விவேகம்


விவேகம்
x
தினத்தந்தி 26 Aug 2017 12:12 AM GMT (Updated: 26 Aug 2017 12:12 AM GMT)

கதையின் கரு: நண்பர்களே துரோகிகள் ஆனால்... அஜித்குமார், சர்வதேச அளவிலான தீவிரவாதிகள் தடுப்பு பிரிவில் ரகசிய போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்.

அவருடைய அன்பான-அழகான மனைவி, காஜல் அகர்வால். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் ஆகிய நான்கு பேரும் தொழில் முறையிலான நண்பர்கள். நான்கு பேரும் இணைந்து செயல்படுகிறார்கள்.

அதி நவீனமான 2 அணு ஆயுதங்கள், இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக உளவு துறைக்கு தகவல் வருகிறது. அதை கண்டுபிடித்து செயல் இழக்க வைப்பதற்காக, அஜித் தலைமையில் நண்பர்கள் நான்கு பேரும் செல்கிறார்கள். பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட அணு ஆயுதங்களுக்கும், அக்‌ஷராஹாசனுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

அக்‌ஷராவை கண்டுபிடித்தால்தான் புதைக்கப்பட்ட அணு ஆயுதங்களை அழிக்க முடியும் என்ற நிலையில் அஜித்தும், நண்பர்களும் தீவிர வேட்டையில் ஈடுபடுகிறார்கள். அக்‌ஷராவை அஜித் கண்டுபிடித்த நிலையில், அவரை கொன்று விடும்படி உத்தரவு வர-அதற்கு அஜித் மறுத்து, அக்‌ஷராவை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவருடைய பாதுகாப்பையும் மீறி, அக்‌ஷராவை கொன்று விடுகிறார்கள்.

இந்த நிலையில், விவேக் ஓபராய் உள்பட நண்பர்கள் மூன்று பேரும் அஜித்துக்கு துரோகிகளாக மாறுகிறார்கள். அஜித்தை சர்வதேச தீவிரவாதி என்ற முத்திரை குத்தி, அவரை கொல்லவும் முயற்சிக்கிறார்கள். துரோகிகளான நண்பர்களிடம் இருந்து அஜித் தப்பினாரா, அணு ஆயுதங்களை கைப்பற்றி செயல் இழக்க செய்தாரா? என்பது மீதி கதை.
அஜித் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் படம் முழுக்க அழகாக-ஸ்டைலாக வருகிறார். சண்டை காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்து ஆச்சரியப்படுத்துகிறார்.

காட்சிக்கு காட்சி, ‘பஞ்ச்’ வசனம் பேசி, ரசிகர்களை திருப்தி செய்கிறார். “நான் யார் என்பதை என் எதிரில் நிற்பவர்கள்தான் முடிவு பண்ணுவாங்க. நான் நண்பனா இல்லை எதிரியா? என்று.” “ஜெயிக்கிறதுக்கு முன்னால் கொண்டாடுவதும், ஜெயிச்ச பிறகு ஆடுவதும் எனக்கு பிடிக்காது...” போன்ற வசன வரிகள், தியேட்டரில் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.
அஜித்தின் அழகான மனைவியாக காஜல் அகர்வால். ‘யாழினி’ என்ற கதாபாத்திரத்தில், அவருக்கு நடிக்கவும் சந்தர்ப்பம். மென்மையான காதல் வசனம் பேசும்போதும், “அவர் வருவார். உங்களை எல்லாம் அழிப்பதற்கு...” என்று கணவர் அஜித் மீது உறுதியான நம்பிக்கை வைத்து பேசும்போதும், ரசிக்க வைக்கிறார்.

கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் பதிகிற மாதிரி ஒரு கதாபாத்திரத்தில், அக்‌ஷராஹாசன். குடும்பத்துக்கு பெருமை சேர்க்கிற நடிப்பு. “என்னால் முகத்தை மாத்த முடிஞ்சுது. ஆனால் மனசை மாத்த முடியவில்லை. வாழும்போதுதான் ஓடிக்கிட்டே இருந்தேன்...சாகும்போதாவது ஒரே இடத்தில் நிம்மதியா சாகிறேன்” என்று அஜித் மடியில் உயிர் விடும்போது, அக்‌ஷரா நெகிழ வைக்கிறார்.

நண்பராக இருந்து துரோகியாக மாறுகிற வேடத்தில், விவேக் ஓபராய். கம்பீரமான வில்லன். “நண்பா...நண்பா...” என்று சிரித்துக் கொண்டே இவர் வில்லத்தனம் செய்வது, மாறுபட்ட நடிப்பு.

வெற்றியின் ஒளிப்பதிவும், அனிருத்தின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது. கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் வரிகள் வருடிக் கொடுக்கின்றன. “உன்னோடு வாழ்வது ஆனந்தமே...ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே...காதலாட காதலாட காத்திருந்தேனே...ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே...” என்ற வசீகர வரிகள் மனதை வசியம் செய்கின்றன.
ஹாலிவுட் ஸ்டைலில் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சிவா. காட்சிகளில் காட்டியிருக் கும் நேர்த்தியை, திரைக்கதையிலும் காட்டியிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Next Story