராணாவும் சேர்ந்து சதி செய்கிறார்கள். அந்த சதிக்கு 'கட்டப்பா' சத்யராஜும் உடந்தையாகிறார். கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். அந்த குழந்தை வளர்ந்து மகேந்திர பாகுபலியாகி (இன்னொரு பிரபாஸ்) தாயின் அடிமை சங்கிலியை உடைத்து மீட்டு, எப்படி அரசனாகிறார்? என்பது மீதி கதை.

அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி கதாபாத்திரங்களில் தந்தை-மகனாக 2 வேடங்களில், பிரபாஸ். சண்டை மற்றும் சாகச காட்சிகளில், முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் சவால் விட்டு இருக்கிறார். நடிப்பில் அனுஷ்காவுக்கும், ரம்யாகிருஷ்ணனுக்கும்தான் போட்டி. தமன்னா எங்கே இருக்கிறார்? என்று தேடுகிற மாதிரி, ஒரு குட்டி கதாபாத்திரம்.

கட்டுமஸ்தான உடற்கட்டில் பிரபாசுக்கு சரி போட்டியாக ராணா. இருவரும் மோதிக் கொள்ளும் உச்சக்கட்ட சண்டை காட்சி, இருக்கை நுனியில் அமர வைக்கிறது. கட்டப்பாவாக சத்யராஜ். முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு அதிக சந்தர்ப்பம். ராஜ விசுவாசம் மிகுந்த தளபதியாக படம் முழுக்க நெகிழ வைக்கிறார். பிங்கள தேவனாக நாசர் மிரட்டியிருக்கிறார்.

அவர் சத்யராஜை பார்த்து ராணாவிடம், "உன் தாயின் நாய் வருகிறது" என்று மட்டம் தட்ட- அவருடைய சதித்திட்டத்தை தெரிந்து கொண்டு, "நான் நாய் அல்லவா? மோப்பம் பிடித்தேன்" என்று நாசரை சத்யராஜ் எச்சரிக்கும் இடத்தில், கைதட்டுகிறார்கள். இதுபோல் கார்க்கியின் வசன வரிகள், சில இடங்களில் அமோக வரவேற்பை பெறுகின்றன.

சண்டை காட்சிகளில், கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு பிரமிப்பூட்டுகிறது. மரகதமணி இசையில், பாடல்கள் எதுவும் மனதை ஈர்க்கவில்லை. பின்னணி இசை, கதையோட்டத்துக்கு வேகம் கூட்டியிருக்கிறது. கதை சொன்ன விதத்திலும், பிரமாண்டமான காட்சி அமைப்புகளிலும், இப்படியும் படம் எடுக்க முடியுமா? என்று மிரள வைக்கிறார், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இந்திய சினிமாவின் மிரட்டல்.

Next Story