களத்தூர் கிராமம்


களத்தூர் கிராமம்
x
தினத்தந்தி 8 Nov 2017 7:58 AM GMT (Updated: 8 Nov 2017 7:57 AM GMT)

சினிமா விமர்சனம்: போலீஸ் ரிக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட சிற்றூர், ”களத்தூர் கிராமம்” என்ற படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

கதையின் கரு:- களவு தொழிலையே குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவர், கிஷோர். போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இவருடைய உயிர் நண்பர் வீரண்ணா. இரண்டு பேருக்கும் ஒரு கட்டத்தில், பகை ஏற்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட மோதலில், வீரண்ணாவை கிஷோரே கொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அதற்கு பிராயசித்தமாக தனக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோர்களிடம் கொடுக்கிறார், கிஷோர். வீரண்ணாவின் பெற்றோர்கள் கிஷோர் மகனுடன் ஊரை விட்டே வெளியேறுகிறார்கள். அதுவரை போலீஸ் நுழையாத அந்த கிராமத்துக்குள் போலீஸ் நுழைகிறது. கிஷோர் என்ன ஆனார்? அவருடைய மகன் என்ன ஆகிறான்? என்பது ‘கிளைமாக்ஸ்.’

கருவத்திருக்கை என்ற கதாபாத்திரத்தில் கிஷோர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மொத்த கதையையும் தோளில் சுமந்து இருக்கிறார். வீரண்ணாவாக வரும் சுலில் குமார், கிஷோரின் மகனாக வரும் மிதுன் குமார், கதாநாயகி யக்னா ஷெட்டி, நீதிபதியாக வரும் அஜய் ரத்னம் ஆகியோர் கதாபாத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.

மொத்த படத்துக்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியிருக்கிறார், இளையராஜா. சில இடங்களில் கதை மெதுவாக நகர்கிறது. இப்படி படத்தில் சின்ன சின்ன குறைகள். இருப்பினும், ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோசும், டைரக்டர் சரண் அத்வைதனும் சேர்ந்து கருவேல மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்துக்குள் இரண்டு மணி நேரம் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள்.


Next Story