சதுர அடி 3500


சதுர அடி 3500
x
தினத்தந்தி 7 Aug 2017 5:44 PM GMT (Updated: 7 Aug 2017 5:43 PM GMT)

ரியல் எஸ்டேட் குற்றங்களை சித்தரிக்கும் கதை.. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடம் பணம் பறிக்கும் தாதா பிரதாப் போத்தன்.

 சிவில் என்ஜினீயராக இருந்து கட்டுமான தொழில் செய்யும் தயா சிலிக்ஸ் கட்டும் பல மாடி கட்டிடத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி மிரட்டுகிறார். தயா சிலிக்ஸ் மறுத்ததும் அடியாட்களை வைத்து அடித்து தூக்கில் தொங்கவிடுகிறார்.

கட்டுமான வேலை நிறுத்தப்பட்டு அந்த கட்டிடத்துக்குள் தயா சிலிக்ஸ் பேயாக சுற்றுவதாக நம்புகின்றனர். போலீஸ் அதிகாரி நிகில் மோகன் கொலையை விசாரணை நடத்துகிறார். அவருக்கும் தாதாவிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. கொலையான தயா சிலிக்ஸ் போல் ஒருவன் நடமாடுவது கண்டு அவனை பின்தொடர்கிறார் நிகில் மோகன். அவன் ஆவியா? தாதா பிரதாப் போத்தன் போலீஸ் பிடியில் சிக்கினாரா? என்பது கிளைமாக்ஸ்..

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடத்தில் தூக்கில் ஒருவர் தொங்குவது போன்று திகிலாக படம் தொடங்குகிறது. விசாரணை அதிகாரியாக வரும் ரகுமான் ஓரிரு காட்சிகளில் மட்டும் தலைகாட்டி விட்டு காணாமல் போகிறார். அதன் பிறகு நிகில் மோகனை சுற்றி முழு கதையும் நகர்கிறது. தயா சிலிக்ஸ் அங்கங்கு தலைகாட்டி மறைவது பயமுறுத்துகிறது.

நிகில் மோகன் கொலையை துப்பு துலக்குகிறார் சுவாதி தீக்ஷித்துடன் டூயட் பாடுகிறார். போலீஸ் அதிகாரி தோற்றத்துக்கு அவரது உடற்கட்டு பொருந்துகிறது. பிரதாப் போத்தன் கும்பலுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நடக்கும் துப்பாக்கி சண்டை விறுவிறுப்பு. காதலனை பிரிந்து இன்னொருவரை மணக்கும் இனியாவின் கதாபாத்திரம் ஈர்க்கவில்லை.

சுவாதி தீக்ஷித் வசீகரிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், மனோபாலா, கோவை சரளா சிரிக்க வைக்கின்றனர். தாதாவாக வரும் பிரதாப்போத்தனை நிறைய பயன்படுத்தி இருக்கலாம். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஜெய்சன் இயக்கி உள்ளார். திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் கேட்கலாம். பிரான்சிஸ் ஒளிப்பதிவும் பக்கபலம்.


Next Story