கொடி வீரன்


கொடி வீரன்
x
தினத்தந்தி 9 Dec 2017 12:19 AM GMT (Updated: 9 Dec 2017 12:18 AM GMT)

கொடி வீரன், அண்ணன்-தங்கை பாசம் படத்தின் சினிமா விமர்சனம்

கதையின் கரு:  “அநியாயங்களை தட்டிக் கேட்க அந்த கண்ணன் வராத இடத்தில் கூட, எங்க அண்ணன் வந்து நிற்பான்” என்று நம்புகிற ஒரு தங்கையையும், அவளுடைய பாசக்கார அண்ணனையும் பற்றிய கதை.

ஒரு கிராமத்து கோவிலின் சாமியாடி, சசிகுமார். திருவிழாவில் சாமியாடி, பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கிறார். ஊர் ஜனங்கள் அனைவருக்கும் அருள்வாக்கு சொல்லும் அவரிடம், ஒரே தங்கை சனுஷாவுக்கும் அருள்வாக்கு சொல்லும்படி கேட்கிறார்கள். “உனக்கு திருமணம் ஆகும். ஆனால், அதில் ஒரு சிக்கல் வந்து சேரும்” என்று தங்கை சனுஷாவுக்கு அருள்வாக்கு சொல்கிறார், சசிகுமார்.

அதுபற்றி தங்கை சனுஷா கவலைப்படவில்லை என்றாலும், அவள் மீது உயிரை வைத்திருக்கும் அண்ணன் சசிகுமார் கவலைப்படுகிறார். நேர்மையான ஆர்.டி.ஓ. விதார்த்துக்கு சனுஷாவை மணமுடித்துக் கொடுக்கிறார், சசிகுமார். விதார்த்தின் உயிருக்கு குறி வைக்கிறார், அந்த ஊரின் ரவுடி பசுபதி. அவரிடம் இருந்து விதார்த்தை சசிகுமார் எப்படி காப்பாற்றுகிறார்? என்பது உணர்ச்சிகரமான மீதி கதை.

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் சசிகுமாரின் தாய், கணவரின் கொடுமை தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது போல், ஒரு கனத்த துயரத்துடன் படம் ஆரம்பிக்கிறது. உயிர் பிரிவதற்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. தங்கையை பாசமூட்டி வளர்த்து ஆளாக்குகிறார், சசிகுமார்.

அந்த தங்கைக்கு மாப்பிள்ளை தேடும்போது, வில்லன்களுக்கு மேல் வில்லன்களாக நான்கு வில்லன்கள் குறுக்கே வருகிறார்கள். அவர்களில் ஒரு வில்லனின் தங்கை மகிமா நம்பியார் மீது சசிகுமார் காதல்வசப்படுகிறார். அவருடைய நல்ல குணங்களைப் பார்த்து மகிமா நம்பியாரும் காதல்வசப்படுகிறார். தங்கை மீது அண்ணன் கொண்ட அபரிமிதமான பாசமும், அதன் விளைவாக சசிகுமார் சந்திக்கும் மோதல்களும் உயிரோட்டமாக இருப்பதால், திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

சசிகுமார் காதல் காட்சிகளை விட, தங்கை மீது பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், வில்லன்களுடன் மோதுகிற சண்டை காட்சிகளிலும் கொடி வீரனாக நிமிர்ந்து நிற்கிறார். நண்பர் பாலசரவணனுடன் சேர்ந்து ‘காமெடி’ செய்யும் காட்சிகளில், கலகலப்பூட்டுகிறார். பசுபதியின் மிரட்டலுக்கு பயந்து மைத்துனர் விதார்த்தின் உயிரை காப்பாற்ற அவரை பின்தொடர்கிற காட்சியிலும், எரியும் நெருப்புக்குள் புகுந்து தங்கை சனுஷாவையும், அவருடைய கணவர் விதார்த்தையும் மீட்டு கொண்டு வரும் காட்சியிலும், ‘சூப்பர் ஹீரோ’வாக சசிகுமார் உயர்ந்து நிற்கிறார்.

மகிமா நம்பியார், கிராமத்து பெண்ணாக மனதில் பதிகிறார். அண்ணன் பசுபதிக்காக தலைமுடியை மொட்டையடித்துக் கொள்கிற பூர்ணா நிறைய எதிர்பார்க்க வைக்கிறார். அவர் வில்லியாக கண்களை உருட்டுவது, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அழகான தங்கையாக சனுஷா. படம் பார்த்து விட்டு வெளியே வந்த பிறகும் இவருடைய சிரித்த முகம் கண்ணுக்குள் நிற்கிறது.

வழக்கமான நண்பர் கதாபாத்திரம் என்றாலும், பாலசரவணன் வசன உச்சரிப்பிலேயே சிரிக்க வைக்கிறார். ஆர்.டி.ஓ.வாக விதார்த், வழக்கறிஞராக பிரேம் ஆகிய இருவரும் ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகிறார்கள். நான்கு வில்லன்கள் என்றாலும், பதற வைப்பவர், பசுபதிதான். “முதலில் பதற்றப்பட வைப்பேன். அப்புறம் பயப்பட வைப்பேன். அடுத்து ஒரேயடியாக தூக்கி விடுவேன்” என்று சசிகுமாரை பயமுறுத்துகிற மிரட்டலான வில்லன், பசுபதி.

என்.ஆர்.ரகுந்தன் இசையில், பாடல்கள் மென்மையான ராகங்கள். பின்னணி இசை, கதையோட்டத்துக்கு வேகம் சேர்த்து இருக்கிறது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் கோவில் திருவிழா காட்சிகள், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
அண்ணன்-தங்கை பாசத்தை கருவாக கொண்ட படங்கள் நிறைய வந்திருந்தாலும், கதை சொன்ன விதத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார், டைரக்டர் முத்தையா. படத்தின் ஆரம்ப காட்சியே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. வெட்டு-குத்து காட்சிகள் அதிகம் என்றாலும், அதையே குடும்ப பின்னணியில் காட்சிப்படுத்தியிருப்பதால் கவனம் ஈர்க்கிறார், டைரக்டர் முத்தையா.

Next Story