மகளிர் மட்டும்


மகளிர் மட்டும்
x
தினத்தந்தி 20 Sep 2017 6:55 PM GMT (Updated: 20 Sep 2017 6:55 PM GMT)

பள்ளி படிப்பு காலத்தில் பிரியும் மூன்று தோழிகளை வயதான பிறகு சேர்த்து வைத்து சந்தோஷப்படுத்தும் இளம்பெண்.

ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்பிரியா ஆகிய மூவரும் 1978-ல் விடுதியில் தங்கி பள்ளியில் படித்தபோது நெருங்கிய தோழிகளாகிறார்கள். ஒருநாள் சுவர் ஏறி குதித்து சினிமாவுக்கு சென்று தியேட்டர் வாசலில் ஆசிரியைகளிடம் கையும் களவுமாக சிக்கி பள்ளியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

அதன்பிறகு திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் அவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை. ஊர்வசியின் மகனுக்கும் டெலிவிஷனுக்கு டாகுமென்டரி படங்கள் எடுத்து கொடுக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அப்போது பள்ளியில் பிரிந்த தோழிகள் கதையை ஊர்வசி சொல்ல- அவர்களை சேர்த்து வைக்க ஜோதிகா முயற்சிக்கிறார்.
பேஸ்புக்கில் தேடி பானுப்பிரியாவையும் சரண்யா பொன்வண்ணனையும் கண்டு பிடிக்கிறார். இருவரும் குடும்ப பாரத்தில் அழுந்தி கிடக்கின்றனர்.

பானுப்பிரியாவை வீட்டில் கணவனும் மகனும் வேலைக்காரியாகவே நடத்துகின்றனர். சரண்யா பொன்வண்ணனின் கணவர் லிவிங்ஸ்டன் எப்போதும் போதையில் திரிகிறார். தோழிகள் மூவரையும் ஜோதிகா சந்திக்க வைத்து மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளியே காரில் அழைத்துச்செல்கிறார். இந்த பயணத்தில் அவர்கள் அனுபவிக்கும் சந்தோஷங்களும் குடும்பத்தினரிடம் இழந்த மரியாதையை மீண்டும் பெற்றார்களா? என்பதும் மீதி கதை.

ஜோதிகாவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிற இன்னொரு முக்கியமான படம். கதாநாயகன் இல்லாமல் கதை முழுவதையும் ஒற்றை ஆளாக சுமந்து தொய்வில்லாமல் நகர்த்தி இருக்கிறார். வசனங்களில் காட்டும் முகபாவனைகள், முற்போக்கு சிந்தனையில் எதையும் சாதிக்க துணியும் துறுதுறுப்பு என்று கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.

ஊர்வசியிடம் தோழிகள் கதையை கேட்டு உருகுவது, அவர்களை பேஸ்புக்கில் கண்டு பிடித்து போன்களில் பேச வைத்து மகிழ்ச்சியில் குதிக்க வைப்பது, தோழிகளை காரில் ஊர் ஊராக அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்துவது என்று படம் முழுக்க ஜோதிகாவுக்கு நிறைய வேலை. இப்படிப்பட்ட ஒரு இளம்பெண் தங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று வயதான பெண்களை ஏங்க வைத்து இருக்கிறார்.

கிளைமாக்சில், சத்தீஷ்கரில் அருவி ஏரியாவில் வயதான தோழிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பது கைதட்ட வைக்கிறது. ஊர்வசி கலகலப்பூட்டுகிறார். சரண்யா பொன்வண்ணன் தன்னை திட்டிக்கொண்டே இருக்கும் வயதான நோயாளி மாமியாருக்கு பணிவிடை செய்யும் காட்சிகளிலும் பானுப்பிரியா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் மனக்குமுறலை வெளிப்படுத்தியதிலும் பரிதாபப்பட வைக்கின்றனர். இளம் வயது மாணவிகளாக வரும் மூன்று பெண்களும் மனதில் நிற்கிறார்கள்.

பானுப்பிரியா மகன் போலீசிடம் சிக்கி தாய்ப்பாசத்தை உணர்ந்து அழுகிற காட்சியில் நெகிழ வைக்கிறார். மாதவன், நாசர், விதார்த், லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறிது நேரம் வந்தாலும் நிறைவு. ‘நீ தாஜ்மகாலை மும்தாஜுக்கு கட்டினதா பார்க்குறே, அனால் 14 குழந்தைகளை பெற்று இறந்த மனைவிக்கு கட்டிய கல்லறைதான் இந்த தாஜ்மகால்’ போன்ற அழுத்தமான வசனங்களும் உள்ளன. தோழிகளின் கார் பயண காட்சிகள் ஈர்ப்பு ஏற்படுத்தாமல் மெதுவாக நகர்கிறது.

தாய்மையின் உயர்வையும் அவர்களின் உளவியல் போராட்டங்களையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி பெண்மையை கொண்டாடும் படமாக தந்து இருக்கிறார் டைரக்டர் பிரம்மா. ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி இருக்கின்றன. மணிகண்டன் கேமரா ஆக்ரா, சத்தீஷ்கர் அழகை அள்ளி வந்து இருக்கிறது.

Next Story