வீரையன்


வீரையன்
x
தினத்தந்தி 28 Nov 2017 5:28 PM GMT (Updated: 30 Nov 2017 5:20 PM GMT)

வீரையன் படத்திற்கான சினிமா விமர்சனம்.

கிராமத்தில் வசிக்கும் ஆதரவற்ற இளைஞர் இனிகோ பிரபாகர், நண்பர்களுடன் குடி, அடிதடி என்று ஊதாரியாக திரிகிறார். அதே ஊரில் இருக்கும் நரேன் தனது மகனை பள்ளியில் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். ஊர் கவுன்சிலர் மகளுக்கும், கார் டிரைவருக்கும் காதல் ஏற்பட்டு ஊரை விட்டு ஓட முடிவு செய்கிறார்கள்.

ஆனால், இனிகோ பிரபாகரால் அது தடைபடுகிறது. நரேன் மகன்தான் தனது மகளுடன் சுற்றுவதாக வேல ராமமூர்த்தி தவறாக கருதி பள்ளியில் இருந்து அவரை வெளியேற்ற வைக்கிறார். இதை நரேனுக்கு தெரியாமல், அவரது மகன் மறைத்து விரக்தியோடு சுற்றுகிறார். இனிகோ பிரபாகர் கவுன்சிலரிடம், டிரைவர்தான் காதலர் என்று போட்டு கொடுக்கிறார்.

இதனால் கவுன்சிலர் மகள் தூக்கில் தொங்குகிறார். டிரைவரின் மனநலம் பாதிக்கப்படுகிறது. நரேன் கனவு எப்படி நிறைவேறுகிறது, இதற்காக இனிகோ பிராபகர் செய்த தியாகம் என்ன? என்பது மீதி கதை.

இனிகோ பிரபாகர் கிராமத்து இளைஞராக துறுதுறுவென வருகிறார். நரேன் மகனை படிக்க வைக்க- பணம் புரட்ட கஷ்டப்படும் காட்சிகளில், கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். கிளைமாக்சில் தேர்ந்த நடிப்பில் மனதில் நிற்கிறார். ஷைனி காதல் காட்சிகளில் கவர்கிறார். மகனை படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வர துடிக்கும் லட்சிய தந்தையாக நரேன் வருகிறார்.

மகன் பள்ளியில் படிக்கவில்லை என்றதும் நொறுங்கிப்போவது, தன்னால் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனிகோ பிரபாகர் உதவியை நினைத்து நெகிழ்வது என்று கதாபாத்திரமாக அழுத்தமாய் பதிகிறார். வேல ராமமூர்த்தி, அவரது மகள், டிரைவர், திருநங்கையாக வரும் பிரீத்திஷா ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். கிராமத்து காதல், குடும்ப உறவுகள் பின்னணியில் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார், இயக்குனர் பரீத்.


Next Story